இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் கடைசி வாரத்தின் நான்கு சுப்பர் 8 போட்டிகளும் இன்று (15) ஆரம்பமாகின. இதில் சம்பியன் பட்டத்தை வெல்ல இம்முறை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் சிலாபம் மேரியன்ஸ் அணி மற்றும் நடப்புச் சம்பியன் SSC அணி இடையே சிறந்த போட்டி நிலவுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பமான இலங்கையின் பிரதான உள்ளூர் போட்டியான பிரீமியர் லீக் A நிலை தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்றன. இதில் இலங்கையின் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் பலம்மிக்க அணியாக தம்மை வெளிக்காட்டிய மலிந்த புஷ்பகுமார தலைமையிலான சிலாபம் மேரியன்ஸ் அணி சுப்பர் 8 சுற்றில் 100.08 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதேபோன்று அதிக தேசிய அணி வீரர்களை கொண்டிருக்கும் சச்சித்ர சேனநாயக்க தலைமையிலான SSC அணி 87.74 புள்ளிகளுடன் சுப்பர் 8 சுற்றில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் கடைசி சுப்பர் எட்டு போட்டி சம்பியன் அணியை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியுள்ளது. சிலாபம் மேரியன்ஸ் அணி இம்முறை தொடரில் ஆடிய 9 போட்டிகளில் 8இல் வெற்றிபெற்றுள்ளது. எனினும் SSC அணி இன்று ஆரம்பமான போட்டியில் உறுதியான வெற்றி ஒன்றை பதிவு செய்தால் தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
மறுபுறம் கடந்த வாரம் முடிவடைந்த பிளேட் சம்பியன்சிப் போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகம் சம்பியனானதோடு இந்த போட்டிகளில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் பிரீமியர் லீக் B நிலைக்கு தரம் குறைக்கப்பட்டது.
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமன் | புள்ளி |
சிலாபம் மேரியன்ஸ் CC | 06 | 05 | 00 | 00 | 100.08 |
SSC | 06 | 04 | 00 | 02 | 87.74 |
துறைமுக அதிகாரசபை CC | 06 | 03 | 03 | 00 | 64.98 |
BRC | 06 | 02 | 03 | 00 | 57.73 |
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் | 06 | 02 | 02 | 02 | 56.71 |
NCC | 06 | 02 | 04 | 00 | 53.14 |
ராகம கிரிக்கெட் கழகம் | 06 | 01 | 02 | 03 | 50.49 |
செரசன்ஸ் SC | 06 | 00 | 05 | 01 | 27.66 |
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC
அஷேன் சில்வா மற்றும் செஹான் ஜயசூரிய ஆரம்ப விக்கெட்டுக்கு பெற்ற இரட்டைச் சத இணைப்பாட்டம் மூலம் SSC அணிக்கு எதிராக சிலாபம் மேரியன் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுள்ளது.
கொழும்பு, CCC மைதானத்தில் ஆரம்பமான சம்பியன் அணியை தேர்வு செய்யும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற SSC அணி எதிரணியை துடுப்பெடுத்தாட பணித்தது. எனினும் அஷேன் சில்வா மற்றும் செஹான் ஜயசூரிய SSC அணியை திக்குமுக்காட செய்தனர்.
இந்த இருவரும் ஆரம்ப விக்கெட்டுக்கு 245 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் அஷேன் சில்வா 105 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் ஜயசூரிய 146 ஓட்டங்களை குவித்தார். எனினும் அடுத்து வந்த வீரர்கள் நின்றுபிடித்து ஆட தவறினர்.
இதன்மூலம் தனது முதல் இன்னிங்ஸுக்கு துடுப்பெடுத்தாடி வரும் சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 337 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 337/8 (90) – செஹான் ஜயசூரிய 146, அஷேன் சில்வா 105, சச்சித்ர சேரசிங்க 30, அக்தாப் காதர் 3/69, சச்சித்ர சேனநாயக்க 3/91
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC
NCC ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லஹிரு உதார மற்றும் பானுக்க ராஜபக்ஷ கோல்ட்ஸ் அணி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்து இரட்டைச் சத இணைப்பாட்டத்தை கடந்து களத்தில் உள்ளனர்.
காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் 127 ஓட்டங்களுக்கே சுருண்டது.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த NCC அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 251 ஓட்டங்களை பெற்றுள்ளது. லஹிரு உதார 126 ஓட்டங்களுடனும், பானுக்க ராஜபக்ஷ 121 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 127 (35.1) – நிசல தாரக்க 25, கவீஷ்க அஞ்சுல 20, லசித் அம்புல்தெனிய 5/33, லஹிரு குமார 4/26
NCC (முதல் இன்னிங்ஸ்) – 251/0 (52) – லஹிரு உதார 126, பானுக்க ராஜபக்ஷ 121
BRC எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தை 129 ஓட்டங்களுக்கு சுருட்டிய BRC அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற போராடி வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்த BRC அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஹிமேஷ் ராமநாயக்க 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ராகம கிரிக்கெட் கழகம் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது 110 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 129 (47.5) – அக்சு பெர்னாண்டோ 41, லஹிரு மிலன்த 23, ஹிமேஷ் ராமநாயக்க 5/29, சுராஜ் ரன்திவ் 2/27
BRC (முதல் இன்னிங்ஸ்) – 110/6 (40) – லசித் லக்ஷான் 35, ஹஷேன் ராமநாயக்க 20*, ஷஷின் டில்ரங்க 20, இஷான் ஜயரத்ன 3/32, நிஷான் பீரிஸ் 2/06
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்
கொழும்பு, SSC மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் இலங்கை துறைமுக அதிகாரசபை அணிக்கு எதிராக செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது 91 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. மின்ஹாஜ் ஜலீல் 119 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றார்.
போட்டியின் சுருக்கம்
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 244/6 (91) – மின்ஹாஜ் ஜலீல் 56, அண்டி சொலமன்ஸ் 48, ஹர்ஷ குரே 41, அஷேன் பண்டார 38*, கமின்து கனிஷ்க 35, தனுக்க தபரே 20, சரித் ஜயம்பதி 3/34
நான்கு போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்