அவுஸ்திரேலிய முதல் டெஸ்ட்டில் ப்ரித்வி சாஹ்வினை இழக்கும் இந்திய அணி

297

உபாதைக்கு ஆளாகியிருக்கும் இந்திய அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ப்ரித்வி சாஹ் அடிலைட் நகரில் நடைபெறவிருக்கும் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட்  தொடரின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அவுஸ்திரேலிய வீரர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.

>>நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்

இந்த சுற்றுப் பயணத்தில் முதல் கட்டமாக இடம்பெற்ற T20 தொடர் 1-1 என சமநிலை அடைந்த நிலையில் தற்போது இந்திய அணி டெஸ்ட் தொடருக்காக தயராகி வருகின்றது. அந்த வகையில் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி அவுஸ்திரேலிய பதினொருவர் அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகின்றது.

சிட்னியில் நடைபெற்று வரும் குறித்த பயிற்சிப் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ப்ரித்வி சாஹ் டீப் மிட் விக்கெட் திசையில் பிடியெடுப்பு ஒன்றினை எடுக்க முயன்ற போது இடது காலில் உபாதைக்கு உள்ளாகிய காரணத்தினாலேயே அவருக்கு அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போயிருக்கின்றது.

ப்ரித்வி சாஹ்வின் உபாதை பற்றி இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “சாஹ்வினை பரிசோதித்த போது அவரது (கால்) மூட்டுக்கள் இணையும் இடத்தில் இருக்கும் இழையில் உபாதை ஏற்பட்டிருப்பது அறியப்பட்டுள்ளது“ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ப்ரித்வி சாஹ் இல்லாதது அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பாரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. உபாதைக்கு ஆளாக முன்னர் இந்த பயிற்சிப் போட்டியில் ப்ரித்வி சாஹ் உறுதியான அரைச்சதம் ஒன்றுடன் 66 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரின் மூலமே சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாயிருந்த 19 வயதான ப்ரித்வி சாஹ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் கடந்ததோடு, குறித்த டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்சுகளில் மட்டும் துடுப்பாடி 237 ஓட்டங்களை குவித்து இந்திய அணி தொடர் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாஹ் தற்போது உபாதைக்குள்ளாகிய காரணத்தினால் அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அவரின் இடத்தினை தமிழகத்தினை சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான முரளி விஜய் எடுத்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க