பொதுவாக எந்தவொரு விளையாட்டு வீரராக இருந்தாலும் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும்.
அதிலும் குறிப்பாக, தனது சொந்த சாதனைகளை ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு நாட்டுக்கு கௌரவத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கனவுடன் உள்ள வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்த வரிசையில், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனை வீரராக வலம்வந்தவர் தான் ரங்கன ஹேரத்.
முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணியின் முக்கிய துரும்புச் சீட்டாக விளங்கியவர் ரங்கன ஹேரத். 2017இன் ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போதே உலகில் உள்ள இடது கை பந்து வீச்சாளர்கள் வரிசையில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஸீம் அக்ரமின் (414) சாதனையை முறியடித்தார்.
2014 T20 உலகக் கிண்ண அரையிறுதியில் என்ன நடந்தது?
இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் 170 இன்னிங்ஸ்களில் விளையாடி 433 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள ஹேரத் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் மத்தியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியதில் முரளிதரன், ஷேன் வோர்ன், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்து நான்காவதாக இடம்பிடித்தவர் ஹேரத்.
ரங்கன ஹேரத் 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் வெலிங்டனில் நடைபெற்ற போட்டியுடன் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அதேபோல, 2011ஆம் ஆண்டு டி-20 போட்டியில் அறிமுகமான அவர் 2016ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை 17 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரங்கன ஹேரத் 14ஆவது இலங்கை டெஸ்ட் தலைவராவார். அவர் தலைமையில் 05 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன் 2 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.
2018இல் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற 42 வயதான ஹேரத், ஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற சிறப்பை குறித்த போட்டியின் போது நிகழ்த்தியிருந்தார்.
இதேநேரம், முதற்தடவையாக கடந்த வருடம் இலங்கையின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் களமிறங்கி தனது அபார பந்துவீச்சின் மூலம் மீண்டும் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் ஹேரத்.
தமிழ் யூனியன் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத், கொழும்பு கிரிக்கெட் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் 71 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இறுதியாகக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரங்கன ஹேரத் 21 வயதில் இலங்கை அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். எனினும் 1999 முதல் 2009 வரையான காலப்பகுதியில் ஹேரத்துக்கு தொடர்ந்து இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மெதிவ்ஸின் உடற்தகுதி மாற்றத்துக்கான காரணம் என்ன?
எனினும், விடாமுயற்சி, தீவிர பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை தான் ரங்கன ஹேரத்தை மீண்டும் இலங்கை அணிக்குள் கொண்டு வந்தது.
இதன் பிரதிபலனாகத் தான் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளும் படைத்த அவர், பிற்காலத்தில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக செயற்பட்டு கிரிக்கெட் வாழ்க்கைக்கு வெற்றிகரமாக விடைகொடுத்தார்.
இந்த நிலையில், ThePapare.com இணையத்தளம் ரங்கன ஹேரத் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோருடன் பேஸ்புக் நேரலை (Live) மூலம் ஒரு பிரத்தியேக நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இந்த நேர்காணலில் இலங்கை கிரிக்கெட் அணிக்குள் மீண்டும் இடம்பிடித்தது எவ்வாறு? இலங்கை அணிக்காக விளையாடிய காலப்பகுதியில் சந்தித்த மறக்க முடியாத சம்பவம் என்பன பற்றி ரங்கன ஹேரத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,
”எனக்கு 21 வயதில் இலங்கை அணிக்காக விளையாட முடியுமால் எப்போதாவது ஒருநாள் என்னுடைய அனுபவம் இலங்கை அணிக்கு தேவைப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். நான் என்மீது நம்பிக்கை வைத்தேன். அதற்காக தொடர்ந்து பயிற்சிகள் எடுத்தேன்.
நான் 2000இல் அணியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் 2004இல் அணிக்குள் இடம்பெற்றேன். மீண்டும் 2005இல் நீக்கப்பட்டு 2008இல் மீண்டும் அணிக்குள் இடம்பிடித்தேன். எனவே அந்தக் காலப்பகுதியில் மிகவும் கஷ்டாக இருந்தது.
எனினும், தொடர்ந்து பயிற்சிகளை எடுத்து அணிக்குள் வரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இறுதியில் அதில் வெற்றி பெற்று 2009 பாகிஸ்தான் தொடரில் இருந்து தொடர்ச்சியாக இலங்கை அணிக்கு விளையாடினேன்.
