பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை – ராகுல் டிராவிட்

India Coach Hunt

175

இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடர் தான் பணியாற்றும் கடைசி தொடர் என்றும், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தான் மீண்டும் விண்ணப்பிக்கவில்லை என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் இந்திய அனியின் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ களமிறங்கியுள்ளதுடன், பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களையும் வெளியிட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கடந்த மாதம் கடைசி வாரம் வரை கால அவகாசம் கொடுத்திருந்தனர்.

அதேசமயம் ராகுல் டிராவிட் தனது பதவியில் நீடிக்க விரும்பினால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும், அதேசமயம் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பயிற்சியாளர் பதவி குறித்து ராகுல் டிராவிட் மௌனம் கலைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட் கருத்து தெரிவிக்கையில், ‘நான் இந்தியாவுக்கு பயிற்சி அளித்த ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது. எனவே என்னைப் பொறுத்தவரை, இது வேறுபட்டதல்ல, ஏனென்றால் நான் பொறுப்பேற்ற கடைசி தொடராக இது இருக்கும். நான் இந்திய அணிக்கு பயிற்சியளிப்பதை மிகவும் ரசித்தேன். இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும்.

ஆனால் துரதிஷ்டவசமாக, வாழ்க்கையில் நான் என்னைப் பார்க்கும் நிலையைப் பார்த்தால், என்னால் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவே, இதுவே எனது கடைசி தொடராக இருக்கும். நான் இப்பதவியை ஏற்ற முதல் நாளிலிருந்தே, ஒவ்வொரு போட்டியையும் முக்கியமானதாக நினைத்ததைப் போலவே தற்போதும் அது மாறாமல் இருப்பதாக உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து அந்த அணியின் ஆலோசகராக பணியாற்றிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் அடுத்தத் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முன்னாள் வீரர்களான வி.வி.எஸ் லட்சுமணன், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரின் பெயர்களும் பயிற்சியாளர் தேர்வில் உள்ளதால் இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது தொடர்பில் உலக கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியி;ல் மிகப் பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<