இலங்கை கிரிக்கெட்டுக்காக பாரிய சேவையாற்றிய மற்றுமொரு நட்சத்திர ஜாம்பவானும், இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளருமான ரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
ஆர்.பிரேதாஸ மைதானத்தில் ஆறுதல் வெற்றியை தேடும் இலங்கை
இந்தப் போட்டியுடன் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக, ரங்கன ஹேரத் கடிதமொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிராக காலியில் ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஹேரத், அதே மைதானத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவுக்கு கொண்டு வரவுள்ளார்.
40 வயதான ஹேரத், அண்மைக்காலமாக தனது முழங்காலில் ஏற்பட்ட உபாதைக்காக பல தடவைகள் அறுவை சிகிச்சை செய்து வந்தார். இதன் காரணமாக இலங்கை அணி பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடி வந்த அவர், இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்தார்.
எனினும், இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த ஹேரத், குறைந்தது 2 போட்டிகளில் இலங்கைக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முடிவை மாற்றி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு விடைகொடுக்க அவர் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஹேரத் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், தான் காலி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறத் தீர்மானித்திருப்பதாகவும், தனது முடிவை ஏற்றுக்கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, ஹேரத் விடுத்துள்ள இந்த கோரிக்கைக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்கின்றோம். அவருடைய ஓய்வு இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரிய இழப்பாகும். இதுவரை காலமும் இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இலங்கை கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய நடச்த்திர ஜாம்பவானான முத்தைய முரளிதரனும், 2010 ஆம் ஆண்டு இதே காலி மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியுடன் ஓய்வுபெற்றார்.
அதிலும் குறிப்பாக, காலி சர்வதேச மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் முதலாவது பந்துவீச்சாளர் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனாவார். இதில் முத்தையா முரளிதரன் காலியில் 111 விக்கெட்டுக்களையும், அஸ்கிரியவில் 117 விக்கெட்டுக்களையும், SSC மைதானத்தில் 166 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியருந்ததுமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
2023 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்துக்கான புதிய தகுதிகாண் சுற்று முறை அறிமுகம்
எனவே, காலி சர்வதேச மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சிறப்பைப் பெறுவதற்கு ரங்கன ஹேரத்துக்கு இன்னும் ஒரு விக்கெட்டே தேவைப்படுகின்றது. இந்த மைல்கல்லையும் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின் போது ஹேரத் சமப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, டெஸ்ட் அரங்கில் 430 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள ஹேரத், உலக டெஸ்ட் அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய 10 ஆவது வீரராகவும் இடம்பிடித்தார். அத்துடன், காலியில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேலும் 5 விக்கெட்டுக்களை அவர் கைப்பற்றினால், ரிச்சர்ட் ஹெட்லி (431), ஸ்டுவர்ட் பிரோட் (433), கபில் தேவ் (434) ஆகிய வீரர்களை முறியடித்து மற்றுமொரு சாதனையும் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, இலங்கைக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹேரத், 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரது உபாதை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை அணியில் அடிக்கடி வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிய ஹேரத், 2009 ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அதாவது தனது 31 ஆவது வயதில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது இடத்தை உறுதிப்படுத்தினார். அன்று முதல் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளராகவும் அவர் வலம் வந்தார்.
அதிலும் குறிப்பாக, கடந்த வருடம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் அபார பந்துவீச்சினால் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உலகின் முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்ததுடன், இலங்கை அணி சார்பாக முத்தையா முரளிதரனுக்குப் பிறகு 400 டெஸ்ட் விக்கெட்டுக்கள் மைல்கல்லை எட்டிய 2 ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு பின்னர் இலங்கை அணியின் துரும்புச் சீட்டாக விளங்கிய ரங்கன ஹேரத் வரலாற்றில் பதிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேரத்தின் இந்த முடிவு இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் சுழல் பந்துவீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்த முத்தையா முரளிதரனின் ஓய்வுக்கு பின்னர் இவர் தான் சுழல் பந்துவீச்சில் ஜொலித்தார். கடந்த 8 வருடங்களில் இலங்கை அணி பங்கேற்ற 81 டெஸ்ட் போட்டிகளில் 70 இல் களமிறங்கி சுமார் 359 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஹேரத்தின் இந்த முடிவு இலங்கை ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<