ராஞ்சிக் கிண்ண தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர் மரணம்

207
Rajinder Goel

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராஜிந்தர் கோயல், தனக்கு நீண்ட காலமாக இருந்த நோய் ஒன்றின் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) தன்னுடைய 77 அகவையில் காலமானார்.

>> என்னை சிறு பையன் என நினைக்க வேண்டாம்: நசீம் ஷா

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளரான ராஜிந்தர் கோயல், இந்திய கிரிக்கெட் அணியினை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால், இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் தொடராக உள்ள ராஞ்சிக் கிண்ண முதல்தரக் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளராக அவர் 637 விக்கெட்டுக்களுடன் சாதனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

ராஞ்சி கிண்ண போட்டிகளுடன் சேர்த்து, மொத்தமாக 157 முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் 750 விக்கெட்டுக்கள் என்கிற மைல்கல்லினை அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில், கடந்த 1965ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரில் இலங்கை – இந்திய அணிகள் இடையில் நடைபெற்ற உத்தியோகபூர்மற்ற டெஸ்ட் போட்டி ஒன்றிலும் விளையாடியிருக்கும் ராஜிந்தர் கோயல், குறித்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். ஆனால், இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்ததோடு, இலங்கை கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் வெற்றி பெற்ற, ஒரே டெஸ்ட் போட்டியாகவும்    ராஜிந்தர் கோயல் விளையாடிய போட்டி காணப்படுகின்றது.  

தனது 43 வயது வரையில் (அதாவது 1985ஆம் ஆண்டு வரை) முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த ராஜிந்தர் கோயல், கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்டு வந்திருந்தார்.   

இதுதவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயரிய விருதுகளில் ஒன்றான சி.கே. நாயுடு விருதினை கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் வென்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் ராஜிந்தர் கோயல் இருப்பது குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை, ராஜிந்தர் கோயலின் மரணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்கது இரங்கல் செய்திகளைத் தெரிவித்திருக்கின்றனர். 

>> இந்திய வேகப் பந்துவீச்சு குழாத்தில் உள்ள மகிமை

இதில் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி, இந்தியாவின் கிரிக்கெட் சமூகம் உள்ளூர் போட்டிகளின் ஜாம்பவான்களில் ஒருவரினை இழந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதேநேரம், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் ராஜிந்தர் கோயலின் மரணத்திற்காக கவலை கொள்வதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<