அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 2018ஆம் ஆண்டுக்கான அதிவேக பாடசாலை வீரர்களைத் தெரிவு செய்கின்ற 100 மீற்றர் ஓட்ட இறுதிப் போட்டிகள் 5 வயதுப் பிரிவுகளின் கீழ் நேற்று (02) நடைபெற்றன.
இதில் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ஹென்னத்தோட்டை வித்யாவர்தன மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அயேஷ் மிஹிரங்க (11.26 செக்.), 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பொல்கஹவெல அல் – இர்பான் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரஸ்னி அஹமட் (11.16 செக்.) ஆகியோர் ஆண்கள் பிரிவில் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.
பாடசாலைகள் மெய்வல்லுனர் இரண்டாம் நாளில் மேலும் 11 சாதனைகள் முறியடிப்பு
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் …
இதேநேரம், 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிலாபம் விஜய கடுபொத மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஷசினி பாக்யா தெவ்மினி (13.88 செக்.), 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட தெஹிவளை எலீடியா சர்வதேசப் பாடசாலை மாணவி தினாரா பண்டார தாலா (12.65 செக்.), 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பென்தர காமினி மத்திய கல்லூரி மாணவி செல்ஸி மெலனி பென்தரகே (12.27 செக்.) ஆகியோர் புதிய போட்டிச் சாதனைகளை படைத்தனர்.
இதுஇவ்வாறிருக்க, 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம் பொல்கஹவெல அல்–இர்பான் மத்திய கல்லூரி சார்பாக போட்டியிட்ட எம்.ஆர் ரஸ்னி அஹமட், முதற்தடவையாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியை 11.16 செக்கன்களில் நிறைவுசெய்து, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதலாவது பதக்கத்தையும் அவர் தனதாக்கிக் கொண்டார்.
கடந்த வருடம் முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற ரஸ்னி, குறித்த போட்டிப் பிரிவில் அண்மைக்காலமாக வலய, மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து வந்தார்.
எனினும், தேசிய மட்டப் போட்டிகளில் இதுவரை காலமும் எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யாத அவர், கடந்த மாதம் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றரை 11.68 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
Photos : All Island School Games Athletic Championship | Day 2
Photos of All Island School Games Athletic Championship…
இந்த நிலையில், இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் முதல் நாளன்று நடைபெற்ற 100 மீற்றர் தகுதிகாண் போட்டியில் (11.44 செக்.) இரண்டாவது இடத்தையும், அதே தினத்தன்று மாலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் (11.39 செக்.) இரண்டாவது இடத்தையும் பெற்ற ரஸ்னி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தார்.
இதனையடுத்து நேற்று (02) காலை நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றரில் பங்குகொண்ட ரஸ்னி அஹமட், முன்னணி பாடசாலை வீரர்களுக்கெல்லாம் பலத்த போட்டியைக் கொடுத்து, கடைசி 10 மீற்றர் வரை முன்னிலை பெற்று முதல் இடத்தைப் பெற்று அசத்தினார்.
இதேவேளை, போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு ரஸ்னி அஹமட் வழங்கிய விசேட செவ்வியில்,
”அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக வெற்றி பெறக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, எனது பாடசாலையான அல்– இர்பான் மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எனது விளையாட்டுத்துறை ஆசிரியரான விஜேதுங்க ஹெட்டியாரச்சி அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் சிறுவயது முதல் இன்றுவரை படிப்பைப் போல மெய்வல்லுனர் துறையிலும் என்னை ஆர்வத்துடன் பங்கேற்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற எனது பெற்றோரையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அத்துடன், என்னை இங்கு அழைத்து வந்து, எனது விளையாட்டுத்துறை வாழ்க்கைக்கு என்றும் துணையாக இருக்கின்ற எனது தயாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்வதற்கும், சர்வதேச மட்டப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்பதற்கும் விரும்புவதாக இதன்போது அவர் தெரிவித்தார்.
தரம் 6 இல் இருந்து பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுவந்த ரஸ்னி அஹமட்டின் திறமையை இனங்கண்ட அவருடைய பெற்றோர், அவருக்கான பயிற்சிகளை வழங்கி இன்று தேசிய மட்டத்தில் பேசப்படுகின்ற ஒரு இளம் வீரராக அவரை மாற்றமடையச் செய்துள்ளனர்.
