9ஆவது ஐ.பி.எல். கிரிக்கட் போட்டித் தொடரில், விராத் கொஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இந்த நிலையில் இறுதிப் போட்டியில் பெங்களூர் அணியை சந்திக்க நுழையும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2ஆவது தகுதிகான் சுற்றுப் போட்டியில் சுரேஷ் ரயினா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசாஸ் ஹைதராபாத் அணியை நேற்று டெல்லியில் அமைந்துள்ள பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் சந்தித்தது.
முதல் நாளில் பிரதீப் பிரகாசிப்பு
தீர்மானம் மிக்க இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசாஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் களத்தடுப்பு செய்யத் தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்றது. குஜராத் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பிஞ்ச் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 50 ஓட்டங்களையும், ப்ரெண்டன் மெக்கலம் 32 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 26 ஓட்டங்களையும் பெற்றனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் மற்றும் பென் கட்டிங் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினார்கள்.
இதன் பிறகு 163 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 4 பந்துகள் மீதமிருக்க 6 விக்கட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது. ஹைதராபாத் அணி சார்பில் தலைவர் டேவிட் வோர்னர் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 58 பந்துகளுக்கு முகங்கொடுத்து 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 93 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர பிபுள் ஷர்மா 27 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் சன்ரயிசஸ் ஹைதராபாத் அணி ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் நாளை ஞாயிற்றுக்கிழமை விராத் கொஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பெங்களுர் சின்னஸ்வாமி மைதானத்தில் எதிர் கொள்கிறது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்