இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசி அவுஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் வெற்றியை நெருங்கமுடியாமல் போனது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி, டக்வத் லூவிஸ் முறைப்படி 4 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி இன்று (23) மெல்பேர்னில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமில் இரு புதுமுக வீரர்கள்
இதன்படி, முதலில் துடுப்பாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு அணித் தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ஆரோன் பின்ஞ்ச் முதல் ஓவரிலேயே ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
டார்சி ஷோர்ட் 14 ஒட்டங்களையும், கிறிஸ் லைன் 13 ஓட்டங்கள், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 4, கிளென் மெக்ஸ்வேல் 19 ஓட்டங்கள் என ஆட்டமிழந்த நிலையில், இளம் வீரரான பென் மெக்டெர்மட் பொறுப்புடன் துடுப்பாடி 32 ஓட்டங்களைப் பெற்று அணியை சரிவிலிருந்து மீட்டார். அதேசமயம் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை.
எனினும், தொடர்ந்து துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, 19 ஆவது ஓவரின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி 19 ஓவருடன் இடை நிறுத்தப்பட்டது.
இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் மற்றும் கலீல் அஹமட் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து மழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் டக்வத் லூவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 11 ஓவர்களுக்கு 90 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்தும் போட்டியில் மழை குறுக்கிட்டதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக 5 ஓவருக்கு 46 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அப்போதும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இந்தியா – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை சிட்னியில் நடைபெறவுள்ளறது. இதில் இந்தியா தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா – 132/7 (19) – பென் மெக்டெர்மட் 32*, கிளென் மெக்ஸ்வெல் 19, கோல்டர் நைல் 18, புவனேஷ்வர் குமார் 20/2, கலீல் அஹமட் 39/2
போட்டி முடிவு – மழை காரணாமாக போட்டி கைவிடப்பட்டது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<