கோமசாரு, எதிரிசிங்க பந்துவீச்சில் 49 ஓட்டங்களுக்கு சுருண்ட களுத்துறை பௌதீக கலாச்சார அணி

309
Premier Tier b.

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் B மட்டத்திலான நான்கு போட்டிகள் இன்றைய தினம் இடம்பெற்றன. இதன்போது களுத்துறை பௌதீக கலாச்சார அணி B தர லீக் போட்டிகளில் ஆகக் குறைந்த ஓட்டங்களை பெற்ற அணியாக இடம்பிடித்தது.

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல இளையோர் கழகம்

முதலாம் நாளாக ஆரம்பித்த இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லங்கன் கிரிக்கெட் கழக அணித் தலைவர் ரஜீவ வீரசிங்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதன்படி களமிறங்கிய அவ்வணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நிறைவின் போது சிறப்பான முறையில் துடுப்பாடி 89.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 422 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது.

வீசப்பட்ட முதல் ஓவரிலேயே எவ்விதமான ஓட்டங்களுமற்ற நிலையில் ஹஷான் பெரேரா ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றாலும், இரண்டாம் விக்கெட்டுக்காக தொடர்ந்து களமிறங்கிய லக்ஷான் ரொட்ரிகோ மற்றும் யஷான் சமரசிங்க இருவரும் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக 88 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டதோடு இக்கட்டான  சூழ்நிலையிலிருந்து அணியை மீட்டெடுத்தனர்.

எனினும், யஷான் சமரசிங்க 37 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சிரத் மாபடுனவின் பந்து வீச்சியில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அதே நேரம் லக்‌ஷான் ரொட்ரிகோ 91 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக மிதுன் ஜெயவிக்ரமவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக துடுப்பாடிய சானக ருவன்சிரி 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸ்சர்கள் உள்ளடங்கலாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய மிதுன் ஜெயவிக்க்ரம 103 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் சரித் பண்டார மற்றும் சிரத் மாபடுன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 422 (89.2) – சானக ருவன்சிறி 100, லக்ஷான் ரொட்ரிகோ 91, லால் குமார் 86, மதுரங்க சொய்சா 38, யஷான் சமரசிங்க 37, மிதுன் ஜெயவிக்ரம 103/3, சரித் மாபடுன 104/2, சரித் பண்டார 52/2, ஹஷான் பிரபாத் 18/1


பொலிஸ் விளையாட்டு கழகம் எதிர்  இலங்கை விமானப் படை விளையாட்டு கழகம்

B மட்டத்திலான தர வரிசையில் கடைசி இரு இடங்களை பிடித்திருக்கும் இவ்விரு அணிகளும் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாத நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் பலத்த எதிர்பார்ப்பில் களமிறங்கின.

ஹம்பந்தொட்ட, மகிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விமானப் படை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 76 ஓவர்களில் 167 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.

பொலிஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக கூடிய ஓட்டங்களாக புத்திக்க சந்தருவன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும், ரோஸ்கோ பஹட்டில் 38 ஓட்டங்களையும் பதிவு செய்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.

சிறப்பாக பந்து வீசிய மஞ்சுல ஜயவர்தன 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம் :

பொலிஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 167/9 (76) – ரோஸ்கோ பஹட்டில் 38, புத்திக சந்தருவன் 43 *, மஞ்சுல ஜயவர்தன 3/34


பாணதுறை விளையாட்டு கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

வெலிசர, கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மோதிக் கொண்ட இவ்விரு அணிகளும் போட்டி தர வரிசைப்படி முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சம பலத்துடன் இருக்கின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாணதுறை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய அவ்வணி, 54.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய சாமர சில்வா மற்றும் மிஷேன் சில்வா ஆகியோர் கூடிய ஓட்டங்களாக முறையே 72,70 ஓட்டங்களை பதிவு செய்தனர்.

கடற்படை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இஷான் அபேசேகர 78 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் டிலங்க ஆவர்ட் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன் பின்னர், முதலாம் இன்னிங்சை ஆரம்பித்த கடற்படை அணி, கயான் சிரிசோமாவின் சிறந்த பந்து வீச்சில் சிக்குண்டு, முதல் 5 விக்கெட்டுகளையும் 25 ஓட்டங்களுக்குள் இழந்து தத்தளித்தது. எனினும், அதனை தொடர்ந்து டினுஷ்க மாலன் மற்றும் சமீர சந்தமால் இணைந்து நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஆட்ட நேர முடிவு வரை ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய இவ்விருவரும் முறையே 42,33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு களத்தில் இருந்தனர். நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பாணத்துறை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்க்ஸ்): 268 (54.2) – சாமர சில்வா 72, மிஷேன் சில்வா 70, ஹசந்த பெர்னாண்டோ 29, இஷான் அபேசேகர 78/4, டிலங்க ஆவர்ட்ட் 47/3, அமித் எறந்த 62/2

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 97/5 (35) டினுஷ்க மாலன் 42*, சமீர சந்தமால் 33*, புத்திக்க ஹசரங்க 10,  கயான் சிரிசோம 35/4, சரித புத்திக்க 6/1


இலங்கை துறைமுக அதிகார சபை கழகம் எதிர் களுத்துறை பௌதீக கலாச்சார கழகம்

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய களுத்துறை பௌதீக கலாச்சார அணி, சானக கோமசாரு மற்றும் சமிக்காற எதிரிசிங்க ஆகியோரின் பந்து வீச்சில் சிக்குண்டு 22.2 ஓவர்களில் 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அத்துடன் இதுவே, இந்த லீக் போட்டிகளில், ஒரு அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து பெற்றுக்கொண்ட ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவானமை குறிப்பிடத்தக்கது.

பஹாட் பாபர் மற்றும் பத்தும் நிசங்கவை ஆகியோர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய சானக கோமசாரு 5 விக்கெட்டுகளையும் மற்றும் சமிக்காற எதிரிசிங்க 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை துறைமுக அதிகார சபை அணி, இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது, 62 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 286 ஓட்டங்களை பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ள.

சிறப்பாக துடுப்பாடிய இஷான் ரங்கன ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களுடனும், ப்ரஷான் விக்கரமசிங்க 51 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்கின்றனர் .பந்து வீச்சில் ரசிக்க பெர்னாண்டோ, தில்ஷான் மென்டிஸ் மற்றும் பஹாட் பாபர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை பௌதீக கலாச்சார அணி (முதல் இன்னிங்க்ஸ்): 49 (22.2) – பஹாட் பாபர் 14, பத்தும் நிஸ்ஸங்க 11, சானக கோமசாரு 17/5,  சமிக்காற எதிரிசிங்க 8/4

இலங்கை துறைமுக அதிகார சபை கழகம் (முதல் இன்னிங்க்ஸ்): 286/3 (62) – இஷான் ரங்கன 97*, ஹஷான் குணதிலக்க 67, ப்ரஷான் விக்கரமசிங்க 51*

points table