நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, நுவரெலியாவில் அமைந்துள்ள ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வியாழக்கிழமை (16) தொடக்கம் ஒரு வாரத்துக்கு இலங்கை அணி நுவரெலியாவில் தங்கியிருந்து ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.
>> முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் இலகு வெற்றி
ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தின் காலநிலை நியூசிலாந்து காலநிலைக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளதன் காரணத்தால் குறித்த மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த பல வருடங்களாக ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தை பயன்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தவறியிருந்தபோதும், தற்போது ரதெல்ல மைதானத்தை சொந்தமாகக் கொண்டுள்ள திம்புல மெய்வல்லுனர் மற்றும் கிரிக்கெட் கழகத்தின் அனுமதியை பெற்றுக்கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபை குறித்த மைதானத்தின் மீள் உருவாக்க பணிகளை கடந்த சில வாரங்களாக மேற்கொண்டிருந்தது.
புனரமைப்பு பணிகளுக்காக இலங்கை கிரிக்கெட் சபையின் சர்வதேச அரங்குகள் மற்றும் வசதிகளுக்கான முகாமையாளர் கொட்பிரே டப்ரேரா தலைமையில் இலங்கையின் அனுபவம் வாய்ந்த 20 மைதான பராமரிப்பாளர்கள் சென்றிருந்தனர்.
புனரமைப்பு பணிகளின் நிமித்தம் மைதானத்தில் 4 மத்திய ஆடுகளங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான 5 ஆடுகளங்களை இலங்கை கிரிக்கெட் சபை புதிதாக உருவாக்கியிருக்கிறது.
அதுமாத்திரமின்றி சர்வதேச தரத்துக்கு இந்த மைதானம் இருக்கிறதா என்பதை அறிந்துக்கொள்வதற்கு கடந்த வாரம் பயிற்சிப் போட்டியொன்றும் நடாத்தப்பட்டிருந்தது.
தற்போது இந்த மைதானமானது சர்வதேச தரத்துக்கான சாதகத்தை கொண்டுள்ளதால், நியூசிலாந்து தொடருக்கான பயிற்சிகளை இலங்கை அணி ரதெல்ல மைதானத்தில் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியானது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது மார்ச் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<