ஓல்ட் டிரபர்ட்டில் நடைபெற்ற செல்சிக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியுடன் மன்செஸ்டர் யுனைடெட் அணி இம்முறை ப்ரீமியர் லீக் தொடரை ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் 28 ஆவது பருவம் கடந்த வெள்ளிக்கிழமை (9) ஆரம்பமான நிலையில் வார இறுதிப் போட்டியாக ஞாயிறன்று (11) செல்சி மற்றும் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான பலப்பரீட்சை நடைபெற்றது.
மார்கஸ் ரஷ்போர்ட் இரட்டை கோல்களை பெற்றதோடு, அன்தோனி மார்ஷல் நெருக்கமான தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார். பதில் வீரராக வந்த டானியல் ஜேம்ஸ் போட்டி முடிவதற்கு 9 நிமிடங்கள் மிச்சமிருக்கும்போது யுனைடெட் அணிக்காக 4 ஆவது கோலை புகுத்தினார்.
“கொம்யூனிட்டி ஷீல்ட்” கேடயம் மன்செஸ்டர் சிட்டி வசம்
லிவர்பூல் கால்பந்து அணியை பெனால்டி சூட் அவுட் முறையில் வீழ்த்திய மன்செஸ்டர்…
மறுபுறம் ஆர்சனல் அணியும் இம்முறை ப்ரீமியர் லீக் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது. செயின்ட் ஜேம்ஸ் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூகாசில் யுனைடெட் கழகத்தை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் பீர்ரி எம்ரிக் அவுபமயாங் ஆர்சனல் அணிக்காக வெற்றி கோலை புகுத்தினார்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீசஸ்டர் சிட்டி மற்றும் வொல்வர்ஹம்டன் வொண்டரர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கோலின்றி சமநிலையில் முடிந்தது.
ப்ரீமியர் லீக் தொடரை ஆரம்பித்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நோர்விச் சிட்டி அணியை லிவர்பூல் 4-1 என தோற்கடித்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மொத்தம் ஆறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் முக்கியமாக நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி அணி தனது முதல் போட்டியில் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை 5-0 என வீழ்த்தியது. ரஹீம் ஸ்டார்லிங் ஹட்ரிக் கோல் பெற்றமை குறிப்பிடத்தக்கது.