ஆப்கான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளரான ரஷீட் கான் அயர்லாந்திற்கு எதிரான T20I தொடர் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
>>மகளிர் முக்கோண தொடரில் ஆடும் இலங்கை U19 கிரிக்கெட் அணி<<
முதுகு உபாதை ஒன்றுக்காக சத்திர சிகிச்சை மேற்கொண்டிருந்த ரஷீட் கான் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கவில்லை.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியானது தற்போது மூன்று வகை கிரிக்கெட் தொடர்களிலும் அயர்லாந்துடன் ஆடி வருகின்றது. இந்த தொடர்களில் டெஸ்ட் தொடரினை அயர்லாந்து 1-0 என கைப்பற்றியிருக்க, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையில் ஒருநாள் தொடரிலும் அயர்லாந்து 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (12) நடைபெறுகின்றது.
இதேவேளை ஒருநாள் தொடரின் பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் ஆப்கான் – அயர்லாந்து அணிகள் பங்கெடுக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்த தொடரிலேயே ரஷீட் கான் மீண்டும் ஆப்கான் அணிக்காக ஆடுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
ரஷீட் கான் ஆப்கான் அணிக்காக ஆடும் விடயத்தினை அவரே வீடியோ காணொளி வாயிலாக உறுதிப்படுத்தியிருப்பதோடு, தான் மீண்டும் தாயக அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆட அதிக எதிர்பார்ப்புடன் தயாராகி வருவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆப்கான் – அயர்லாந்து அணிகள் பங்கெடுக்கும் மூன்று T20I போட்டிகளும் (மார்ச் 15, 17 மற்றும 18) ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் இடம்பெறவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<