புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்து நடாத்திவரும் “ட்ரகன்ஸ் சம்பியன்ஸ் லீக் -2017” போட்டித் தொடரின் மற்றுமொரு ஆட்டத்தில் ஒடிடாஸ் விளையாட்டுக் கழகத்தை 7-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி கொண்ட நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம், தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெற்றது.
புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பந்து நியூ ஸ்டார் அணி வீரர்களின் கால்களிலே காணப்பட்டது. அவ்வணி வீரர்கள் ஒடிடாஸ் கழகத்தின் கோல் கம்பங்களை அணிமித்தே காணப்பட்டனர். அவர்களை சமாளிப்பதில் ஒடிடாசின் தடுப்பு வீரர்கள் சற்று பின்வாங்கியே இருந்தனர்.
இரண்டாவது பாதி அதிரடியால் ட்ரிபல்செவன் அணியை வீழ்த்திய விம்பில்டன்
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெறும்…
போட்டியின் 15ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டாரின் முன்கள இளம் வீரர் பைக்கர் எதிரணியின் தடுப்பு வீரர்கள் மூவரையும் அருமையாகக் கடந்து சென்று, பந்தை மற்றைய முன்கள வீரர் அஸ்பானுக்கு வழங்க, அதை அவர் நேராக கோல் கம்பம் நோக்கி அடித்தார். ஒடிடாசின் கோல் காப்பாளர் அமீஸ் பந்தைத் தடுக்கும் முயற்சியில் தோற்றுப் போக, நியூ ஸ்டாரின் கோல் கணக்கு ஆரம்பமாகியது.
மீண்டும் போட்டியின் 18ஆவது நிமிடத்தில் ஒடிடாஸ் வீரர் சிமாஸ் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை சபான் கோல் கம்பம் நோக்கி அடிக்க, பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.
பின்னர், 20ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டாரின் சர்பி கொடுத்த பந்தை இளம் வீரர் பைக்கர் கோல் கம்பம் நோக்கி உதைக்க, பந்து எந்தவித தடங்களும் இன்றி உட்செல்ல நியூ ஸ்டாரின் கோல் எண்ணிக்கை இரட்டிப்பானது.
ஒடிடாஸ் அணி அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் போட்டியின் 23ஆவது நிமிடத்தில் பைக்கர் நீண்ட தூரத்திலிருந்து கோல் கம்பம் நோக்கி பந்தை அடிக்க, கோல் காப்பாளர் அமீஸின் கவனயீனத்தால் கம்பத்திற்குள் பந்து புகுந்தது. இதனால் பைக்கரின் கோல் கணக்கு இரண்டாக உயர, அணி 3 கோல்களால் முன்னிலை பெற்றது.
போட்டியின் 30ஆவது நிமிடத்தில் ஒடிடாசின் முன்கள வீரர் சபானுக்கு கோல் அடிக்க சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைக்க, அதை அவர் நியூ ஸ்டாரின் கோல் காப்பாளர் வசீமின் கைகளுக்கே தாரை வார்த்து வாய்ப்பை வீணடித்தார்.
மீண்டும் போட்டியின் 37ஆவது நிமிடத்தில் பைக்கரினால் வழங்கப்பட்ட பந்தை லாபகமாகப் பெற்றுக்கொண்ட அஸ்பான் கோல் கம்பம் அருகில் நெருங்கி பந்தை அடிக்க முனைகையில் ஒடிடாஸின் பின்கள வீரர் விதி முறையை மீறி பந்தைப் பெற முனைகையில் அஸ்பான் கீழே விழுந்தார். இதனால், நடுவர் நியூ ஸ்டார் அணிக்கு பெனால்ட்டி உதைக்கான வாய்ப்பை வழங்கினார்.
பெனால்ட்டி உதையை ரிப்கான் கம்பம் நோக்கி வேகமாய் அடிக்க, கோல் காப்பாளரால் தடுக்க முடியாமல் போனது.
போட்டியின் இரண்டு பாதிகளும் தலா 40 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவாரே இந்தப் ஆட்டம் இடம்பெற்றது.
முதல் பாதி: நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 4 – 0 ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்
முதல் பாதி ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்திய நியூ ஸ்டார் அணியினர் இரண்டாம் பாதியையும் வேகமாகவே ஆரம்பிக்து, ஒடிடாஸின் பரப்பை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர்.
இரண்டாவது பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களில் அஸ்பான் வழங்கிய பந்தை பெற்றுக்கொண்ட இர்பான், கோல் நோக்கி அடிக்க அதை நேர்த்தியாகப் பிடித்துக்கொண்டார் கோல் காப்பாளர் அமீஸ்.
மீண்டும் பைக்கரின் அசத்தலான பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற சாஜித் இலகுவாக கோல் அடிக்க வேண்டிய வாய்ப்பில் பந்தை நேராக கம்பத்திற்கு அடித்தார்.
ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிக்காண் போட்டிகளில் இலங்கை குழு B யில்
எதிர்வரும் 2018ஆம் அண்டு இடம்பெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய..
