ஹமீட் அல் ஹுஸைனியை வீழ்த்திய ஸாஹிராவுக்கு ஜனாதிபதிக் கிண்ணம்

726
Image courtesy - Daily mirror

மிகவும் விறுவிப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி அணியை பெனால்டி முறையில் 4-3 என வெற்றிகொண்ட கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி இம்முறைக்கான ஜனாதிபதிக் கிண்ண பாடசாலைகள் கால்பந்து தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது.

மொத்தம் 20 அணிகள் பங்கு கொண்ட இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத ஹமீட் அல் ஹுஸைனி மற்றும் ஸாஹிரா கல்லூரி அணிகள், கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் சுமார் 8,000 இற்கும் அதிகமான ரசிகர்களுக்கு முன்னிலையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தின.  

ஜனாதிபதிக் கிண்ணத்திற்காக ஹமீட் அல் ஹுஸைனி – ஸாஹிரா பலப்பரீட்சை

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியின் 80..

போட்டி ஆரம்பமாகி 5ஆவது நிமிடத்தில் ஹமீட் அல் ஹுஸைனியின் முன்கள வீரர் ரிஷான் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி வேகமாக உயர்த்தி அடித்த பந்து கோலுக்குள் சென்றுகொண்டிருக்கையில், ஸாஹிரா கோல் காப்பாளர் ஸாகிர் பந்தை கோல் எல்லையில் இருந்து வெளியே தட்டிவிட்டார்.

ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை, அவ்வணி வீரர்கள் கோலுக்குள் செலுத்தினர். இதன்போது கோலுக்கு அண்மையில் இருந்த தடுப்பு வீரர் பந்தை அங்கிருந்து வெளியேற்றி ஹமீட் அல் ஹுஸைனியின் இரண்டாவது கோல் முயற்சியையும் முறியடித்தனர்.

மேலும் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் பெனால்டி எல்லையில் பந்தைப் பெற்ற ஸாஹிரா வீரர் மொஹமட் ஹம்மாட் அதனை பாய்ந்து சுழற்சி முறையில் கோலுக்குள் அடித்தார். எனினும், பந்து கம்பங்களை விட உயர்ந்து சென்றது.

பின்னர், 35 நிமிடங்கள் கடந்த நிலையில் ஸாஹிரா வீரர்கள் எல்லையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை ஹம்மாட் ஹெடர் செய்தார். எனினும் பந்து கம்பங்களை விட அதிகமாக விலகிச் சென்றது. இது ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பாகவே இருந்தது.

எனவே, மிகவும் விறுவிறுப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற முதல் பாதி எந்தவித கோல்களும் இன்றி நிறைவுற்றது.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 0 – 0 ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்தில் ஹமீட் அல் ஹுஸைனி அணியின் வலது புற கோணர் திசையில் ஸாஹிரா வீரர்களுக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது கோல் நோக்கி அனுப்பப்பட்ட பந்தை ஹமீட் அல் ஹுஸைனி கோல் காப்பாளர் சப்ரின் வெளியே தட்டி விட்டார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் தமக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை ஸாஹிரா வீரர் ஹம்மாட் கோல் கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றுக்கொடுத்து, அணியை முன்னிலைப்படுத்தினார்.

இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை கால்பந்து மைதானம் திறந்துவைப்பு

கோட்டே – பெத்தகானவில் உள்ள இலங்கை கால்பந்து..

55ஆவது நிமிடத்தில் தமது பின்களத்தில் இருந்து எதிரணியின் கோல் திசைக்கு உயர்த்தி வழங்கப்பட்ட பந்தை ஓடிச் சென்று பெற்ற ஹமீட் அல் ஹுஸைனி அணியின் தலைவர் மொஹமட் அமான், அதனை முன்னோக்கி எடுத்துச் சென்றார். எனினும் எதிரணியின் கோல் எல்லையில் ஸாஹிரா பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளரின் தடுப்புக்களைத் தாண்டி அமானால் பந்தை கோலாக நிறைவுசெய்ய முடியாமல் போனது.

ஆட்டத்தின் 60 நிமிடங்கள் கடந்த நிலையில், மத்திய களத்தில் இருந்து எதிரணியின் எல்லைக்கு வழங்கப்பட்ட பந்தைப் பெற்ற ஹமீட் அல் ஹுஸைனி வீரர் ரிஷான் அதனை முன் களத்தின் வலது புறத்தில் இருந்து கோல் எல்லைக்குள் செலுத்தினார். இதன்போது ஸாஹிரா வீரர் அக்தார் கோல் எல்லையில் இருந்து பந்தை உதைந்து வெளியேற்றினார்.   

எனினும், ஆட்டத்தின் 65 நிமிடங்கள் கடந்த நிலையில் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களுக்கு அதிஷ்ட நிமிடமாக இருந்தது. தமக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்து பல வீரர்களது கால்களில் பட்டு தல்லாடிக்கொண்டிருந்த வேளையில் இறுதியாக ஹமீட் அல் ஹுஸைனி வீரர் ரிஷானின் காலில் பட்டு பந்து கம்பங்களுக்குள் சென்றது. எனவே, அந்த கோல் மூலம் ஹமீட் அல் ஹுஸைனி அணி போட்டியை சமப்படுத்தியது.

அதன் பின்னர் இரு அணிகளும் தமது வெற்றி கோலுக்காக ஆட்டத்தின் இறுதிவரை போராடியும் அவர்களால் அடுத்த கோலைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 1 – 1 ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனால்டி உதையின் நிறைவில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி வீரர்கள் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கினர்.

விருதுகள் 

இறுதிப் போட்டியின் சிறந்த வீரர்
மொஹமட் ஹம்மாட் – ஸாஹிரா கல்லூரி

தொடரின் சிறந்த கோல் காப்பாளர்
மொஹமட் ஸாகிர் – ஸாஹிரா கல்லூரி

தொடரின் சிறந்த வீரர்
மொஹமட் ரிஷான் – ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

தொடரில் அதிக கோல் பெற்ற வீரர்
மொஹமட் ரிஷான் – ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி (6 கோல்கள்)