கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியின் 80ஆம் ஆண்டு மாணவர்கள் ஏற்பாடு செய்து நடாத்தும் ஜனாதிபதிக் கிண்ண பாடசாலைகள் கால்பந்து தொடரின் காலிறுதிகள் நிறைவுற்ற நிலையில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி மோதல்களுக்கு தெரிவாகியுள்ளன.
போட்டியை ஏற்பாடு செய்து நடாத்தும் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி மற்றும் அழைப்பு அணிகள் உள்ளடங்களாக மொத்தம் 20 அணிகள் பங்கு கொண்ட இந்த தொடர் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி மற்றும் லும்பினி கல்லூரி அணிகளுக்கு இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் இடம்பெற்ற மோதலுடன் ஆரம்பமாகியது. அதே ஆரம்ப நாளில் கொழும்பு ஸாஹிரா மற்றும் கந்தானை டி மெசனொட் கல்லூரி அணிகளும் அதே மைதானத்தில் மோதின.
ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் கால்பந்து போட்டி இம்மாதம் ஆரம்பம்
இலங்கை அணியின் முன்னாள் வீரர் நிசாம் பக்கீர் அலியை… இலங்கை பாடசாலைகள் கால்பந்து……
அதனைத் தொடர்ந்து அடுத்த நாட்களில் காலிறுதி வரையிலான அனைத்துப் போட்டிகளும் கொழும்பு சிடி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றன.
காலிறுதி வரையிலான போட்டிகளின் முடிவுகள்
கொழும்பு ஸாஹிரா கல்லூரி 4 – 3 டி மெசனொட் கல்லூரி
ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி 7 – 0 லும்பினி கல்லூரி
கொழும்பு இந்துக் கல்லூரி 2 – 0 ஆனந்த கல்லூரி
கம்பளை ஸாஹிரா கல்லூரி 1 – 0 பதுரியா மத்திய கல்லூரி
புனித பேதுரு கல்லூரி 3 – 0 அல் முபாரக் கல்லூரி, மல்வானை
தர்ஸ்டன் கல்லூரி 1 – 0 டி.எஸ். சேனநாயக்க கல்லூரி
வெஸ்லி கல்லூரி 0 (4) – (2) 0 நாலந்த கல்லூரி
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 4 – 0 கம்பளை ஸாஹிரா கல்லூரி
களுத்தறை முஸ்லிம் கல்லூரி 1 – 0 TB ஜாயா கல்லூரி (Walk Over)
கேட்வே கல்லூரி 0 (5) – (4) 0 புனித பேதுரு கல்லூரி
புனித பெனடிக்ட் கல்லூரி 4 – 0 தர்ஸ்டன் கல்லூரி
இசிபதன கல்லூரி 3 – 2 கொழும்பு இந்துக் கல்லூரி
காலிறுதிச் சுற்று
முதல் கட்டப் போட்டிகளின் நிறைவில், காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் கடந்த 28ஆம் திகதி சிடி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றன. இந்த சுற்றுப் போட்டியின் ஆட்டங்களின் ஒவ்வொரு பாதியும் 30 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் களுத்தறை முஸ்லிம் கல்லூரி
இவ்விரு கல்லூரி அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது காலிறுதியின் முதல் பாதியில் எந்த அணியினராலும் கோல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
காயமடைந்துள்ள நெய்மார் உலகக் கிண்ணத்தில் ஆடுவதில் நெருக்கடி
பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து அணியின் முன்கள வீரர் நெய்மார் JR இற்கு காலில்……
இந்நிலையில் இரண்டாவது பாதியில் இரு தரப்பினரும் தமது முதல் கோலுக்காக முயற்சித்த போதும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. எனினும், போட்டி நிறைவடைவதற்கு 3 நிமிடங்கள் எஞ்சியிருக்கையில் மாரிஸ் ஸ்டெல்லா அணி வீரர் W.R. நிஷோத தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
அவரது கோலின் மூலம் மாரிஸ் டெல்லா அணியினர் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தெரிவாகிய முதல் அணியாக தம்மைப் பதிவு செய்துகொண்டனர்.
புனித பெனடிக்ட் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி
சம பலத்துடன் ஆடிய இந்த இரு கல்லூரி வீரர்களினாலும் போட்டியின் நிறைவு வரையில் எந்தவொரு கோலையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
இதன் காரணமாக வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக இரு தரப்பினருக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது, 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற வெஸ்லி கல்லூரியினர் அரையிறுதிக்குத் தெரிவாகினர்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரி எதிர் கேட்வே கல்லூரி
இந்த தொடரில் பலம்மிக்க புனித பேதுரு கல்லூரி அணியினரை பெனால்டியில் வீழ்த்திய கேட்வே கல்லூரி வீரர்கள் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணியினருக்கும் பெரிதும் அழுத்தம் கொடுத்தனர்.
எனினும், போட்டியின் 28ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ஸாஹிரா வீரர் மொஹமட் ஹம்மாட் தமது தரப்பினருக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
இரண்டாம் பாதியில், 44ஆவது நிமிடத்தில் ஹம்மாட் தனது இரண்டாவது கோலையும் பெற்று அணியை 2 கோல்களால் முன்னிலைப்படுத்தினார். அதற்கு அடுத்த நிமிடம் அவ்வணியின் ராஸாவும் மற்றொரு கோலைப் பெற்றுக் கொடுத்தார். எனவே, போட்டி நிறைவில் கொழும்பு ஸாஹிரா வீரர்கள் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
அடுத்த வாரம் ஆரம்பமாகும் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு
இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிய …..
ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி
இறுதிக் காலிறுதிப் போட்டியாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் போட்டி ஏற்பாட்டாளர்கள் இலங்கை பாடசாலை ரக்பியில் முன்னிலை வகிக்கும் இசிபதன கல்லூரி கால்பந்து அணியினரை எதிர்கொண்டனர்.
போட்டி ஆரம்பித்து முதல் 3 நிமிடங்களில் ஹமீட் அல் ஹுஸைனி வீரர் ரிஷான் முதலாவது கோலைப் பெற, அடுத்த இரண்டு நிமிடங்களில் (5ஆவது நிமிடம்) அவ்வணியின் அபிஷயனும் அடுத்த கோலைப் பெற்று ஆரம்பத்திலேயே அணியை முன்னிலைப்படுத்தினர்.
எனினும், அதன் பின்னர் போட்டி நிறைவடையும்வரை எந்தவொரு வீரரும் கோல் போடாமையினால், 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற ஹமீட் அல் ஹுஸைனி அணியினரும் ஜனாதிபதி கிண்ணத்திற்கான அரையிறுதிக்குத் தெரிவாகினர்.
அரையிறுதி
தொடரின் தீர்மானம் மிக்க அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
முதல் அரையிறுதி – மாலை 2.30 மணிக்கு
கொழும்பு ஸாஹிரா கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி
இரண்டாவது அரையிறுதி – மாலை 4 மணிக்கு
ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி அணி