காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்படுவது குறித்து முன்னாள் வீரர்கள் கவலை

682

வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையை அண்மித்த பகுதியை யுனெஸ்கோ நிறுவனம் மரபுரிமைப் பகுதியாக அறிவித்துள்ளது. அதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்களை நீக்குமாறும், இல்லாவிடின் காலி கோட்டையை மரபுரிமை பட்டியலில் இருந்து நீக்குவதாகவும் யுனெஸ்கோ நிறுவனம் 2007ஆம் ஆண்டு முதல் இலங்கையை அறிவுறுத்தி வந்தது.

காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம் கேள்விக்குறி

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக பிரதமர் மற்றும் உரிய விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கிடையில் காலி கோட்டையை பாதுகாக்கும் விடயம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. இதன்முடிவில் காலி கோட்டைக்கு அண்மித்த பகுதியில் உள்ள, அதாவது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிரதான பார்வையாளர் அரங்கு மற்றும் நிர்வாக கட்டிடத்தை விரைவில் அகற்றிவிட்டு மைதானத்தை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன.  

இந்த நிலையில், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டின் கோட்டையாக விளங்குகின்ற காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்றுவது தொடர்பில் வெளியான செய்திகளுக்கு பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் தமது எதிர்ப்பினையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க இதுதொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

”உலக மரபுரிமை இடமாக அறிவிக்கப்பட்டுள்ள காலி கோட்டையை பாதுகாப்பதோடு, எமது கிரிக்கெட்டை உலக மட்டத்துக்கு கொண்டு சென்ற காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தொடர்ந்து பயன்படுத்த சரியான செயற்றிட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சும், இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் முன்னெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ரசிகர்களிடம் முதன்முறையாக வெறுப்பை சம்பாதித்த ஏபி டி வில்லியர்ஸ்

மேலும்,தற்போது உருவெடுத்துள்ள பிரச்சினைக்கு முன்னாள் கிரிக்கெட் நிர்வாக சபையும், கடந்த அரசாங்கத்தின் தேவையற்ற தீர்மானங்களுமே காரணமாகும். காலி கோட்டை உலக மரபுரிமை இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்த விடயம். மறுமுனையில் காலி கிரிக்கெட் மைதானத்தை எம்மால் இழக்க முடியாது. இதனால் காலி கோட்டையுடன், கிரிக்கெட் மைதானத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உண்டு.

தற்போது விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பாக அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். ஆனால், கிரிக்கெட் நிர்வாக சபையொன்று இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது. எனினும், இந்தப் பிரச்சினைக்கு விளையாட்டுத்துறை அமைச்சும், இலங்கை கிரிக்கெட்டும்தான் உடனடி தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” எனவும் அர்ஜுன தெரிவித்தார்.

இதேநேரம், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன் நேற்று (19) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இலங்கை அணியின் சுழல் வீரர் ரங்கன ஹேரத் பதிலளித்தார்.  

அதில் அவர், ”ஒரு கிரிக்கெட் வீரராக இந்த செய்தியை கேள்விப்பட்டதும் நான் மிகவும் கவலை அடைந்தேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த மைதானத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ளேன். எனது வாழ்க்கையின் மறக்க முடியாத ஒரு மைதானமாக நான் இதை பார்க்கிறேன். அது மாத்திரமின்றி தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது அந்த மைதானத்தில் நூறு விக்கெட்டுக்களை வீழ்த்துவதற்கு எனக்கு இன்னும் ஒரேயொரு விக்கெட் மாத்திரம் தான் தேவைப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அணியின் மற்றுமொரு தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன இதுதொடர்பில் தனது டுவிட்டரில் கருத்து வெளியிடுகையில்,

உண்மையில் கவலையளிக்கின்றது. காலி கிரிக்கெட் மைதானம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு தனித்துவமான இடமாக உள்ளது. எமது இலங்கை அணிக்கு பல வெற்றிகளைத் தேடிக்கொடுத்த வெற்றிகரமாக டெஸ்ட் மைதானம் இதுவாகும். இந்த முடிவை அதிகாரிகளும், இலங்கை அரசாங்கமும் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

>> INSERT MAHELA TWEET IMAGE HERE <<