ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் தங்கம் வென்ற பாரமிக்கு ஜனாதிபதியால் நிதியுதவி

206
Parami Wasanthi

ஜப்பானின் கிபு நகரில் இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 3,000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெலாவுக்கு ஜனாதிபதி நிதியுதவி அளித்து கௌரவித்தார்.

அகில இலங்கை பாடசாலை அஞ்சலோட்டத்தில் பேதுரு, வலள கல்லூரிகள் சம்பியன்

கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பிரிவு மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சு..

குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, போட்டித் தூரத்தை 10 நிமிடங்களும் 21.54 செக்கன்களில் ஓடிமுடித்து தங்கப் பதக்கம் வென்றார். இது அவரது அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுதியாகவும் பதிவாகியது.

17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி, முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் (6 நிமி. 59.63செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த பாரமி வசந்தி மாரிஸ்டெலாவின் எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து 15 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பை வழங்கி வைத்தார்.

தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு வெற்றிகளை பெற்ற இந்த விளையாட்டு வீராங்கனையின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது எதிர்கால வெற்றிகளுக்காக ஆசீர்வாதங்களை வழங்கினார்.

சமிந்த வாஸின் 23 வருடகால சாதனையை முறியடித்த லஹிரு குமார

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின்…

குளியாபிட்டிய மத்திய கல்லூரியில் 11ஆவது தரத்தில் கல்வி கற்கும் 17 வயதான பாரமி, பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் தனது விளையாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் அவரது தந்தையின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் குடும்பத்தின் நலன் பேணல் நடவடிக்கைகளுக்கும் உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வருடம் ரஷ்யாவில் நடைபெற்ற ஆசிய சிறுவர் விளையாட்டுப் போட்டியில் 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2017ஆம் ஆண்டு டுபாயில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட றக்பி போட்டியில் பங்குபற்றியது உள்ளிட்ட சர்வதேச மட்டத்தில் பல்வேறு அடைவுகளை பாரமி வசந்தி மாரிஸ்டெலா நாட்டுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதுடன், தேசிய மட்டப் போட்டிகளில் புதிய சாதனைகளையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசல் முஸ்தபா மற்றும் இம் மாணவியின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<