இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது வார போட்டிகள் சனிக்கிழமை (25) ஆரம்பமாகின. இதில் மூன்று முக்கிய போட்டிகளின் முடிவுகள் வருமாறு.
மன்செஸ்டர் சிட்டி எதிர் வொல்வர்ஹம்டன் வொன்டரர்ஸ்
இந்த பருவத்தில் பிரீமியர் லீக் போட்டிகளை வெற்றிகளுடன் சிறப்பாக ஆரம்பித்த நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி, பீரிமியர் லீக்கிற்கு புதிதாக தகுதி உயர்வு பெற்ற வொல்வர்ஹம்டன் அணியுடனான போட்டியை வெற்றி பெற முடியாமல் 1-1 என சமநிலை செய்தது.
தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வொல்வ்ஸ் அணி பலம்மிக்க மன்செஸ்டர் சிட்டிக்கு கடும் சவாலாக இருந்தது. முதல் பாதி ஆட்டம் இரு அணிகளும் கோல் பெறாமல் முடிந்ததால் இரண்டாவது பாதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது பாதியில் வொல்வ்ஸ் அணியால் முதல் கோலை பெற்று 1-0 என முன்னிலை பெற முடிந்தது. எனினும் 57 ஆவது நிமிடத்தில் வில்லி பொலி போட்ட அந்த கோல் சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
கோனர் திசையில் இருந்து ஜோ மொடின்ஹே உதைத்த பந்தை பொலி கோல் கம்பத்திற்கு மிக அருகில் இருந்து தலையால் முட்டி கோல் பெற முயன்றார். அந்த பந்து வலைக்குள் சென்றபோதும் அது அவரது கையில் பட்டே கோலாக மாறியது வீடியே ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது.
எனினும் 69 ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டி வீரர் மைரிக் லபோர்ட் தலையால் முட்டி பதில் கோல் திருப்பினார். லபோர்டின் கோலானது பிரீமியர் லீக்கில் பிரான்ஸ் வீரர் ஒருவர் பெறும் 1,500 ஆவது கோல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு போராடின. வொல்வ்ஸ் அணிக்காக கோல் ஒன்றை பெற டியோகோ ஜோடாவுக்கு நெருங்கிய வாய்ப்பொன்று கிட்டியதோடு மறுபுறம் மன்செஸ்டர் சிட்டியின் செர்கியோ அகுவேரா மேலதிக நேரத்தில் பிரீ கிக் மூலம் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
இந்த போட்டி சமநிலையானதை அடுத்து மன்செஸ்டர் சிட்டி அணி சனிக்கிழமை போட்டிகள் முடிவில் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
ஆர்சனல் எதிர் வெஸ்ட் ஹாம்
புதிய முகாமையாளர் யுனை எமரியின் கீழ் ஆர்சனல் அணி வெஸ்ட் ஹாமுடனான போட்டியில் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டி இந்த பருவத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது.
சனிக்கிழமை இடம்பெற்ற விறுவிறுப்புக் கொண்ட போட்டியாகவே ஆர்சனல் தனது சொந்த மைதானத்தில் வெஸ்ட் ஹாம் கழகத்தை எதிர்கொண்டது. 25 ஆவது நிமிடத்தில் மார்கோ ஆர்னொடோவிக் மூலம் கோல் பெற்று வெஸ்ட் ஹாம் முன்னிலை பெற்றபோதும் அதனை தொடர்ந்து ஆட்டம் ஆர்சனல் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
ஐந்து நிமிடங்கள் கழித்து ஆர்சனல் வீரர் ஹெக்டர் பெல்லரின் உதைத்த பந்தை வெஸ்ட் ஹாம் கோல்காப்பாளர் லூகாஸ் பெபியன்ஸ்கி தட்டிவிட்டபோது அது நேராக நச்சோ மொன்ரியலின் கால்களுக்கு சென்றது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அவர் எதிரணியின் தற்காப்பு வீரர்களை கடந்து வேகமாக உதைத்து பதில் கோல் திருப்பினார்.
இந்நிலையில் வெஸ்ட் ஹாம் வீரர் இஸ்ஸா டியொப் 70 ஆவது நிமிடத்தில் கோல் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டபோது அது சொந்த வலைக்குள்ளேயே புகுந்து ஓன் கோலாக மாறியது.
இதன்மூலம் முன்னிலை பெற்ற ஆர்சனல் அணி போட்டி முடியும் தருவாயில் (90+2) டெனி வெல்பக் மூலம் மற்றொரு கோலை பெற்ற உறுதியான வெற்றி ஒன்றை பெற்றது.
ஆர்சனல் அணி இம்முறை பிரீமியர் லீக் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது. மறுபுறம் வெஸ்ட் ஹாம் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
லிவர்பூல் எதிர் பிரைட்டன் மற்றும் ஹோவ் அல்பியோன்
முஹமட் சலாஹ்வின் கோல் மூலம் பிரைட்டன் அணியை 1-0 என வெற்றி பெற்ற லிவர்பூல் அணி பிரீமியர் லீக் தொடரின் இதுவரையான மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
தனது சொந்த மைதானமான அன்பீல்ட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் லிவர்பூல் வலுவான ஆரம்பம் ஒன்றை பெற்றது. 15ஆவது நிமிடத்தில் ரொபர்டொ பிர்மினோ தலையால் முட்டிய பந்து கோலாக மாறுவதை பிரைட்டனின் அவுஸ்திரேலிய கோல்காப்பாளர் மத்தியூ ரியான் சிறப்பாக தடுத்தார்.
எனினும் சாடியோ மானே மற்றும் ஹொவ் அல்பியோன் விரைவாக கடத்தி வந்த பந்தை கீழ் இடது மூலையில் இருந்து பெற்ற முஹமட் சலாஹ் அதனை தனது இடது காலால் உதைத்து கோலாக மாற்றினார்.
இந்த கோலுக்கு பின்னர் எந்த கோலும் பெறப்படாத நிலையில் இதுவே வெற்றி கோலாகவும் மாறியது. கடந்த பிரீமியர் லீக் பருவத்தில் அதிக கோல் பெற்றவராக சாதனை படைத்த சலாஹ் இந்தப் பருவத்தில் பெறும் இரண்டாவது கோல் இதுவாகும்.
கடந்த வாரம் பிரபல மன்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த பிரைட்டன் அணிக்கு இந்த போட்டியில் அது முடியாமல் போனது.