சிறந்த திட்டமின்றி இலங்கை கால்பந்தை முன்னேற்ற முடியாது – அமானுல்லா

325

ஒழுங்கான திட்டமிடல்கள் இல்லாமல் இலங்கையில் கால்பந்து விளையாட்டை முன்னேற்ற முடியாது என்று முன்னணி பயிற்றுவிப்பாளர் மொஹமட் அமானுல்லா தெரிவித்துள்ளார்.

இலங்கை கால்பந்து அணியின் முன்னாள் தலைவரும், 23 வயதின்கீழ் தேசிய கால்பந்து அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளருமான மொஹமட் அமானுல்லா, இலங்கை கால்பந்தின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை திங்கட்கிழமை (19) ஏற்பாடு செய்திருந்தார்.

இலங்கை அணி அண்மைக்காலமாக காண்பித்த மோசமான ஆட்ட வெளிப்பாடுகளின் காரணமாக பிபாவின் சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரப்படுத்தலில் இலங்கை மிகவும் பின்னடைவை சந்தித்து, தற்போது 207ஆவது இடத்தில் உள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில் தற்போதைய கால்பந்து குறித்து கருத்து தெரிவித்த அமானுல்லா, ”நான் இலங்கை கால்பந்திற்கு ஆற்றிய சேவையின் காணரமாகவே இன்று இந்த விளையாட்டின் மூலமாக என்னை அனைவருக்கும் தெரியும். இன்று இந்த நிலையில் நான் இருக்க கால்பந்து விளையாட்டே காரணம். எனினும், இலங்கை கால்பந்தின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது முன்னாள் வீரராக மிகவும் கவலையாக உள்ளது. இதன் காரணமாகவே இன்று நான் ஊடகங்கள் முன் வந்துள்ளேன்.

இலங்கையில் இன்றுவரை, இந்த வருடத்திற்கான சுபர் லீக் தொடர் ஆரம்பிக்கப்படவில்லை. உள்ளூர் போட்டிகள் இன்றி வீரர்களுக்கு தமது திறமையை அதிகரிக்க முடியாது. இதனால் வீரர்களும் கழகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் தமக்கான சம்பளம் இன்றியும், கழகங்கள் தமது வீரர்களை உரிய விதத்தில் கவனிக்க முடியாமலும் தவிக்கின்றன. பல கழகங்கள் செயலற்று காணப்படுகின்றன”.

அண்மையில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்து போட்டித் தொடர்களில் இலங்கை இளையோர் அணிகள் மற்றும் மகளிர் அணிகள் தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து வந்தன. இந்த தோல்விகளின்போது அணித் தேர்வு குறித்து பல வகையில் விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து கருத்து தெரிவித்த அமானுல்லா,

”குறித்த ஒரு சர்வதேச தொடர் இருப்பது தொடர்பில் அனைவரும் முன்கூட்டியே அறிந்திருப்பர். எனவே, அதனை இலக்காக கொண்டு 17 வயதின்கீழ், 19 வயதின்கீழ் என அனைத்து பிரிவுகளுக்கும் சுற்றுப் போட்டிகளை நடத்தலாம். அதில் பிரகாசிக்கின்ற வீரர்களை தேசிய அணிக்கு உள்வாங்களாம். ஆனால் இலங்கையில் அவ்வாறான எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. அதேபோன்றுதான் மகளிர் கால்பந்திலும். அவர்களுக்கும் நீண்ட காலமாக போட்டிகளில் ஆடுவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை. இவ்வாறான ஒரு நிலையில் எமது வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பிரகாசிப்பது கடினம்” என தெரிவித்தார்.

இலங்கை தேசிய அணி வீரர்களின் தற்போதைய நிலைமையை நினைத்து கவலையடைவதாகத் தெரிவித்த அமானுல்லா, ஏற்கனவே வீரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டும், பின்னர் இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் தான் அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்தமை தனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் இலங்கையில் கால்பந்து விளையாட்டை மீண்டும் அபிவிருத்தி செய்து, வீரர்களும் அதனால் சிறந்த பலனைப் பெற வேண்டும் என்பதற்காக தான் தொடர்ந்தும் செயற்படுவேன் என்று குறிப்பிட்ட அமானுல்லா அதற்காக அனைத்து தரப்பினரதும் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் வேண்டிக்கொண்டார்.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<