இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டதிலான, B பிரிவு போட்டியொன்றில் ராகம கிரிக்கெட் கழகம் மற்றும் செரசன்ஸ் விளையாட்டுக் கழகங்கள் இன்று மோதிக்கொண்டன. மூன்று நாட்கள் கொண்ட இப்போட்டி தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய செரசன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான இரோஷ் சமரசூரிய மற்றும் சங்கீத் குரே, முதல் விக்கெட்டுக்காக 49 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
எனினும், இரோஷ் சமரசூரிய 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை அமில அபொன்சோவின் பந்து வீச்சில் டி சொய்சாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து சென்றார். அதனைத் தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 122 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய கௌஷல்ய கஜசிங்க மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சங்கீத் குரே நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி தங்களிடையே 245 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டனர். 18 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 189 ஓட்டங்களைப் பெற்றிருந்த சங்கீத் குரே, திலக்ஷ சுமணசிரியின் பந்து வீச்சில் திரிமன்னவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் தர போட்டிகளில் கௌஷல்ய கஜசிங்க, தனது நான்காவது சதத்தினை பூர்த்திசெய்ய எதிர்பார்த்திருந்த நிலையில் 99 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார்.
பந்து வீச்சில் அமில அபொன்சோ மற்றும் திலக்ஷ சுமணசிரி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவின் போது 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 370 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 370/7 (90) – சங்கீத் குரே 189, கௌஷல்ய கஜசிங்க 99, இரோஷ் சமரசூரிய 28, அமில அபொன்சோ 79/3, திலக்ஷ சுமணசிரி 33/3