புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்தி வரும் ‘ட்ரகன்ஸ் லீக் – 2017’ போட்டிகளின் மற்றுமொரு லீக் ஆட்டத்தில் இறுதி நிமிடத்தில் பெற்ற கோலினால் 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் கல்பிட்டி பேல்ஸ் கழகத்தை லிவர்பூல் விளையாட்டுக் கழக அணி வீழ்த்தியது.
அஸ்பானின் ஹட்ரிக் கோலுடன் மற்றொரு வெற்றியை பெற்றது புத்தளம் நியூ ஸ்டார் அணி
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்து நடாத்திவரும் ” ட்ரகன்ஸ் சம்பியன்ஸ் லீக் -2017″..
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில், தொடருக்கான தரப்படுத்தலில் 5ஆம் இடத்திலுள்ள புத்தளம் லிவர்பூல் கழகம் மற்றும் தரப்படுத்தலில் 10ஆம் இடத்திலுள்ள கல்பிட்டி பேல்ஸ் கழகம் என்பன பலப்பரீட்சை நடத்தின.
போட்டி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பந்து சம விகிதத்தில் இரு அணி வீரர்களின் கால்களிலும் காணப்பட்டது. 13வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்குக் கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பை முன்கள வீரர் அலி கோல் கம்பம் நோக்கி உதைக்க அதனை சிறப்பாகச் செயல்பட்டு கோல் கம்பத்திற்கு மேலால் தள்ளிவிட்டார் பேல்ஸ் அணியின் கோல் காப்பாளர் ரிபாய்.
போட்டியின் 15வது நிமிடத்தில் பேல்ஸ் கழகத்தின் முன்கள வீரர் சப்னி வழங்கிய பந்தை சிறப்பாகப் பெற்றுக்கொண்ட மற்றைய முன்கள வீரர் அஸ்பாக், வேகமாகச் செயற்பட்டு லிவர்பூல் கழகத்தின் இரண்டு பின்கள வீரர்களையும் நிலை குலையச் செய்து கோல் கம்பம் நோக்கி அடிக்க லிவர்பூல் கோல்காப்பாளர் பரோஜ் பந்தை தடுக்க முயற்சித்தார். எனினும், பந்து கோல் கம்பத்திற்குள் சரணடைய 1 : 0 என முன்னிலை பெற்றது பேல்ஸ் கழகம்.
அதையடுத்து 22வது நிமிடத்தில் லிவர்பூலின் முன்கள வீரர் சிப்கான் வழங்கிய அற்புதமான பந்துப் பரிமாற்றத்தை சிறப்பாகப் பெற்றுக்கொண்ட ரவ்சான் பேல்ஸ் கழகத்தின் மூன்று தடுப்பு வீரர்களையும் தாண்டி இடக் காலால் கோல் கம்பம் நோக்கி அடிக்க பந்து கோல் காப்பாளர் ரிபாயின் கைகளில் பட்டவாரே கோலுக்குள் செல்ல கோல் எண்ணிக்கை 1– 1 என சமநிலையானது.
போட்டியின் 28வது நிமிடத்தில் லிவர்பூலின் அப்ரார் கோல் கம்பம் நோக்கி அடிக்க அதை ரிபாய் தட்டி விட்டார். பந்து மீண்டும் லிவர்பூல் தலைவர் ஹூசைனின் கால்களில் வந்தடைய அதை நேராக கோல் கம்பத்திற்குள் அடிக்க எந்த வித தடங்களும் இல்லாமல் கோலாக மாற, லிவர்பூல் அணி ஒரு கோலினால் முன்னிலை பெற்றது.
மேலும் 32வது நிமிடத்தில் பேல்ஸ் கழகத்தின் அஸ்வர் வழங்கிய பந்தினை ரில்வான் நடுப்பகுதியில் இருந்து கோல் நோக்கி உதைக்க பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்று ஏமாற்றமளித்தது.
முதல் பாதி ஆட்டம் முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருக்க பேல்ஸ் கழகத்தின் பின்கள வீரர் நுஸ்கான் வழங்கிய பந்தை பெற்றுக்கொண்ட ரிஸ்கான் லிவர்பூலின் பின்கள வீரர்களை நிலைகுலையச் செய்து கோல்கம்பம் நோக்கி உதைக்க கோல் காப்பாளரின் கவனயீனத்தால் பந்து கோல் கம்பத்திற்குள் சென்றது. இதனால் முதல் பாதி ஆட்டம் சமநிலையடைந்தது.
முதல் பாதி : லிவர்பூல் விளையாட்டுக் கழகம் 2 – 2 பேல்ஸ் விளையாட்டுக் கழகம்
இரண்டு அணிகளும் இரண்டாம் பாதிக்காக இரண்டு வீரர்களை மாற்றம் செய்திருந்தன. அந்த வகையில் லிவர்பூல் கழகம் கோல் காப்பாளர் பரோஜ் ஐ வெளியேற்றி இலங்கை 19 வயதிற்குற்பட்ட தேசிய அணிக்கு தெரிவான கோல் காப்பாளர் ஹூசைர் ஐ களமிறக்கியது.
