பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரானார் ரமீஸ் ராஜா

346
Ramiz Raja
@PCB

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) புதிய தலைவராக முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக ரமீஸ் ராஜா செயல்படவுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகக் குழுவின் சிறப்புக்கூட்டம் லாகூரில் உள்ள தேசிய உயர் செயல்திறன் மையத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 36ஆவது தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இடம்பெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட ரமீஸ் ராஜா மற்றும் அசாத் அலி கான் ஆகிய இருவரினதும் பெயர்களை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பரிந்துரை செய்திருந்தார்.

>> பாக். பயிற்சியாளர் மிஸ்பா, வக்கார் யூனிஸ் திடீர் இராஜினாமா

இதன்படி, இன்று இடம்பெற்ற தேர்தலில் வாக்கெடுப்பின்றி, ஏகமனதாக ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரமீஸ் ராஜா, தேசிய உயர் செயல்திறன் மையத்தில் வைத்து உரையாற்றுகையில்,

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்ந்து முன்னேறவும், உறுதியாகவும் இருக்க உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதே கலாசாரம், மனநிலை, அணுகுமுறை மற்றும் அணுகுமுறையை அறிமுகப்படுத்த உதவுவது தான் எனது முக்கிய குறிக்கோளாகும்.

>> T20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

ஒரு அமைப்பாக, நாம் அனைவரும் தேசிய அணியை முன்கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ஆதரவையும் வழங்க வேண்டும்.

வெளிப்படையாக, ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரராக, தற்போதைய கிரிக்கெட் வீரர்களின் நலனைப் பார்ப்பதுதான் நோக்கம். இந்த விளையாட்டு எப்போதுமே கிரிக்கெட் வீரர்களைப் பற்றித் தான் சிந்திக்கும்.

மேலும், அவர்கள் தங்கள் தாய் நிறுவனத்திடமிருந்து அதிக அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற வேண்டும்” என தெரிவித்தார்.

Watch – T20i World Cup க்கு இளம் அணியை அறிவித்த இலங்கை..! | T20 World Cup Sri Lanka Squad

இதுஇவ்வாறிருக்க, ரமீஸ் ராஜா இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைவர் பதவியை பொறுப்பேற்கவில்லை என்றாலும், T20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணித் தேர்வு மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோரின் திடீர் இராஜினாமா போன்ற விடயங்களில் முக்கிய அவதானம் செலுத்துவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தொடர்பாக சில கொள்கை ரீதியிலான முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<