கனடா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர்

383

கனடா கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் காப்பாளருமான புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நேபாள கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டார். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் குறித்த பதவியை இராஜினாமா செய்துள்ளதாக நேபாள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனடா கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக புபுது தசநாயக்கவை நியமித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை அவர் கனடா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டிகளில் நேபாள அணி விளையாடவுள்ள பின்னணியில் தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது.

52 வயதான புபுது தசநாயக்க 1993-94 ஆம் ஆண்டுகளில் இலங்கை அணிக்காக 11 டெஸ்ட், 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தொடர்ந்து அவர் 2001 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் 2005 ஆம் ஆண்டு அயர்லாந்துடனான உலகக் கிண்ண தகுதிகான் போட்டியில் கனடா அணிக்காக விளையாடினார்.

இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2011 வரை கனடா தேசிய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட தசநாயக்க 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் கனடா அணி தகுதிபெற பங்காற்றினார்.

அதனைத் தொடர்ந்து 2011 முதல் 2015 வரை நேபாள கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், 2016 முதல் 2019 வரை அமெரிக்கா கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<