ICC T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

ICC T20 World 2021

768

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இந்திய குழாம் இன்று (08) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் ஆச்சரியப்படுத்தும் இணைப்பாக, சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் வருகை அமைந்துள்ளது. T20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய குழாத்தில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த போதும், அஸ்வின் சுமார் 4 வருடங்களுக்கு பின்னர் T20 குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

அறிமுக ஒருநாள் போட்டியில் அசத்திய இலங்கை வீரர்கள்!

இந்திய அணியின் சகலதுறை வீரர் வொசிங்டன் சுந்தரின் உபாதை குணமடைவதற்கான காலம் அதிகமாக உள்ள நிலையில், அஸ்வின் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர், இறுதியாக 2017ம் ஆண்டு, இந்திய T20 அணிக்காக விளையாடியிருந்தார்.

இந்திய அணியிலிருந்த முக்கிய வெளியேற்றமாக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் உள்ளதுடன், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தலைவராக செயற்பட்டிருந்த சிக்கர் தவானும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், T20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள சிரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் மேலதிக வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல்.ராஹூல் ஆகிய முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சோபித்து வந்ததுடன், அண்மையில் தேசிய அணியின் வாய்ப்பை பெற்றுக்கொண்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில், இந்திய அணியின் முதன்மை விக்கெட் காப்பாளராக ரிஷப் பண்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், இஷான் கிஷன் மாற்று விக்கெட் காப்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சகலதுறை வீரர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில், அக்ஸர் பட்டேல், குர்னால் பாண்டியாவுக்கு அணியில் இருந்த வாய்ப்பை தனது பக்கம் திருப்பிக்கொண்டுள்ளார். 

சுழல் பந்துவீச்சை பொருத்தவரை, அஸ்வின் அனுபவத்தை கொண்டிருந்தாலும், அனுபவம் குறைந்த வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் ராஹுல் சஹார் ஆகியோர் வாய்ப்பை தக்கவைத்துள்ளனர். இவர்களுக்கு சர்வதேச அனுபவம் குறைந்திருந்தாலும், ஐ.பி.எல். தொடரில் சிறந்த அனுபவத்தை பெற்றுள்ளனர்.

அதேநேரம், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை பொருத்தவரை, ஜஸ்ப்ரிட் பும்ராவுடன், அனுபவ பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, தங்களுடைய குழாத்தில் அதிக சுழல் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி குழாத்தை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் சபை, ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ள அதேவேளை, இந்திய அணிக்கான ஆலோசகராக முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான மகேந்திரசிங் டோனியை நியமித்துள்ளது. இவர், ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், T20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியின் ஆலோசகராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), ரோஹித் சர்மா (உப தலைவர்), கே.எல்.ராஹுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராஹுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார்

மேலதிக வீரர்கள் – சிரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர், தீபக் சஹார்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…