இலங்கையில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் நோக்கில் இலங்கை கிரிக்கெட்டின் தேசிய பாதை திட்டத்தின் ஓர் அங்கமாக Prima Group Sri Lanka நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறுகின்ற இந்த ஆண்டுக்கான பிரீமா (Prima) 15 வயதின் கீழ் இளையோர் கிரிக்கெட் லீக் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் நாடு பூராகவும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட அதி சிறந்த 15 வயதின் கீழ் பாடசாலை வீரர்கள், 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கண்டி, காலி மற்றும் தம்புள்ள என பெயரிடப்பட்டுள்ளன. போட்டிகள் அனைத்தும் கொழும்பு பல்கலைக்கழக மைதானம், இலங்கை வர்த்தக சங்க மைதானம், கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானம் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மைதானம் உள்ளிட்ட 4 மைதானங்களில் நடைபெறவுள்ளன.
போட்டித்தொடரை பொருத்தவரை ஒவ்வொரு அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், இதில் நான்கு இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 28ஆம் திகதி நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில் வெற்றியீட்டும் 2 அணிகளும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் பிரீமா குழுமம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தப் போட்டித் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் உள்ள இலங்கை வர்த்தக சங்கத்தில் இடம்பெற்றது.
- இலங்கைக்கு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர
- மூன்றாவது போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு ; புதிய வீரர்களுக்கு வாய்ப்பு!
- சாதனையுடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை
இதில் கலந்துகொண்டு பேசிய இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, ‘எமது வருடாந்த நாட்காட்டியில் இது ஒரு முக்கியமான தொடராகும். எதிர்கால தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக இது நடத்தப்படுகிறது. மேலும் பிரீமா குழுமத்தின் தொடர்ச்சியான பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம்.’ என தெரிவித்தார்.
பிரீமா குழுமம் மற்றும் சிலோன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸின் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன கூறுகையில், பிரீமா 15 வயதின் கீழ் இளையோர் கிரிக்கெட் லீக் என்பது எதிர்கால கிரிக்கெட் ஜாம்பவான்கள் உருவாக்கும் ஒரு களமாகும். அவர்களின் பயணத்தில் பங்கேற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், விளையாட்டின் மீதான அவர்களின் ஆர்வத்தை தூண்டவும் ஒரு தளத்தை வழங்குகிறோம். இந்த ஆண்டின் தொடரை ஆரம்பிக்கும்போது, திறமை, விளையாட்டு உணர்வு மற்றும் போட்டியின் தளராத மனப்பான்மை ஆகியவற்றின் சிறப்பான வெளிப்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த இளம் திறமைகளில் முதலீடு செய்வதன் மூலம், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க நாங்கள் நம்புகிறோம். அதே வேளையில், அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்கள் பெரிதாக கனவு காணவும், சிறப்புக்காக முயற்சிக்கவும் ஊக்குவிக்கிறோம்.
‘இலங்கையில் கனிஷ்ட கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நேர்மறையாக பங்களிக்கும் வெற்றிகரமான பிரீமா 15 வயதின் கீழ் இளையோர் கிரிக்கெட் லீக் தொடரை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கியதற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு பிரீமா குழுமம் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என்று அவர் மேலும் கூறினார்.’
>>Photos – Press Conference – Prima Under 15 Sri Lanka Youth League 2024<<
2007ஆம் ஆண்டு முதல் 15 வயதின் கீழ் இளையோர் கிரிக்கெட் லீக் தொடரின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களாக பிரீமா குழுமம் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மாவட்டங்களையும், பின்னர் தங்கள் மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை இந்த தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதேபோல, தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மற்றும் தற்போதைய பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரின் மூலம் தமது கிரிக்கெட் வாழ்க்கைக்கான முதலாவது அடித்தளத்தை அமைத்துக்கொண்டாரகள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<