குறிப்பாக நான் ஆரம்பத்தில் முவர்ஸ் கழகத்துக்காக விளையாடினேன். அங்கு எனக்கு சகல உதவிகளும் கிடைத்தது. அதுவும் எனது வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய விடயமாக உள்ளது.
2002 இல் இருந்து நான் இலங்கை ஏ அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தேன். அதன்மூலம் எனக்கு தேசிய அணியில் இடம்பிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
எனவே, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அப்போது இருந்த தேர்வாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Catch me if you can: முத்தையா முரளிதரன்
கடந்த 2009இல் மீண்டும் இலங்கை டெஸ்ட் அணிக்காக காலியில் நடைபெற்ற போட்டியில் ரங்கன ஹேரத் விளையாடியிருந்தார். இந்த நிலையில், தனது மீள்வருகை போட்டி குறித்து ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,
”அந்தத் தொடர் நடைபெறுகின்ற போது நான் இங்கிலாந்தில் நடைபெறுகின்ற லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடச் சென்றிருந்தேன். மதியம் 2.00 மணி இருக்கும் போது குமார் சங்கக்கார எனக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்திருந்தார்.
அப்போது முரளிதரன் உபாதைக்குள்ளாகியுள்ளதால் என்னை அணியில் அவருக்குப் பதிலாக இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக சங்கக்கார என்னிடம் தெரிவித்தார்.
அதேநேரம், எனது பந்துவீச்சு திறமைகள் இங்கிலாந்தில் எவ்வாறு உள்ளது? உடற்தகுதி எப்படி இருக்கின்றது? என சங்கக்கார கேட்டதுடன், உடனடியாக நாடு திரும்ப முடியமா? என்று கேட்டார்.
தலைவராகவும், பயிற்சியாளராகவும் சாதித்துக் காட்டிய மஹேல ஜயவர்தன
இலங்கை அணிக்காக மீண்டும் விளையாடுகின்ற அந்தப் பொன்னான வாய்ப்பை தட்டிக் கழிக்காமல் உடனே இங்கிலாந்தில் இருந்து இரண்டு நாட்களுக்குள் புறப்பட்டு வருவதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
அவ்வாறு சங்கக்காரவிடம் சொன்னாலும், எப்படி இரண்டு நாட்களுக்குள் டிக்கெட் எடுத்து நாட்டுக்கு வரமுடியும் என யோசிக்கத் தொடங்கினேன். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு நிறைய பேர் உதவி செய்தார்கள்.
இதன்படி, நாளை டெஸ்ட் போட்டி ஆரம்பமாகும் போது நான் அதற்கு முந்தைய நாள் இரவு 8.00 மணிக்கு காலியில் உள்ள லைட் ஹவுஸ் ஹோட்டலை வந்தடைந்தேன். உண்மையில் அந்தப் போட்டியில் எமக்கு வெற்றி கிடைத்தது”
எனவே, ஒரு தொலைபேசி அழைப்பு தான், எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்காமல் கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திய ரங்கன ஹேரத், கிரிக்கெட் உலகில் ஒரு சாதனை வீரராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அதிலும் குறிப்பாக, பொறுமை, விடாமுயற்சி, தீவிர பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை தான் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன என்றால் மிகையாகாது.
9 வருடங்களாக அணிக்குள் வருவதும் போவதுமாகவே இருந்தவர் தான் ரங்கன ஹேரத். அவருக்கான இடம் எதுவென்று அவருக்கே தெரியாது. ஆனால், கிரிக்கெட்டிலிருந்து விலகாமல், தன்னம்பிக்கையுடன் காத்திருந்தார். முரளிதரினின் ஓய்வு இவருக்கான இடத்தைத் திறந்தது.
ஆனால், முரளி சந்தித்திடாத நெருக்கடி அவருக்குக் காத்திருந்தது. ஒவ்வொரு சுற்றுப்பயணத்தின் போதும், ஒவ்வொரு தொடரின்போதும், ஒவ்வொரு போட்டியின்போதும், முரளியின் இடத்தை நிரப்புவாரா ? அவரைப் போல இலங்கை அணிக்காக விக்கெட்டுக்களை எடுப்பாரா? என்ற கேள்வி துரத்திக்கொண்டே இருந்தது.
டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவரின் இடத்தை நிரப்புவது என்ன சாதாரண விடயமா? ஆனால், அந்த அசாத்திய சவாலை சமாளித்து கிரிக்கெட் உலகில் ஒரு சாதனையாளராக தனது பெயரை பொன் எழுத்துக்களால் பதிவுசெய்து விட்டு கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார் ரங்கன ஹேரத்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<