IPL தொடரில் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது.
>> டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேறிய இலங்கை
ராஜஸ்தான் அணி முதலாவது குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டண்ஸ் அணிக்கெதிராக தோல்வியடைந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடியதுடன், பெங்களூர் அணி எலிமினேட்டர் போட்டியில் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.
போட்டியை பொருத்தவரை முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணியை பொருத்தவரை விராட் கோஹ்லி ஏமாற்றமளித்து ஆட்டமிழந்ததுடன் பெப் டு பிளெசிஸ், கிளேன் மெக்ஸ்வேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் எதிர்பார்க்கப்பட்ட அளவில் பிரகாசிக்கவில்லை.
எனினும் எலிமினேட்டர் போட்டியில் சதம் கடந்த ரஜட் பட்டிதார் இந்தப்போட்டியில் 42 பந்துகளுக்கு 58 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்ததுடன், பெப் டு பிளெசிஸ் 25 ஓட்டங்களையும், கிளேன் மெக்ஸ்வேல் 13 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஒபெட் மெக்கோய் ஆகியோர் அற்புதமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடிக்க ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
ஜோஸ் பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 106 (60) ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க சஞ்சு சம்சன் 23 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பெங்களூர் அணியை பொருத்தவரை ஜோஸ் ஹெஷல்வூட் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, வனிந்து ஹஸரங்க ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார். இதில் வனிந்து ஹஸரங்க சஞ்சு சம்சனை எதிர்கொண்டு 7 T20 போட்டிகளில் பந்துவீசியுள்ளதுடன், 6 ஆவது முறையாக அவருடைய விக்கெட்டினை கைப்பற்றினார்.
அதேநேரம் ஜோஸ் பட்லர் இந்த ஆண்டு IPL தொடரில் 4 ஆவது சதத்தை பதிவுசெய்து, ஒரு பருவகாலத்தில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய சத எண்ணிக்கையை சமப்படுத்தினார். இதற்கு முதல் விராட் கோஹ்லி கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக 4 சதங்களை விளாசியிருந்தார்.
இதேவேளை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றதன் பின்னர் முதன்முறையாக IPL இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இம்முறை இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி எதிர்வரும் 29 ஆம் திகதி குஜராத் டைட்டண்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார செயற்பட்டுவருவதுடன், லசித் மாலிங்க வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<