ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், T20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் இயக்குநராக குமார் சங்கக்கார தொடர்ந்து செயற்படுவார் என கூறியுள்ள அந்த அணி நிர்வாகம், இருவரும் இணைந்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வழிநடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு அணியிலும் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐபிஎல் ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் அடுத்த சீசனுக்கு முன் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்கக்கார விலக உள்ளதாகவும், ராகுல் டிராவிட் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வாய்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் நேற்று (06) உத்தியோகபூர்வமாக உறுதிசெய்துள்ளது.
கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தான் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கப்பதற்கான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், ‘கடந்த பல ஆண்டுகளாக நான் ‘ஹோம்’ என்று அழைக்கப்பட்ட உரிமைக்கு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன். T20 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு, நான் மற்றொரு சவாலை எதிர்கொள்ள இதுவே சிறந்த நேரம் என்று நினைக்கிறேன், அதைச் செய்வதற்கு ராயல்ஸ்தான் சரியான இடம். மனோஜ், ஜேக், குமார் சங்கக்கார மற்றும் குழுவினரிடமிருந்து நிறைய கடின உழைப்பு மற்றும் ஆலோசனைகள் கடந்த சில ஆண்டுகளாக உரிமையை உருவாக்கியது. எங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் வளங்களின் அடிப்படையில் இந்த அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இது ஒரு உற்சாகமான வாய்ப்பாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இதுகுறித்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் தங்கள் எக்ஸ் பக்கத்தில், ‘T20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்தியாவின் புகழ்பெற்ற பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ராஜஸ்தான் றோயல்ஸுக்கு மீண்டும் திரும்புகிறார்! கிரிக்கெட் ஐகொன் றோயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குரூப் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் லுஷ் மெக்ரம்மிடம் இருந்து தனது ஊதா நிற ஜெர்சியைப் பெறுகிறார்’ என்று பதிவிட்டதுடன், அந்த புகைப்படத்தையும் இணைத்துள்ளது.
2011 முதல் 2013 வரை ஒரு வீரராக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை ராகுல் டிராவிட் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2012, 2013 ஆகிய ஆண்டுளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டார் அதன்பிறகு 2024, 2015 ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் இயக்குநராகவும், ஆலோசகராகவும் இருந்தார். 2016 இல் அவர் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக பெறுப்பேற்றார்.
இதனையடுத்து 2019 இல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைமைப்பொறுப்பு வகித்த அவர், அதன் பிறகு 2021 இல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இது இவ்வாறிருக்க, ராகுல் திராவிட் மட்டுமல்லாமல் இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக டிராவிட்டுடன் பணியாற்றிய விக்ரம் ராத்தோரையும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குமார் சங்கக்கார ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ராஜஸ்தான் அணி மறைமுக விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மட்டுமே ராகுல் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சங்கக்கார ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் இயக்குநராக தொடர்கிறார் என்று கூறியுள்ளது.
எனவே, குமார் சங்கக்கார ராஜஸ்தான் றோயல்ஸ் குழுமத்தின் பிற அணிகளான தென்னாப்பிரிக்கா T20 லீக்கின் பார்ல் றோயல்ஸ் அணி மற்றும் கரீபியன் பிரீமியர் லீக்கின் பார்படோஸ் றோயல்ஸ் ஆகிய அணிகளை வழிநடத்தவுள்ளார்.
எவ்வாறாயினும், இம்முறை ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக குமார் சங்கக்காரவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது கவுதம் கம்பீர் விட்டுச் சென்ற பணியான கொல்கத்தா அணியின் ஆலோசகர் பணிக்கு சங்கக்காரவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டிய பின்னர், உத்தியோகபூர்வமாக கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் சங்கக்காரவுக்கு பல்வேறு அணிகளில் இருந்தும் சில வாய்ப்புகள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் 3 ஆண்டுகள் பயணித்துள்ள சங்கக்கார, அந்த அணியை உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். 2022ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டி வரையும், 2023ஆம் ஆண்டு 5ஆவது இடத்திலும், கடந்த ஆண்டு குவாலிஃபையர் 2ஆவது போட்டி வரையும் முன்னேறியது. இதனால் குமார் சங்கக்கார ஒரு பயிற்சியாளராக சிறப்பாக செயல்படுவதாக பாராட்டுகள் எழுந்தன.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<