BWF இளையோர் பெட்மின்டன் சம்பியன்ஷிப்பில் ரந்துஸ்க சசிந்து ஐந்தாவது சுற்றுக்கு தெரிவு

379
Ranthushka Sasindu

இலங்கையின் கனிஷ்ட பெட்மின்டன் வீரர் ரந்துஸ்க சசிந்து, நோர்வே நாட்டு பெட்மின்டன் வீரர் மார்கஸ் பாத்தை வெற்றி கொண்டு BWF உலக இளையோர் பெட்மின்டன் சம்பியன்ஷிப் தொடரில் ஐந்தாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.

BWF உலக இளையோர் பெட்மின்டன் சம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது ஸ்பெயினின் பில்பாவோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இளையோருக்கான  கலப்பு பிரிவு, ஒற்றையர் பிரிவு ஆகிய இரண்டு வகையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள இலங்கை வீரர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் உலகின் தலைசிறந்த இளம் பெட்மின்டன் வீரர்களுடன் போட்டியிடுகின்றமை முக்கிய விடயமாகும்.  

17 பேர் கொண்ட பெட்மின்டன் ஆடவர் போட்டிக் குழுவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வீரர்களான ரந்துஸ்க சசிந்து, மதுக்க துலஞ்சன மற்றும் செவ்மின குணதிலக்க ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதில், மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய பாங் ஹாசிம் உடனான முதல் போட்டியில் 21-12 மற்றும் 21-17 செட் கணக்கில் தோல்வியுற்றதால் செவ்மின குணதிலக்க இந்த சம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, மதுக்க துலஞ்சன முதல் சுற்றுப் போட்டியில் ப்ருனோ பரரோ டேசாவுடனான போட்டில் வெற்றி பெற்றார். எனினும் பின்னர் இடம்பெற்ற ஸ்கொட்லாந்து வீரர் கிறிஸ்டோபர் க்ரிம்லிக்கு எதிரான போட்டியில் 21-12, 21-13 என்ற கணக்கில் அவர் தோல்வியை தழுவினார்.

எனினும் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய கொழும்பு நாலந்த கல்லூரியை சேர்ந்த ரந்துஸ்க சசிந்து, தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் றெ்றி பெற்று தற்பொழுது ஐந்தாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளார். தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் சைனிஷ் தைபேயை பிரதிநிதித்துவப்படுத்திய சென் சின் யோன்னை 21-8, 21-18 என்ற செட் கணக்கிலும், அவரை தொடர்ந்து நோர்வே நாட்டு வீரர் மார்கஸ் பாத்தையும் தோற்கடித்து சசிந்து ஐந்தாவது சுற்றுக்கு தெரிவானார்.

இந்நிலையில் மேலும் ஒரு வெற்றியினை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் BWF உலக இளையோர் பெட்மின்டன் சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதி போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு இவருக்குக் காணப்படுகிறது.

இன்று பின்னேரம் நடைபெறவிருக்கும் ஐந்தாவது சுற்றுப் போட்டியில் விளையாடி வெற்றி பெறுவதற்கான எதிர்பார்ப்புடன் ரந்துஸ்க சசிந்து இருக்கின்றார்.

அதே நேரத்தில் மகளிர் பிரிவில் சாதகமான பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட ஒரே வீராங்கனையாக புத்மி கலகமகே காணப்படுகிறார். மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றியீட்டி இரண்டாம் சுற்று வரை முன்னேறிய அவர் இத்தாலி நாட்டின் சில்வியா கரினோவுடனான போட்டியை சமநிலைப் படுத்தினார். அதன் பின்னர் ஜப்பான் வீராங்கனை அசுக்கா தக்காஷியுடனான போட்டியில் தோல்வியிற்றார்.

எனினும் ஏனைய மகளிர் வீராங்கனைகளான இனுரி குறுப்பு மற்றும் சத்துமாரி விஜேரட்ன ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்கள்.