சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் நிலையை பிடித்திருக்கும் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை, தங்களுடைய சொந்த மண்ணில் இலங்கை அணி சந்திக்கவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (10) ஆரம்பமாகிறது.
வரலாற்றின் ஊக்குவிப்புடன் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் மோதும் இலங்கை
ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும்..
பலமும், அனுபவமும் கூடிய இங்கிலாந்து அணியா? அல்லது புதிய மாற்றங்களுடன் களமிறங்க இருக்கும் இலங்கை அணியா? என்ற கேள்வி ஒருபக்கம். அடுத்து, சொந்த மண் என்பதால் இலங்கை அணியால் வெல்ல முடியும் என்ற வரலாறு மறுபக்கம். ஆனால், இத்தகையை நம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அணிகளை மண்டியிடச் செய்து, பலம் பொருந்திய அணியென இங்கிலாந்து தங்களை அடையாளப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியை பொருத்தவரையில், அணித் தலைவர் இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களாகவும், இந்த தொடரில் எதிர்பார்க்கக்கூடிய வீரர்களாகவும் மாறியுள்ளனர். இயன் மோர்கன் இதுவரையில் 86 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடாத்தியுள்ளார். இதில் 52 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. முக்கியமாக, இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களை மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கைப்பற்றி, தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
மோர்கனைத் தொடர்ந்து, துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராவார். காரணம், இறுதியாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணியில் இவர் விளையாடியதுடன், அதிகூடிய ஓட்டம் பெற்ற வீரர்கள் பட்டியலில், சங்கக்காரவை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
இவர், இலங்கையில் துடுப்பெடுத்தாடிய 7 இன்னிங்ஸ்களில் 73.40 என்ற சராசரியில் 367 ஓட்டங்களை குவித்துள்ளார். அதுமாத்திரமின்றி நடைபெற்று முடிந்த பயிற்சிப் போட்டியிலும் சிறப்பாக ஆடியுள்ளார். இதன்மூலம் இம்முறை ஜோ ரூட் மீதான பார்வை அதிகரித்துள்ளது. இவர்களுடன் பென் ஸ்டோக்ஸ், கிரிஸ் வோகஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோரும் இலங்கை அணிக்கு சவால் கொடுக்கக்கூடிய முக்கிய வீரர்களாக உள்ளனர்.
முதல் போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச பதினொருவர்
ஜேசன் ரோய், ஜொனி பெயார்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஆடில் ரஷீட், செம் கரன், கிரிஸ் வோகஸ், மார்க் வூட்
இங்கிலாந்து அணியானது பலம் வாய்ந்த வீரர்களை கொண்டிருக்கும் அதேவேளை, இலங்கை அணியிலும் எதிர்பார்க்கக்கூடிய முக்கிய வீரர்களாக அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் அணித் தலைவராக செயற்பட்ட தினேஷ் சந்திமால் தற்போது ஒருநாள் போட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரின் 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய இவர், ஒரு அரைச்சதம் (55*) அடங்காலாக 90 ஓட்டங்களை பெற்றிருந்தார். தலைமைத்துவத்தை பொருத்தவரையில், இறுதியாக பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு தலைமை தாங்கி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.
அதுமாத்திரமின்றி, தற்போது இலங்கை அணியின் அனுபவ வீரராகவும், நிதானமான துடுப்பாட்ட வீரராகவும் உள்ள சந்திமாலின் பங்கு அணிக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை லசித் மாலிங்க, இந்த தொடரில் அணியின் பந்துவீச்சை வழிநடாத்தக்கூடிய முக்கிய வீரர். இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை சார்பில் அதிக விக்கெட்டுகளை (39 விக்கெட்டுகள்) வீழ்த்தியவர் இவர்தான். ஒரு வருடத்துக்கு பின்னர் தேசிய அணிக்கு திரும்பிய மாலிங்க (ஆசியக் கிண்ணம்), சிறந்த பெறுபேற்றினை பெற்றிருந்தார் என்பதுடன், அவரது பந்து வீச்சு வேகத்தையும் அதிகரித்திருந்தார். இதனால், இவரின் பந்து வீச்சு பங்களிப்பு அணிக்கு மிகப்பெறும் பலம்.
லசித் மாலிங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோருடன் சர்வதேச அனுபவம் கொண்ட சகலமுறை வீரர் திசர பெரோ, சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜய, குசல் பெரேரா மற்றும் அனுபவ வீரர் உபுல் தரங்க ஆகியோரும் இந்த தொடரில் இலங்கை அணியின் துறுப்புச்சீட்டுகள் எனக் குறிப்பிடலாம். காரணம் உள்ளூர் போட்டிகளில் இவர்கள் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
Photos: Sri Lanka practice session before 1st ODI against England
ThePapare.com | Viraj Kothalawala | 09/10/2018..
எவ்வாறிருப்பினும் இலங்கை அணியின் அனுபவ வீரராகவும், மத்திய வரிசையை பலப்படுத்தும் நம்பிக்கைக்குறிய வீரராகவும் இருந்த முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை ஒருநாள் குழாத்தில் இணைக்கப்படாமை அணிக்கு பெரும் இழப்பாகவே கருதப்படுகின்றது. இதனை அணித் தலைவர் சந்திமால், அண்மைய செய்தியாளர் சந்திப்போதும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, மெதிவ்ஸின் நிலைக்கு யார் இலங்கை அணியில் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு இளம் வீரர்களில் ஒருவர் நாளைய போட்டியில் பரீட்சிக்கப்படுவார். அது தனன்ஜய டி சில்வாவாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
முதல் போட்டிக்கான இலங்கை உத்தேச பதினொருவர்
உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால் (தலைவர்), குசல் ஜனித் பெரெரா, தசுன் சானக, திசர பெரேரா, அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகன், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க
ஆசியக் கிண்ணத்தில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்தாலும், சொந்த மண்ணில் இலங்கை வீரர்கள் வளர்ச்சியானது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இறுதியாக நடைபெற்ற SLC T20 லீக் மற்றும் தென்னாபிரிக்க தொடர் என்பவற்றில் இலங்கை வீரர்களின் ஆட்டங்கள் அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய ஆட்டங்களாக அமைந்திருந்தன.
எனவே, இலங்கை அணியால் தங்களது சொந்த மண்ணில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு சவால் விடுக்க முடியும். அதேவேளை நாளைய முதல் போட்டியானது, தொடருக்கான சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய போட்டியாகும். இதனால் இலங்கை அணியின் முன்னேற்றம் இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்துக்கொண்டு செயற்படுவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (10) பிற்பகல் 2.30 மணிக்கு தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (பகலிரவு போட்டி) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<