IPL தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் செம் கரனை 18.50 கோடிகளுக்கு (இந்திய ரூபாய்) பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளதுடன், இலங்கை வீரர்கள் எவரும் எந்த அணிளாலும் வாங்கப்படவில்லை.
IPL 2023ம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றைய தினம் (23) கொச்சியில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த ஏலத்தில் இலங்கையின் 10 வீரர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.
>> மூன்றாவது முறையாக தொடர்ந்தும் LPL சம்பியனான ஜப்னா கிங்ஸ்
குறிப்பிட்ட இந்த வீரர்களிலிருந்து குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க ஆகியோரின் பெயர்கள் இருமுறை ஏலத்துக் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாலும், எந்தவொரு இலங்கை வீரர்களையும் வாங்குவதற்கு அணிகள் முன்வரவில்லை.
எனினும் சர்வதேச வீரர்களை பொருத்தவரை IPL வரலாற்றில் அதிகூடிய தொகைக்கு இங்கிலாந்து வீரர் செம் கரன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். அதேநேரம் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரரான கிரிஸ் கிரீனுக்கும் கடுமையான போட்டி காணப்பட்டது.
இதில் கிரிஸ் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணி 17.50 கோடிக்கு வாங்கியதுடன், சென்னை சுபர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாவுக்கு நட்சதிர சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸை வாங்கியது. IPL வரலாற்றை பொருத்தவரை இந்த மூன்று வீரர்களுக்கும் கொடுக்கப்பட்ட தொகையானது, முதல் 3 அதிகூடிய தொகையாக பதிவாகியது.
இவர்களுடன் மேற்கிந்திய தீவுகளின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிக்கோலஸ் பூரன் 16 கோடிக்கு விலைபோயிருந்தார். இவரை லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி வாங்கியிருந்ததுடன், இங்கிலாந்தின் மற்றுமொரு இளம் வீரர் ஹெரி புரூக் 13.25 கோடிக்கு வாங்கப்பட்டார். இவரை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியிருந்தது.
>> இந்திய தொடரில் இணையும் இளம் வீரர்கள்; முன்னணி வீரர்கள் நீக்கம்? | Sports RoundUp – Epi 228
இந்திய வீரர்களை பொருத்தவரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் மயங்க் அகர்வால் அதிகூடிய தொகைக்கு விலைபோயிருந்தார். இவரை 8.25 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியிருந்தது.
IPL வீரர்கள் ஏலம் நிறைவுபெற்றுள்ள நிலையில், தொடரானது எதிர்வரும் மார்ச் மாத இறுதிப்பகுதியில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<