புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் “ட்ரகன்ஸ் சம்பியன்ஸ் லீக்” சுற்றுப் போட்டியில் ட்ரிபல்செவன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்தாடிய விம்பில்டன் விளையாட்டுக் கழக அணி 6-0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றி பெற்று, 10 அணிகள் உள்ள புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
புத்தளம் மாவட்டத்தின் தலை சிறந்த கழகங்களான, இளம் வீரர்களைக் கொண்ட ட்ரிபல்செவன் மற்றும் விம்பில்டன் ஆகிய இரண்டு அணிகளும் ஏற்கனவே ஆடிய தமது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்பிட்டி பேல்ஸ் அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த புத்தளம் நியூ ஸ்டார்
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெறும்…
இந்நிலையில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பந்து சம அளவில் இரு அணி வீரர்களின் கால்களிலும் காணப்பட்டது. விம்பில்டன் அணியின் பின்கள வீரர்கள் சற்று வேகமான ஆடினர். இது ட்ரிபல்செவன் அணியின் முன்கள வீரர்களுக்கு எதிரணியின் கோல் கம்பம் நோக்கி முன்னேற இடையூராக இருந்தது.
போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ட்ரிபல்செவன் அணியின் முன்கள வீரர் அப்ரார் வழங்கிய அற்புதமான பந்துப் பரிமாற்றத்தை சிறப்பாக பெற்றுக்கொண்ட ரிபாஸ்தீன் கோல் கம்பம் நோக்கி அடிக்க, அதை விம்பில்டன் கோல் காப்பாளர் இம்ரான் லாபகமாகப் பிடித்துக்கொண்டார்.
போட்டியின் 23ஆவது நிமிடத்தில் விம்பில்டன் வீரர்களான ரிஸ்னி மற்றும் சிசான் ஆகியோரின் சிறப்பான பரிமாற்றம் மூலம் பந்தை நிஸானுக்கு வழங்க, அவர் அதை கோல் கம்பம் நோக்கி உதைந்தார். எனினும் பந்து கம்பத்திற்கு வெளியே சென்றது.
போட்டி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க 27ஆவது நிமிடத்தில் விம்பில்டன் அணிக்கு கோர்ணர் மூலம் கிடைத்த வாய்பை அப்ரார் கோல் நோக்கி அடிக்க, அதை நியாஸ் ஹெடர் மூலம் கோலாக்க முயற்சித்தார். இதன்போதும் பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.
இரண்டு நிமிடங்கள் கடந்த நிலையில் ட்ரிபல்செவன் அணியின் பின்கள வீரர்கள் தவறவிட்ட பந்தினை லாபகமாகப் பற்றிக்கொண்ட விம்பில்டன் அணித் தலைவர் சிசான், கோல் காப்பாளர் மாத்திரம் இருக்க இலகுவாக அடிக்க வேண்டிய கோலை, கோல் காப்பாளரின் கைகளுக்குத் தாரைவார்த்து வாய்ப்பை வீணடித்தார்.
தொடர்ந்து 31ஆவது நிமிடத்தில் ரிபல்செவன் அணியின் முன்கள வீரர் அப்ரார் கோல் கம்பம் நோக்கி வேகமாக அடிக்க அதை இலகுவாக பிடித்துக் கொன்டார் விம்பில்டன் கோல் காப்பாளர்.
இரு அணியினரும் கோலுக்கான முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்ட வண்ணம் இருந்தனர். போட்டியின் 34ஆவது நிமிடத்தில் விம்பில்டன் வீரர் சிப்ரான் வழங்கிய அருமையான பந்துப் பரிமாற்றத்தை பெற்றுக் கொண்ட அணித் தலைவர் சிசான் இம்முறை வாய்ப்பை தவறவிடவில்லை. அவர் வேகமாக அடித்த பந்து கோல் காப்பாளர் சஜீந்தராஜின் கைகளில் படாமலே கம்பத்துக்குள் புகுந்தது. இதனால் விம்பில்டன் அணி முன்னிலை பெற்றது.
பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு ஆடிக்கொண்டிருந்தது ட்ரிபல்செவன் அணி. 38ஆவது நிமிடத்தில் கைசான் வழங்கிய பந்தை அஸ்மி கோல் கம்பத்திற்கு மேலால் அடித்தார்.
போட்டியின் 40ஆவது நிமிடத்தில் சிசான் வழங்கிய பந்தைப் பெற்றுக்கொண்ட சரீக், அதனை கோலாக மாற்றினார். எனினும் நடுவர் அதை ஓப்சைட் என அறிவிக்க வீணாகிப் போனது விம்பில்டனின் முயற்சி.
16 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கான தெரிவு இம்மாத இறுதியில்
ஆசிய கால்பந்து சம்மேளத்தின் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள்..
போட்டியின் முதல் பாதி நிறைவுபெற சில நிமிடங்கள் இருக்கையில் சிசான் ட்ரிபல்செவன் அணியின் பின்கள வீரர்களை நிலை குலையச் செய்து கோல் கம்பம் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் ட்ரிபல்செவன் பின்கள வீரர் சுல்த்தான் முறையற்ற விதத்தில் பந்தினை பெற முயற்சித்தார்.
