புத்தளம் உதைப்பந்தாட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள “ட்ரகன்ஸ் லீக் -2017” போட்டிகளின் 14வது லீக் ஆட்டம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் புத்தளப் பிரதேசத்தின் தலை சிறந்த கழகங்களான விம்பில்டன் மற்றும் நியூ ப்ரண்ஸ் ஆகிய கழகங்களுக்கிடையில் இடம்பெற்றது.
இப் போட்டியில் விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் நியூ ப்ரண்ஸ் கழகத்தை தோற்கடித்து புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
போட்டியின் 5வது நிமிடத்தில் நியூ ப்ரண்ஸ் அணி வீரர் இம்தியாஸ் பந்தினை உயர்த்தி கொடுக்க அதை சல்மான் தலையால் முட்டி கோல் அடிக்க எத்தனிக்கையில் விம்பில்டனின் கோல் காப்பாளர் இம்ரான் வேகமாய் செயற்பட்டு பந்தை தன் நெஞ்சோடு அனைக்க நியூ ப்ரண்சின் முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இரண்டாம் பாதி கை கொடுக்க இலகுவாய் வென்றது புத்தளம் யுனைடட்
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற ‘ட்ரகன்ஸ் லீக் -2017′ சுற்றுப்….
மேலும் போட்டியின் 11வது நிமிடத்தில் விம்பில்டன் அணித் தலைவர் சிசான் கொடுத்த இலகுவான கோல் அடிக்கும் வகையிலான பந்துப் பரிமாற்றத்தை பெற்ற ஹிமாஸ், பந்தை நியூ ப்ரண்ஸ் கோல் காப்பாளர் அஸ்பானின் கைகளுக்கே தாரை வார்க்க இலகுவான வாய்ப்பு வீணானது.
மேலும் 6 நிமிடங்கள் கடந்து நியூ ப்ரண்ஸ் கழக வீரர் ஜாக்கிர் வழங்கிய பந்தைப் பெற்ற பாரிஸ், கோல் கம்பத்தின் இடது மூலைப் பகுதிக்கு அடிக்க அதை அற்புதமாய் பாய்ந்து தடுத்து வெயியேற்றினார் இம்ரான்.
போட்டியின் 19வது நிமிடத்தில் விம்பில்டனின் சிப்ரான் அடித்த பந்து நியூ ப்ரண்சின் தடுப்பு வீரர்களின் கவனக்குறைவால் தவறவிடப்பட, பந்து விம்பில்டனின் முன்கள வீரர் ஹிமாசின் கால்களில் கிடைத்தது. அதை அவர் கம்பம் நோக்கி வேகமாக அடிக்க, அஸ்பான் பந்தை பிடிக்க முயற்சிப்பதற்குள் பந்து கம்பத்திற்குள் சரணடைந்தது. இதனால், விம்பில்டன் தன் கோல் கணக்கை 1 – 0 என ஆரம்பித்தது.
மேலும், 27வது நிமிடத்தில் சிசான் கோல் கம்பம் நோக்கி சற்று தூரத்திலிருந்து அடித்தார். அதை அஸ்பான் கையால் தட்டி விட்டார். பந்து மீண்டும் விம்பில்டன் வீரர் ஹிமாசின் கால்களுக்கு வர, ஹிமாஸ் கம்பம் நோக்கி அடிக்க, அதையும் தன் கையால் தட்டி விம்பில்டனின் தொடரான இரு முயற்சிகளையும் உடைத்தெறிந்தார் அஸ்பான்.
போட்டியின் 38வது நிமிடத்தில் விம்பில்டனிற்கு கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பை ஜெசான் பொறுப்பேற்று உதைக்க, உயர்ந்து வந்த பந்தை அஸ்பான் கம்பத்திற்கு மேலால் தட்டி அனுப்பினார்.
மீண்டும் போட்டியின் 43வது நிமிடத்தில் விம்பில்டன் கழக வீரர் மனாசிர் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை சிப்ரான் கோல் நோக்கி அடிக்க பந்து கம்பத்திற்கு அருகாமையால் வெயியேறியது.
முதல் பாதி: விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 1 – 0 நியூ ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்.
இரண்டாம் பாதியில் கோல் எண்ணிக்கையை சமப்படுத்த வேண்டும் என்ற வேகத்தோடு நியூ ப்ரண்ஸ் கழக வீரர்கள் காணப்பட, விம்பில்டன் கழக வீரர்கள் தமது கோல் கணக்கை அதிகரித்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் களம் கண்டதை காணமுடிந்தது.
போட்டியின் 53வது நிமிடத்தில் விம்பில்டன் அணிக்குக் கிடைத்த கோர்ணர் வாய்ப்பை அஹமட் அடிக்க, உயர்ந்து வந்த பந்தை நியாஜ் தலையால் முட்டி விட பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.