போட்டியின் 57ஆவது நிமிடத்தில் ஒடிடாசின் வீரர் ஹுசைன் வழங்கிய பந்தை, தாசிம் கோல் கம்பத்திற்குள் அடித்தார். எனினும் பக்க நடுவர் அதை ஓப் சைட் முறை என அறிவிக்க அந்த ஒரு முயற்சியும் வீணாகிப்போனது.
போட்டியின் மிகுதி நேரங்களை நியூ ஸ்டார் அணி முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஒடிடாஸினால் ஒரு பந்துப் பரிமாற்றத்தைக் கூட சிறப்பாக செய்துகொள்ள முடியாமல் போனது.
இந்நிலையில், 65ஆவது நிமிடத்தில் சர்பியால் அடிக்கப்பட்ட கோர்ணர் உதையை, அஸ்பான் உயரே எழுந்து தலையால் முட்டினார். எனினும் பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றதால் நியூ ஸ்டார் ஆதரவாளர்கள் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
போட்டியின் 67ஆவது நிமிடத்தில் முஸ்பி வழங்கிய பந்தினைப் பெற்ற பைக்கர் வேகமாக கோல் கம்பம் நோக்கி அடித்தார். அதனை கோல் காப்பாளர் அமீஸ் தடுத்துவிட மீண்டும் பந்து நியூ ஸ்டார் வீரர் அஸ்பானின் கால்களில் தஞ்சமடைந்தது. இந்த முறை அதை மீண்டும் வேகமாக கோல் கம்பத்திற்குள் அடித்து தன் கோல் கணக்கை இரட்டிப்பாக்கினார் அஸ்பான்.
ஒருபுறம் நியூ ஸ்டார் சாரமாரியாக கோல் கணக்கை உயர்த்திச் செல்ல, மறுமுனையில் தடுப்பு வீரர்களை அதிகரித்த வண்ணமே இருந்தது ஒடிடாஸ் அணி. நியூ ஸ்டாரின் பகுதிகள் வெறுமையாகவே காணப்பட நியூ ஸ்டாரின் தடுப்பு வீரர்களும் ஒடிடாஸின் பகுதிகளிளேயே தங்கள் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கினர்.
>> FA கிண்ண இறுதிப் போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட <<
பின்னர், இர்பானினால் வழங்கப்பட்ட பந்தை பெற்றுக்கொண்ட பைக்கர் பெனால்ட்டி பகுதிக்கு முன் இருந்து கோல் கம்பம் நோக்கி உதைக்க அது கம்பத்திற்கு அருகாமையால் வெளியேறியது.
மீண்டும் 70ஆவது நிமிடத்தில் அஸ்பான் அடித்த பந்தை கோள் காப்பாளர் அமீஸ் பாய்ந்து தடுக்க, பந்து அவரது கையில் பட்டு கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது.
மேலும், ஒடிடாஸின் வீரர் சபானுக்கு கிடைத்த பந்தை மைதானத்தின் மத்தியிலிருந்து நியூ ஸ்டார் கம்பம் வரை கொண்டு சென்று கோல் நோக்கி அடிக்க, அதை நியூ ஸ்டாரின் தடுப்பு வீரர் முஸ்பின் இலகுவாக தடுத்து நிறுத்தி சபானின் முயற்சியை தவிடு பொடியாக்கினார். இம்முயற்சியே ஒடிடாஸின் இறுதி முயற்சியாக அமைந்தது.
ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் பைக்கர் பந்தினை அஸ்பானுக்கு வழங்க, அதை அவர் தடுப்பு வீரர்களை திணறடிக்கச் செய்து இர்பானுக்குக் கொடுத்தார். இர்பான் இலகுவாக கம்பங்களுக்குள் பந்தை அனுப்ப நியூ ஸ்டாரின் கோல் எண்ணிக்கை ஆரை எட்டிப்பிடித்தது.
போட்டியில் மேலும் இரண்டு நிமிடங்கள் செல்ல, 75ஆவது நிமிடத்தில் ஒடிடாசுக்கு மீண்டும் கோல் அதிர்ச்சி கொடுத்தது நியூ ஸ்டார்.
சர்பி வழங்கிய சிறந்த பந்துப் பறிமாற்றத்தை பெற்றுக்கொண்ட பைக்கர், பந்தை அஸ்பானின் கால்களில் கொடுத்தார். அதை அஸ்பான் கோல் கம்பத்திற்குள் வேகமாக அடிக்க கோல் காப்பாளரின் கைகளில் பட்டவாரே பந்து கோலுக்குள் சென்றது. இதனால் இத்தொடரில் அஸ்பான் முதல் ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.
சில நிமிடங்களின் பின்னர், போட்டி நிறைவடைந்ததாய் பிரதான நடுவர் ஜாக்கிர் அறிவிக்க, 7 கோல்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம்.
இந்த வெற்றியின்மூலம் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது புத்தளம் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம். இவர்கள் கடந்த இரண்டு போட்டிகளிலும் மொத்தமாக 17 கோல்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழு நேரம்: நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 7 – 0 ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – அஸ்பான் – 15’, 67’, 75’, பைக்கர் 20’, 23’, றிப்கான் 38’, இர்பான் 73’