ICC‌ T20‌ ‌உலகக் கிண்ணத் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம்

ICC T20 World 2021

911

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தை அறிவிப்பதற்கான கால எல்லை நாளை வரை (10) மாத்திரமே நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு இலங்கை கிரிக்கெட் சபை தங்களுடைய குழாத்தை அறிவிப்பதற்காக தயாராகிவருகின்றது. அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ குழாம் அறிவிக்கப்படும் முன்னர், எமது இணையத்தளம், எதிர்பார்க்கக்கூடிய வீரர்களை கொண்ட குழாத்தை உருவாக்கியுள்ளது. 

ICC T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

கடந்த காலங்களில் திறமையை வெளிப்படுத்திவரும் வீரர்கள், அணியின் கட்டமைப்பு மற்றும் திறமை என்பவற்றை கருத்திற்கொண்டு, இந்த குழாத்தை நாம் தெரிவுசெய்துள்ளோம்.

குழாத்தின் முதன்மை வீரர்கள்

இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படுவதுடன், தனன்ஜய டி சில்வா உப தலைவராக பெயரிடப்படுவார். தசுன் ஷானக தலைமையில் இலங்கை அணி சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தி வருகின்றது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான T20I தொடர் மற்றும் தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வெற்றிக்கொண்டுள்ளது. 

தனன்ஜய டி சில்வா இலங்கை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரராக இருப்பார். குறிப்பாக, இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸை நகர்த்தக்கூடிய முக்கியமான பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், சுழல் பந்துவீச்சின் மூலமாகவும் இவர் இலங்கை அணிக்கு பலம் கொடுப்பார்.

இவர்களுடன், தோற்பட்டை உபாதையிலிருந்தும் கொவிட்-19 தொற்றிலிருந்தும் குணமடைந்துள்ள குசல் பெரேரா, உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் முதன்மை விக்கெட் காப்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஆரம்ப துடுப்பாட்டத்துக்கும் இவர் தன்னுடைய வேகமான ஆட்டத்தால் வலுகொடுப்பார்.

இதேநேரம், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக 23 வயதான இளம் வீரர் அவிஷ்க பெர்னாண்டோ செயற்படுவார் என்பதுடன், சரித் அசலங்க மத்தியவரிசை துடுப்பாட்டத்துக்கு பலம் கொடுப்பார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, துஷ்மந்த சமீர மற்றும் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க ஆகியோர் முதன்மை தெரிவாக உள்ளனர். இவர்கள் இருவரும், தென்னாபிரிக்க தொடருடன், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் செல்லவுள்ளனர். அதேநேரம், அடுத்த மாதம் 7ம் மற்றும் 9ம் திகதிகளில் நடைபெறவுள்ள ஓமான் அணிக்கு எதிரான பயிற்சி T20I தொடரில் இவர்கள் விளையாட மாட்டர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாற்று விக்கெட் காப்பாளர்/ஆரம்ப துடுப்பாட்ட வீரர்

அணியின் முதல் தெரிவு விக்கெட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக குசல் பெரேரா செயற்படுவார். எனினும், இவருக்கு மாற்றுவீரர் ஒருவரை நியமிக்கவேண்டிய தேவை உள்ளது.

இரண்டாவது விக்கெட் காப்பு, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மினோத் பானுக செயற்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த போதும், SLC அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டியில் மாத்திரமே 74 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதற்கு முன்னர், 7 இன்னிங்ஸ்களில் வெறும் 27 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். அத்துடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய இவர், சரியான துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தவில்லை.

இதன் காரணமாக இலங்கை அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் அனுபவ வீரர் தினேஷ் சந்திமாலை தெரிவுசெய்தது. எனவே, உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் அதிகமாக தினேஷ் சந்திமால் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இலங்கை அணியின் அனுபவ குறைவு அதிகமாக பேசப்பட்டுவரும் நிலையில், சந்திமாலின் வருகை அதனை சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது இலக்க துடுப்பாட்ட வீரர் 

முன்னாள் வீரர் குமார் சங்கக்கார ஓய்வுபெற்றதிலிருந்து பல்வேறு வீரர்கள் மூன்றாவது இலக்க துடுப்பாட்ட வீரர்களாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எனினும், இதுவரை சரியான ஒரு வீரர் மூன்றாமிலக்க வீரராக கண்டறியப்படவில்லை. எனினும், தற்போது பானுக ராஜபக்ஷ அல்லது கமிந்து மெண்டிஸ் ஆகியோரில் ஒருவர் மூன்றாம் இலக்க வீரராக களமிறக்கப்படலாம்.

பானுக ராஜபக்ஷ இயற்கையாகவே வேகமாக துடுப்பெடுத்தாடக்கூடியவர். எனினும், இவர் இந்திய அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடவில்லை. தற்போது, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியும், குறித்த இரண்டு போட்டிகளிலும் ஓட்டங்களின்றி வெளியேறியிருந்தார். எனினும், அவரது வேகமான துடுப்பாட்டத்தை கருத்திற்கொண்டு, உலகக் கிண்ண குழாத்தில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடியவர் என்றாலும், அவர் அணியில் இணைக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம், அவருடைய துடுப்பாட்டம். அண்மையில் நடைபெற்றுமுடிந்த SLC அழைப்பு T20 தொடரில் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அரைச்சதம் கடந்து, தேசிய அணியில் இடத்தை பிடித்திருந்தார். அத்துடன், எந்த இடத்திலும் துடுப்பெடுத்தாடக்கூடிய திறமையை கொண்டுள்ளதால், T20 உலகக்கிண்ண குழாத்தில் இவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பந்துவீச்சு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தொடருக்கு முன்னர், அங்கு ஐ.பி.எல். தொடர் நடைபெறவுள்ளது. எனவே, ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிகமாக சாதகத்தை கொண்டிருக்கும். எனவே, இலங்கை அணியின் அதிக சுழல் பந்துவீச்சாளர்கள் தெரிவுசெய்ய வாய்ப்பிருக்கிறது.

தென்னாபிரிக்க தொடரில் சிறந்த திறமையை வெளிப்படுத்திவரும் பிரவீன் ஜயவிக்ரம மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய மஹீஷ் தீக்ஷன ஆகியோர் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறும் முதன்மை சுழல் பந்துவீச்சாளர்களாக இருப்பர். 

அகில தனன்ஜய அதிகமாக எதிரணிக்கு ஓட்டங்களை வழங்கினாலும், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடியவர். எனவே, இவருக்கும் உலகக் கிண்ண குழாத்தில் வாய்ப்பு கிடைக்கும். இவர்களுடன், தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, சரித் அசலங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் சுழல் பந்துவீச்சாளர்களாக செயற்படுவர்.

வேகப் பந்துவீச்சை பொருத்தவரை, துஷ்மந்த சமீர முதன்மை பந்துவீச்சாளராக இருப்பார். இவருடன், பினுர பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்களுடன், தசுன் ஷானக மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரும் வேகப் பந்துவீச்சுக்கு உதவுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுடன், உபாதைகள் மற்றும் பயிற்சிகளை கருத்திற்கொண்டு லஹிரு மதுஷங்க, ரமேஷ் மெண்டிஸ், நுவான் பிரதீப் மற்றும் லஹிரு குமார ஆகியோர் மேலதிக வீரர்களாக செயற்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை உத்தேச குழாம்!

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பிரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, அகில தனன்ஜய, பினுர பெர்னாண்டோ

மேலதிக வீரர்கள் – லஹிரு மதுஷங்க, ரமேஷ் மெண்டிஸ், நுவான் பிரதீப், லஹிரு குமார

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…