>> இலங்கை இராணுவ படைப் பிரிவுகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் குழு மட்ட முவுகள்
இரண்டு நிமிடங்களின் பின்னர் மீண்டும் விம்பில்டனின் சிசான் கொடுத்த நோர்த்தியான உயர்ந்த பந்துப் பரிமாற்றத்தை சிப்ரான் சிறப்பாக செயல்பட்டு தன் தலையால் முட்டி கோல் கம்பத்திற்குள் அனுப்ப, விம்பில்டனின் கோல் கணக்கு இரட்டிப்பானது.
கோல் போட்ட சிப்ரான் தன் டீ சேர்ட்டை கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்த நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டார்.
அதே நேரம், அது முறையற்ற கோல் என நியூ ப்ரண்ஸ் அணியின் தடுப்பு வீரர் சடீஸ்கான் கனி, நடுவரோடு வாய்த்தர்க்கம் புரிய நடுவர் கனிக்கும் மஞ்சள் அட்டை காண்பித்தார். அதனால் ஆத்திரமடைந்த கனி தன் டீ சேர்ட்டை கழற்றி எறிய நடுவர் சிவப்பு அட்டை காட்டி உடனடியாக மைதானத்தை விட்டு அவரை வெளியேற்றினார். இதனால் அதிர்ச்சியில் உறைந்தது நியூ ப்ரண்ஸ் கழகம்.
போட்டியின் 67வது நிமிடத்தில் நியூ ப்ரண்ஸ் வீரர் இம்தியால் கொடுத்த பந்தினை ஜாக்கிர் கம்பம் நோக்கி அடிக்க அதை இலகுவாகப் பிடித்துக் கொண்டார் இம்ரான்.
போட்டியின் 74வது நிமிடத்தில் விம்பில்டனின் சிசான் வழங்கிய பந்தினை ஹிமாஸ் சற்றுத் தொலைவிலிருந்து கம்பம் நோக்கி உதைக்க பந்து கம்பத்தின் மேலால் செல்ல சிறப்பான முயற்சி வீணானது.
தொடர்ந்து இரு அணியினரும் கோல் அடிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட, பந்து சரி சமமாக இரு கோல் கம்பங்களுக்கும் சென்றுவந்ததால் போட்டி விறுவிறுப்பின் உச்சத்தை அடைந்தது.
>> 19 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய வீரர்கள் இவர்கள் தான்
ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் நியூ ப்ரன்ஸ் வீரர் பாரிஸ் கொடுத்த பந்தினைப் பெற்ற இம்தியாஸ், விம்பில்டனின் இரண்டு தடுப்பு வீரர்களையும் கடந்து சென்று இம்ரானின் கைகளுக்கே பந்தினை தாரை வார்த்தார்.
போட்டியின் 86வது நிமிடத்தில் விம்பில்டன் வீரர் சிசான் கம்பம் நோக்கி அடிக்க அதை அஸ்பான் தடுத்தார். எனினும், பந்து மீண்டும் ஹிமாசின் கால்களுக்கே வர அதை ஹிமாஸ் கம்பம் நோக்கி அடித்தபோது பந்து கம்பத்திற்கு அருகாமையால் வெளியே சென்றது.
போட்டி நிறைவடையும் தருவாயான 89வது நிமிடத்தில் விம்பில்டன் அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஹிமாஸ் அடிக்க உயர்ந்து வந்த பந்தை நியாஜ் தலையால் முட்டி கம்பம் நோக்கி அனுப்பியபோதும், அதை அஸ்பான் லாபகமாய் பிடித்துக்கொள்ள இறுதி முயற்சியும் வீணானது.
இறுதியில் போட்டி முடிவடைந்ததாய் நடுவர் அறிவிக்க, விம்பில்டன் கழகத்தின் பின்கள வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அவர்கள் பலம் மிக்க நியூ ப்ரண்ஸ் கழகத்தினை 2 – 0 என வீழ்த்தி மூன்றாவது தொடர் வெற்றியோடு 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினர்.
முழு நேரம்: விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 2 – 0 நியூ ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
விம்பில்டன் விளையாட்டுக் கழகம்
ஹிமாஸ் 19’, சிப்ரான் 55’மஞ்சள் அட்டை
விம்பில்டன் விளையாட்டுக் கழகம்
நிஸாத் 20’, சிப்ரான் 55’
நியூ ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்
ஜாசிர் 61’, இம்தியால் 77’, இம்ஜாத் 86’சிவப்பு அட்டை
நியூ ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்
சடீஸ்கான் கனி 55’