அதேபோல, விளையாட்டைப் போல கல்வியிலும் சிறந்து விளங்குகின்ற ரஸ்னி அஹமட், தரம் 6 மற்றும் தரம் 7இல் ஒலிம்பியாட் மற்றும் கணிதப் போட்டிகளில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். அத்துடன், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 154 புள்ளிகளைப் பெற்று 3 புள்ளிகளால் சித்தியடையும் வாய்ப்பை தவறிவிட்டார். ஆனாலும், பாடசாலையில் எப்போதும் முதலாவது மற்றும் இரண்டாவது மாணவனாக வருகின்ற ரஸ்னி அஹமட், எதிர்வரும் காலங்களில் மெய்வல்லுனர் அரங்கிலும் ஒரு நட்சத்திர வீரராக முன்வரவேண்டும் என்பதே அவருடைய பெற்றோர்களது எதிர்பார்ப்பாகும்.
அதுமாத்திரமின்றி, வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பொல்கஹவெல தேர்தல் தொகுதியில் உள்ள 750 மாணவர்களைக் கொண்ட ஒரு சிறிய பாடசாலையான அல் – இர்பான் மத்திய கல்லூரிக்கு முதற்தடவையாக அகில இலங்கை மட்டத்தில் வெற்றியொன்றைப் பெற்றுக்கொடுத்த வீரராகவும் ரஸ்னி அஹமட் வரலாற்றில் இடம்பிடித்தார்.
விளையாட்டை மேற்கொள்வதற்கு எந்தவொரு அடிப்படை வசதியும், குறைந்தபட்சம் ஒரு மைதானம், ஏன் விளையாட்டுத்துறை ஆசிரியரோ அல்லது பயிற்சியாளரோ இல்லாத ஒரு சாதாரண பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இன்று தேசிய மட்டத்தில் போட்டியிட்ட ரஸ்னி அஹமட், அதில் வெற்றி பெற்று சாதனையும் படைத்துள்ளார். இவருடைய இந்த வெற்றிக்கு அவருடைய பெற்றோரும், விஜேதுங்க ஹெட்டியாரச்சி ஆசிரியரும் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கி இருப்பதனையும் ஞாபகப்படுத்த வேண்டும்.
Photos : All Island School Games Athletic Championship – Day 1
ThePapare.com | Waruna Lakmal | 01/10/2018 Editing and re-using…
அதுமாத்திரமின்றி, ரஸ்னி அஹமட்டுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த புனித பேதுரு கல்லூரி மாணவன் ஹிரூஷ ஹஷேன், இம்முறை சேர் ஜோர்ன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 100, 200 மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
தென் மாகாணம், காலி மாவட்டம், பலப்பிட்டிய ரேவதி மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியை மேற்கொண்டு மெய்வல்லுனர் துறையில் சிறுவயது முதல் திறமைகளை வெளிப்படுத்திய குறித்த மாணவனுக்கு, கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்றான பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு கிட்டியது.
எனவே இன்று அவர், குறித்த பாடசாலையில் கல்வியை மாத்திரமல்லாது ஏனைய அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொண்டு போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று அப்பாடசாலைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்து வருகின்றார்.
இன்று கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகள் அனைத்து வகையான விளையாட்டுகளிலும் பிரபல்யம் அடைவதற்கு இவ்வாறு பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றவுடன் அந்தந்த பாடசாலைகளில் இணைத்துக் கொள்வது வழக்கமான விடயம்.
ஆனால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கு கொழும்பில் உள்ள முன்னணி தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இவ்வாறான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதன்காரணமாக என்னவோ குறித்த வீரர்கள் தேசிய மட்டத்தில் பெற்ற வெற்றிகளுடன் தமது விளையாட்டுக்கு பிரியாவிடை கொடுத்து விடுகின்றனர்.
ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் பிரகாசித்த ஹார்ட்லி, மகாஜனா வீரர்கள்
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் …
உண்மையில் ரஸ்னி அஹமட் போன்ற பல பாடசாலை வீரர்கள் எம் மத்தியில் உள்ளனர். அவ்வாறான வீரர்களுக்கும் உரிய வசதி வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தால் தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கும் இலங்கையின் தேசிய அணிகளில் இடம்பெற்று சர்வதேச வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும். இதற்கு அரசியல் தலைமைகள் மாத்திரமல்லாது, கல்வித்துறையில், விளையாட்டுத்துறையில், வியாபாரத்துறையில் முன்னிலை உள்ளவர்கள் எதிர்காலத்தில் அதிக கரிசணை செலுத்த வேண்டும்.
எனவே, இவ்வாறு மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள பெரிதும் பேசப்படாத ஒரு பாடசாலையில் இருந்து தேசிய மட்டத்தில் வெற்றியொன்றைப் பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்த ரஸ்னி அஹமட்டின் திறமைகளை மேலும் ஊக்கப்படுத்தி, அவருடைய விளையாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், சமூகமும் உரிய நடவடிக்கை எடுத்தால், நிச்சயம் இலங்கையின் மெய்வல்லுனர் துறை அரங்கில் மற்றுமொரு நட்சத்திர வீரர் ஒருவரை உருவாக்க முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…