போட்டியின் 48வது நிமிடத்தில் பேல்ஸ் வீரர் சர்பான் வழங்கிய பந்தினை பெற்றுக் கொண்ட சப்னி கோல் நோக்கி அடிக்க, அதை லிவர்பூலின் தடுப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் 60வது நிமிடத்தில் லிவர்பூலின் நஸீம் வழங்கிய பந்தினை பெற்றுக் கொண்ட அப்ரார் பேல்ஸ் தடுப்பு வீரர்களை ஏமாற்றி கோலாக்க முயன்ற போதும், பந்து கோல் கம்பத்திற்கு அருகாமையால் வெளியே செல்ல அந்த சிறந்த முயற்சி வீணானது.\
19 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய வீரர்கள் இவர்கள் தான்
இலங்கை கால்பந்து சம்மேளமானது (FFSL), 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பங்குபெறும் 2018 ஆம்…
இரண்டு கழக வீரர்களும் வெற்றிக்காக மிகவும் ஆக்ரோசமாகவும் வேகமாகவும் ஆட மைதானம் ரசிகர்களின் ஆரவாரத்தால் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது.
மீண்டும் 67வது நிமிடத்தில் பேல்ஸ் வீரர் அஸ்பாக் வழங்கிய பந்துப் பறிமாற்றத்தை பெற்றுக் கொண்ட சப்னி கோல் நோக்கி அடிக்க அதை லாபகமாகப் பிடித்துக் கொண்டார் ஹுசைர்.
போட்டியின் 72வது நிமிடத்தில் லிவர்பூலின் மிஸ்ராபிற்கு கிடைத்த பந்தினை மைதானத்தின் அரை பகுதியில் இருந்து வேகமாக அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் செல்ல ஆட்டம் மேலும் விறுவிறுப்பானது.
மீண்டும் போட்டியின் 78வது நிமிடத்தில் நஸீம் வழங்கிய பந்தை ரியாசத் கோல் கம்பத்திற்குள் உதைக்க, சிறப்பாகச் செயற்பட்ட ரிபாய் பாய்ந்து தடுத்தார். இதனால் லிவர்பூலின் முயற்சி மீண்டும் வீணானது.
மைதானம் முழுதும் கரகோசத்தால் சூழ்ந்து கொள்ள வெற்றி கோலுக்காக இரு கழகங்களின் வீரர்களும் ஆக்ரோசமாய் செயற்பட போட்டி விறுவிறுப்பின் உச்ச கட்டத்தை அடைந்தது.
மேலும் 85வது நிமிடத்தில் லிவர்பூல் கழகத்திற்கு கிடைத்த கோணர் வாய்ப்பை அலி பொறுப்பேற்று அடிக்க அது மைதானத்திற்கு வெளியே சென்றது.
போட்டி முடிவடைய ஒரு நிமிடம் மீதமிருக்கையில் லிவர்பூல் கழகத்திற்கு மீண்டும் கோணர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த உதையையும் அலி பொறுப்பேற்று அடிக்க உயர்ந்து வந்த பந்தினை அணித் தலைவர் ஹூசைன் தலையால் முட்டி கோள் கம்பத்தினுள் அணுப்ப அதை ரிபாய் பாய்ந்து தடுத்தார். பந்து மீண்டும் லிவர்பூலின் சிப்கானின் கால்களுக்கு செல்ல அதை வேகமாக கம்பத்திற்குள் அடிக்க, அது எந்த விதத் தடையும் இன்றி வெற்றி கோலாக மாற மைதானம் கரகோசத்தால் அதிர்ந்து போனது.
இறுதியில் போட்டி நிறைவு பெற்றதாய் நடுவர் பஸ்ரின் அறிவிக்க 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் லிவர்பூல் கழகம் வெற்றி பெற்றது. எனவே, பேல்ஸ் கழகத்தின் இறுதி நிமிடம் வரையிலான கடின முயற்சி வீணாகிப்போனது.
முழு நேரம் : லிவர்பூல் விளையாட்டுக் கழகம் 3 – 2 பேல்ஸ் விளையாட்டுக் கழகம்
கோல் போட்டவர்கள்
லிவர்பூல் விளையாட்டுக் கழகம்
- ரவ்சான் 20’, ஹூசைன் 25’, சிப்கான் 89’
பேல்ஸ் விளையாட்டுக் கழகம்
- அஸ்பாக் 15’, ரிஸ்கான் 43’
மஞ்சல் அட்டை
- லிவர்பூல் விளையாட்டுக் கழகம்
- ஹூசைன் 40’, ரஸ்வான் 43’
பேல்ஸ் விளையாட்டுக் கழகம்
- நுஸ்கான் 53’, பாகித் 70’