இந்திய அணியின் பயிற்சியாளரா்கும் ராகுல் டிராவிட்?

305
BCCI

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், T20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா

இதனைத்தொடர்ந்து விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது

இந்த நிலையில், இந்த இடைப்பட்ட காலப்பகுதியில், அதாவது ஜூலை மாதம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது

இந்த அணியில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என பிசிசிஐ இன் தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்தார்

இதன்படி, இலங்கைச் சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, தீபக் சஹார், வருண் சக்ரவர்த்தி, பிரித்வி ஷா போன்ற வீரர்கள் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Video – Kusal Perara வின் தலைமையில் களமிறங்கும் இலங்கை அணி இதுதான்…!| Sports RoundUp – Epi 161

இந்த நிலையில், இலங்கை செல்லும் இந்திய அணிக்கான பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியா A, இந்தியா 19 வயதுக்குட்பட்ட அணிகளின் பயிற்சியாளராகவும், இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்ற ராகுல் டிராவிட் இப்பொறுப்புக்குச் சரியான நபராக இருப்பார் என பிசிசிஐ எண்ணுவதாகக் கூறப்படுகிறது

இந்திய அணிக்குப் பயிற்சியாளராக செயற்பட வேண்டும் என ராகுல் டிராவிட்டிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதனை அவர் ஏற்கவில்லை. இதன்காரணமாக ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதாக தகவல் வெளியானது

இந்த நிலையில், தற்போது இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிக்கு டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவதற்குச் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், விரைவில் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட அதிக வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைவர் பதவிக்கு தீவிர போட்டி

இதேவேளை, இலங்கை சுற்றுப்பயணத்தில் பயிற்சியாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்காவிட்டால் பராஸ் மாம்ப்ரே பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

எதுஎவ்வாறாயினும், இலங்கைச் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படும் எனவும், பயிற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க….