இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் NCC கழகத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற SSC அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
NCC அணிக்காக தினேஷ் சந்திமால் சதம் பெற்று பலம் சேர்த்தபோதும் SSC அணிக்காக தனுஷ்க குணதிலக்க அபார சதம் பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் இம்முறை பருவத்தில் SSC அணி முதல் சம்பியன் பட்டத்தை வென்றது. இம்முறை உள்ளூர் முதல்தர போட்டியில் SSC அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இறுதிப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் சம்பியனானதோடு உள்ளூர் T20 தொடரில் NCC அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சச்சித்ர சேனநாயக்க தலைமையிலான SSC அணி அஞ்செலோ பெரேரா தலைமையிலான NCC அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
துடுப்பாட்டத்திற்கு சற்று கடிமான ஆடுகளத்தில் NCC அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் இருந்த நிரோஷன் திக்வெல்ல, இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுடன் இணைந்து அணியின் ஓட்டங்களை அதிகரித்தார்.
தேசிய வீரர்களைக் கொண்ட SSC, NCC இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை
இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள்…
கடந்த அரையிறுதிப் போட்டியில் அபார சதம் பெற்ற திக்வெல்ல வேகமாக 33 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் மறுமுனையில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சந்திமால் தனித்து நின்று ஆடி A நிலை போட்டிகளில் 8 ஆவது சதத்தை பெற்றார். சிறப்பாக ஆடிய அவர் 123 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 103 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் NCC அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது. இதன்போது SSC அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். திசர பெரேரா மற்றும் ஜெப்ரி வென்டர்சே தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
இந்நிலையில் வலுவான துடுப்பாட்ட வரிசையுடன் பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய SSC அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க NCC அணியின் எதிர்பார்ப்பை முழுமையாக சிதறடித்தார். குறிப்பாக ஒருமுனையில் விக்கெட்டுகள் முக்கிய தருணங்களில் பறிபோனபோது குணதிலக்க மாத்திரம் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
மறுமுனையில் ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா 12 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு முதல் வரிசையில் வந்த திமுத் கருணாரத்ன 14 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும் அடுத்து வந்த தசுன் ஷானக்க, தனுஷ்க குணதிலக்கவுடன் இணைந்து 88 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றது SSC அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. ஷானக்க 53 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த மினோத் பானுக்க மற்றும் மிலிந்த சிறிவர்தன தலா 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது SSC அணி சற்று நெருக்கடியை சந்தித்தது.
இந்நிலையில் துஷ்மந்த சமீர வீசிய 43 ஆவது ஓவரில் குணதிலக்க 122 பந்துகளில் 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு அந்த ஓவர் ஓட்டமற்ற ஓவராக மாறியது. இது போட்டியில் பரபரப்பை அதிகரித்தது.
குணதிலக்க இந்த தொடரின் அரையிறுதியில் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும் காலிறுதியில் 53 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குணதிலக்கவின் ஆட்டமிழப்பை அடுத்து வந்த திசர பெரேரா சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளை விளாசி SSC அணிக்கு இருந்த நெருக்கடியை தணித்தார். இதன் மூலம் SSC அணி 45.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
திசர பெரேரா 9 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 19 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் சரித் அசலங்க 45 பந்துகளில் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களை பெற்றார்.
NCC அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய துஷ்மந்த சமீர 10 ஓவர்களுக்கும் 41 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சச்சிந்த பீரிஸ் 2 விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக் கொண்ட ஆஸி. அணி
தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தை…
கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வரும் இம்முறை பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் ஆரம்ப சுற்றில் 23 அணிகள் பங்கேற்றபோதும் அதிக தேசிய அணி வீரர்களைக் கொண்ட SSC மற்றும் NCC அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
எனினும் ராகம கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த லஹிரு மிலந்த தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராக சாதனை படைத்தார். 6 போட்டிகளில் அவர் ஒரு சதம், 4 அரைச்சதங்களுடன் 448 ஓட்டங்களை பெற்றார். அதே போன்று தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் SSC அணித்தலைவர் சச்சித்ர சேனநாயக்க ஆவார். அவர் 8 போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
NCC – 236 (48.2) – தினேஷ் சந்திமால் 103, நிரோஷன் திக்வெல்ல 33, அஞ்செலோ பெரேரா 21, மஹேல உடவத்த 20, திசர பெரேரா 2/42, ஜெப்ரி வென்டர்சே 2/34, தம்மிக்க பிரசாத் 3/42
SSC – 239/6 (45.5) – தனுஷ்க குணதிலக்க 119, சரித் அசலங்க 27*, தசுன் ஷானக்க 26, சச்சிந்த பீரிஸ் 2/42, துஷ்மந்த சமீர 3/41
முடிவு – SSC அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி