இலங்கை றக்பி அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ப்ரியந்த ஏகநாயக்க தேசிய விளையாட்டு பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் முன்னாள் சகலதுறை விளையாட்டு நட்சத்திரமான ப்ரியந்த ஏகநாயக்க, முன்னதாக 2019 இல் தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினராக பணியாற்றியிருந்தார்.
இலங்கையின் மிகவும் பிரபலமான றக்பி வீரர்களில் ஒருவராக வலம்வந்த இவர், இலங்கையின் முன்னணி றக்பி கழகங்களில் ஒன்றான CH & FC கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதேபோல, CR & FC கழகம், கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் தேசிய றக்பி அணியின் தலைவராகவும் செயல்பட்டார். 1989 முதல் 1992 வரை நான்கு தொடர்ச்சியான ஆசியக் கிண்ண றக்பி போட்டிகளில் இலங்கையின் தலைவராகப் பணியாற்றிய ஒரே வீரராக வரலாற்றில் இடம்பிடித்த இவர், அதே காலகட்டத்தில் ஹொங்கொங் எழுவர் றக்பி தொடரிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
>>இலங்கையின் 4 விளையாட்டு சங்கங்களுக்கு இடைக்காலத்தடை<<
அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக ஆசிய நாடுகள் முழுவதிலும் உள்ள சிறந்த றக்பி வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற ஆசிய பார்பேரியன்ஸ் அழைப்பு றக்பி தொடரில் இலங்கை அணியின் தலைவராக பணியாற்றினார்.
மறுபுறத்தில் இலங்கையின் முன்னணி கூடைப்பந்து வீரர்களில் ஒருவராக வலம்வந்த இவர், தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற 7ஆவது ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார., மேலும், தென் கொரியாவில் இருந்து பயிற்சி டிப்ளோமாவைப் பெற்றார். ஆரம்பத்தி;ல் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக அவர் பிரகாசித்த போதிலும், இறுதியில் றக்பி விளையாட்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இதனிடையே, 2006இல் இலங்கை றக்பி சங்கம் (SLRFU) மற்றும் ஆசிய றக்பி சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், பின்னர் 2016இல் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) பணியாற்றினார்.அதேபோல, 2018 முதல் 2020 வரை இலங்கை பேஸ்போல் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<