13 வருட இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் வரலாற்றில் நேற்று (27) நடைபெற்ற கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் இலவன் பஞ்சாப் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் 12 வருடங்களின் பின்னர் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி முதல் 2020ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் 9ஆவது லீக் போட்டியானது ஷார்ஜா ஷேக் ஷெயிட் மைதானத்தில் நேற்று குறித்த இரு அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
>> ஒரே தினத்தில் முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுக்கும் இரு பாகிஸ்தான் வீரர்கள்
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கு வழங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலின் அதிரடி ஆட்டத்துடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களை குவித்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் வெறும் 50 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகள் உள்ளடங்களாக 106 ஓட்டங்களை குவித்து, 9 வருட ஐ.பி.எல் வரலாற்றில் தனது கன்னி சதத்தையும் பதிவு செய்தார். மறுமுனையில் ஆரம்ப விக்கெட்டுக்காக நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் கே.எல் ராகுல் 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதில் முதலாவது விக்கெட்டுக்காக 183 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெறப்பட்டது. இவ்இணைப்பாட்டமானது ஐ.பி.எல் வரலாற்றில் பெறப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகும்.
பின்னர், 224 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ஜொஸ் பட்லர் வெறும் 4 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். ஆனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் கடந்த போட்டியிலும் அதிரடி காட்டிய சஞ்சு சம்சன் மீண்டும் அதிரடி காட்டினார்.
>> அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் கன்னி டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டது
இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக அரைச்சதம் கடந்து ஆட்டமிழந்தார். பின்னர் தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சம்சன் 42 பந்துகளில் 85 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் வெறும் 28 பந்துகளில் 74 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் பஞ்சாப் அணியிடம் வெற்றிவாய்ப்பு அதிகமாக காணப்பட்டாலும், 18ஆவது ஓவர் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
குறித்த ஓவரை வேகப்பந்துவீச்சாளர் சில்டொன் கொட்ரெல் வீச துடுப்பெடுத்தாடிய ராகுல் திவாடியா ஐந்தாவது பந்து தவிர்ந்த ஏனைய 5 பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை தெறிக்கவிட குறித்த ஓவரில் மாத்திரம் 30 ஓட்டங்களை பெறப்பட்டது. இறுதியில் ஜெப்ரா ஆர்ச்சரும் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை தெறிக்கவிட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகளினால் இமாலய இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
இவ்வெற்றியின் மூலம் இந்தியன் ப்ரீமியர் லீக் வரலாற்றில் அதிக ஓட்டங்களை துரத்தியடித்த அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12 வருடங்களின் பின்னர் தங்களது சாதனையையே முறியடித்தது. இதற்கு முன்னர் ஐ.பி.எல் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி 215 என்ற டெக்கான் சார்ஜஸின் இமாலய இலக்கை துரத்தியடித்தமை சாதனையாக இருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு டெல்லி டெயார்டெவில்ஸ் அணி குஜராத் லயன்ஸின் 209 என்ற வெற்றியிலக்கை துரத்தியடித்தமை அடுத்த சாதனையாக காணப்படுகிறது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<