இதனால் விம்பில்டன் அணிக்கு நடுவரினால் பெனால்டி உதைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் சுல்த்தானுக்கு மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டது. கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை ஜெசான் சிறப்பாகப் பயன்படுத்த விம்பில்டன் அணியின் முன்னிலையுடன் முதல் பாதி நிறைவடைந்தது.
முதல் பாதி: விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 2 – 0 ட்ரிபல்செவன் விளையாட்டுக் கழகம்
இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றிருந்த விம்பில்டன் அணி இரண்டாம் பாதியில் தனது பின்கள வீரர்களை சற்று அதிகரித்து எதிரணி வீரர்களை கோல் கம்பம் நெருங்க விடாத வண்ணம் பாதுகாத்துக்கொண்டது.
எவ்வாறாயினும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு எதிர்த்தாடியது ரிபல்செவன். 51ஆவது நிமிடத்தில் அஸ்மி வழங்கிய பந்தினை கோல் கம்பம் நோக்கி உதைத்தார் அப்ரார். ஆனால் அதை விம்பில்டனின் பின்கள வீரர் நயாஜ் தலையால் முட்டித் தடுத்தார்.
தொடந்து போட்டியில் கடுமையாக விளையாடிய ரிபல்செவன் அணி வீரர் கய்ஸானுக்கு நடுவர் மஞ்சள் அட்டையைக் காட்டி எச்சரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு இரு அணியினரும் தம் தரப்பிற்கு கிடைத்த பல வாய்ப்புக்களை நழுவ விட்டனர். குறிப்பாக ரிபல்செவன் அணியினரின் பல முயற்சிகள் விம்பில்டன் அணியின் தடுப்பு வீரர்களால் முறியடிக்கப்பட்டன.
பின்னர் விம்பில்டனுக்குக் கிடைத்த கோணர் உதையை ஜசான் அடிக்க, சிசான் பந்தை அழகாக ஹெடர் செய்தார். எனினும் கோல் காப்பாளரின் துள்ளியமான தடுப்பால் பந்து கம்பத்திற்கு மேலால் அனுப்பப்பட்டது.
ரிபல்செவன் அணியினருக்குக் கிடைத்த கோல் பெறக்கூடிய 2, 3 சந்தர்ப்பங்கள் முன்கள வீரர்களின் அசமந்தப் போக்கினால் தவறவிடப்பட்டன.
முதல்தரப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் சங்கக்கார
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில்..
போட்டியின் 75ஆவது நிமிடத்தில் விம்பில்டன் வீரர் ரிஸ்னி வழங்கிய அபார பந்துப் பரிமாற்றத்தை முன்கள வீரர் சக்கீர் பெற்றுக்கொண்டு ரிபல்செவனின் பின்கள வீரர்களை ஏமாற்றி கோலுக்குள் பந்தை அனுப்பினார்.
பின்னர் 81ஆவது நிமிடத்தில் சிசான் வழங்கிய பந்தை எதிரணியின் இரு தடுப்பு வீரர்களையும் தாண்டிப் பெற்றுக்கொண்ட அஸாம், கோல் கம்பம் நோக்கி நேராக அடித்தார். ரிபல்செவன் கோல் காப்பாளர் அதைத் தடுக்க எத்தனிப்பதற்குள் பந்து கோலுக்குள் தஞ்சமடைந்தது. இந்த கோலோடு அவ்வணி வெற்றியின் விளிம்பிற்குச் சென்றது.
தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட்டு வந்த விம்பில்டன் கோல்காப்பாளர் ரிபல்செவன் அணியின் முன்கள வீரர் அப்ராரின் ப்ரீ கிக் உதையையும் தடுத்தார்.
85 நிமிடங்கள் கடந்த நிலையில் விம்பில்டன் வீரர் சிசான் வழங்கிய பந்தை அஸாம் கோல் நோக்கி அடித்தார். அதை சஜீந்தராஜ் தடுக்க, மீண்டும் பந்து விம்பில்டன் வீரர் ஜெஸானின் கால்களுக்கு கிடைத்தது. அதை வேகமாக கோல் நோக்கி அடித்து தன் கோல் எண்ணிக்கையை இரண்டாக மாற்றி அணியின் கோல் கணக்கை 5 ஆக உயர்த்தினார் ஜெஸான்.
5 கோல்கள் பின்னிலையுடன் ரிபல்செவன் அணி அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் போட்டியின் 88ஆவது நிமிடத்தில் அப்ஸல் வழங்கிய பந்தினை அணித் தலைவர் சிசான் கோல் கம்பத்தினுள் செலுத்தி, தனது அடுத்த கோலையும் பதிவு செய்தார்.
பின்னர் சிசானின் இறுதி உதையோடு நடுவர் ஜிப்ரி போட்டி நிறைவு பெற்றதாய் அறிவிக்க, 6 கோல்களினால் பெற்ற இந்த வெற்றியுடன் தமது இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது விம்பில்டன் அணி.
முழு நேரம்: விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 6 – 0 ட்ரிபல்செவன் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
விம்பில்டன் விளையாட்டுக் கழகம் – சிசான் 29’& 88’, ஜெஸான் 40’ & 86’, சக்கீர் 75’, அஸாம் 83’
மஞ்சள் அட்டை
ட்ரிபல்செவன் விளையாட்டுக் கழகம் – சுல்த்தான் 39’, கய்சான் – 61’