அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ள இலங்கை கால்பந்து சம்மேளன தலைவருக்கான தேர்தலில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ மீண்டுமொருமுறை போட்டியிட தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கால்பந்து இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே, கால்பந்து சம்மேளனத்தின் தற்போதைய தகவல் தொடர்பாடல் மற்றும் நிதித் தலைவரான ரஞ்சித் ரொட்ரிகோ மேற்குறித்த தனது தீர்மானத்தை வெளியிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ”நாங்கள் எங்களுடைய நேரம் மற்றும் கடின உழைப்பால் இலங்கை கால்பந்து சம்மேளனத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டுசெல்லவே முயற்சி செய்கிறோம். நான் மறுபடியும் தலைவர் பதவிக்கு வருவேனா என்று கேட்கிறார்கள். ஆம், நான் மீண்டும் வருவேன். விளையாட்டு யாப்பு மாற்றப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளேன்” என்று தெரிவித்தார்.
ரொட்ரிகொ, கடந்த 2௦13ஆம் ஆண்டு முதல் 2௦15ஆம் ஆண்டு வரை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த வேளை, மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தார். இதன் காரணமாக அவரால் சரியான முறையில் சம்மேளன நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் இருந்தது.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில் ”என்னுடைய கடந்த தவணையில் 18 வழக்குகளுக்காக நீதிமன்றங்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் நேரம் வீணடிக்கப்பட்டது. எனவே என்னால் வேறு எதனையும் செய்ய முடியவில்லை. பொதுவாக எங்களுடைய இலக்குகள் நான்கு வருடங்களுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் அனுசரணையாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுடன் பணியாற்ற விருப்பப்படுவார்கள். ஜப்பான் கால்பந்து சம்மேளன அதிகாரிகள் இங்கு வந்திருந்த நேரத்தில், தற்போதைய முகாமைத்துவத்தில் மாற்றங்கள் ஏற்படுவது குறித்து தமது அதிருப்தியை தெரிவித்திருந்தார்கள்.
யாராவது போட்டியிட வேண்டுமென்றால் வந்து போட்டியிடலாம். என்னால் பலவந்தமாக இங்கு இருக்க முடியாது. நாம் அனைவரும் தொண்டர்களாகவே இங்கு இருக்கின்றோம். அதேவேளை, குறை நிறைகளையும் நாங்களே ஏற்க வேண்டும். தனிப்பட்ட வாழ்கையில் நாம் வெற்றியாளர்கள். இங்கும் எங்களுக்கு தோல்வியடைய தேவையில்லை. தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இருந்து இலங்கை கால்பந்து சம்மேளனத்தினை நாம் மீட்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
சட்ட போராட்டங்கள் தவிர்ந்த, கால்பந்து போட்டிகளிலும் ரஞ்சித் ரொட்ரிகோவின் இரண்டு வருட காலம் ருசிகரமாக இருக்கவில்லை. குறித்த காலப்பகுதியில் தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் போட்டிகளில் மாலைத்தீவுக்கு எதிரான போட்டியில் 1௦-௦ என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை அணி படுதோல்வியுற்றது. குறித்த போட்டியில் சில வீரர்கள் போட்டி நிர்ணய ஊழலில் ஈடுபட்டிருந்ததாகவும் இரண்டு வருடங்களுக்கு பின்னர் சில முறைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய செய்திகள் : தேசிய அணி வீரர்களின் சிகிச்சை தொடர்பில் கால்பந்து சம்மேளனத்தை சாடும் அமானுல்லா
2௦15ஆம் ஆண்டு பூட்டான் அணிக்கு எதிராக இடம்பெற்ற 2018ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளின் இரண்டு லெக் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதனால் தரவரிசையிலும் பின்னடைவு கண்டது. எனினும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளில் அதே பூட்டான் கால்பந்து அணியை 4-௦ என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தற்போதைய தலைவரான அனுர டி சில்வா மீண்டுமொரு முறை தேர்தலில் போட்டியிடுவது குறித்து எவ்விதமான தீர்மானங்களையும் எடுத்திருக்கவில்லை.
அங்கு அவர் உரையாற்றுகையில், ”சிலவேளை நாம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். எனினும், நாம் தேர்தலை எதிர்நோக்க வேண்டும். எனக்கான தவணைக் காலம் அடுத்துவரும் மே அல்லது ஜூன் மாதத்தில் நிறைவு பெறவுள்ளது. மறுபடியும் போட்டியிடுவது குறித்து நான் யோசிக்கவில்லை.
எவ்வாறாயினும் இலங்கை கால்பந்து விளையாட்டை நாம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம். அதனால் உள்ளூர் மட்டங்களில் திறமைகளை வெளியில் கொண்டுவருவதற்கே நாங்கள் முடிந்த எல்லாவற்றையும் செய்து வருகிறோம்” என்று அனுர டி சில்வா தெரிவித்தார்.