இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் நான்காவது வார போட்டிகள் சனிக்கிழமை (01) ஆரம்பமாகின. இதில் லிவர்பூல் மற்றும் செல்சி அணிகள் தொடர்ச்சியாக தமது நான்காவது வெற்றியை பெற்றுக் கொண்டதோடு, நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி தோல்வியுறாத அணியாக நீடிக்கிறது.
லிவர்பூல் எதிர் லெஸ்டர் சிட்டி
லெஸ்டர் சிட்டிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லிவர்பூல் இம்முறை பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பெற்று முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
எனினும் கிங் பவர் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அதிக விலைக்கு ஒப்பந்தமான புதிய கோல்காப்பாளர் அலிசன் செய்த மிகப்பெரிய தவறால் லிவர்பூல் அணி இந்தப் பருவத்தில் எதிரணிக்கு முதல் கோலை விட்டுக் கொடுத்தது.
போட்டி ஆரம்பத்திலேயே முஹமட் சலாஹ் லிவர்பூல் அணிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு ஒன்றை தவறவிட்டார். 4ஆவது நிமிடத்தில் வைத்து ரொபார்டோ பேர்மினோ உதைத்த பந்தை கோல்காப்பாளர் தட்டிவிட அது நேராக சலாஹ்வின் கால்களுக்கு வந்தது. எனினும் அவர் அதனை கோல் கம்பத்திற்கு வெளியே உதைத்தார்.
லிவர்பூலின் இரண்டு கோல்களும் முதல் பாதியிலேயே விழுந்தன. 10ஆவது நிமிடத்திலேயே சாடியோ மானே, அன்ட்ரூ ரொபட்ஸன் அபாரமாக பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றினார். இது இந்தப் பருவத்தில் அவர் பெறும் நான்காவது கோலாகும்.
இதனைத் தொடர்ந்து முதல் பாதி முடியும் நேரத்தில் (45′) ஜேம்ஸ் மில்னர் உதைத்த கோனர் கிக்கை தலையால் முட்டி பேர்மினோ கோலாக மாற்றினார்.
வருகை அணியான லிவர்பூல் இரண்டாவது பாதியில் சற்று தடுமாற்றம் கண்டது. 63 ஆவது நிமிடத்தில் வைத்து லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசனின் கால்களில் இருந்து பந்தை பறித்தெடுத்த லெஸ்டர்ஸின் கெலெச்சி இஹினாச்சோ அதனை கோல்கம்பத்திற்கு மிக நெருக்கமாக ரச்சிட் கெஸ்ஸலிடம் கடத்த, அவர் அதனை கோலாக மாற்றினார்.
பிரேசிலின் அலிசன் உலகின் கோல்காப்பாளர் ஒருவரின் இரண்டாவது அதிக விலையாக 72 மில்லியன் யூரோவுக்கு கடந்த ஜூலையிலேயே ரோமாவில் இருந்து லிவர்பூலுக்கு ஒப்பந்தமானமை நினைவு கூறத் தக்கது.
கடைசி நேரத்தில் லெஸ்டர் அணி மற்றொரு கோலை பெற கடுமையாக போராடியதோடு பெரும்பாலான நேரம் தனது கட்டுப்பாட்டிலேயே பந்தை வைத்துக் கொண்டிருந்தது. எனினும், தனது வெற்றியை உறுதி செய்து கொண்ட லிவர்பூல் 28 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து பிரீமியர் லீக்கின் முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்தது.
லிவர்பூல் அடுத்து, வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வெம்ப்ளே சென்று டொட்டன்ஹாமுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
செல்சி எதிர் AFC போர்ன்மௌத்
செல்சி தனது சிறந்த பிரீமியர் லீக் ஆரம்பத்தை தக்கவைத்துக் கொண்டு போர்ன்மௌத் கழகத்திற்கு எதிரான போட்டியிலும் 2-0 என வெற்றியீட்டிக் கொண்டது.
இதன்படி அடுத்தடுத்து நான்கு வெற்றிகளை பெற்றிருக்கும் செல்சி இம்முறை பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலுடன் தலா 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. லிவர்பூல் கோல் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது.
தனது சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடந்த இந்த போட்டியில் செல்சி, எதிரணியின் கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமித்தபோதும் அந்த அணியால் ஆரம்பத்தில் எந்த கோலையும் பெற முடியவில்லை. குறிப்பாக பிரேசிலின் வில்லியன் மற்றும் பெல்ஜியத்தின் நட்சத்திரம் ஈடன் ஹசார்ட் பந்தை அடிக்கடி போர்ன்மௌத் கோல் எல்லைக்குள் கொண்டு செல்வதை காண முடிந்தது.
எனினும் முதல் பாதி கோலின்றி முடிய இரண்டாவது பாதியின் முதல் 25 நிமிடங்களும் இதே இழுபறியுடன் நீடித்தது.
இந்நிலையில் ஒலிவர் கிரௌட் கடத்திய பந்தை பெற்ற பெட்ரோ 72 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்று செல்சி அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். இதனைத் தொடர்ந்து செயற்பட ஆரம்பித்த ஹசார்ட் 85 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்று செல்சி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
செல்சி கடைசியாக 2014-15 பருவத்தில், அது கிண்ணத்தை வென்ற பருவத்திலேயே தனது முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. எனினும், அந்த அணி பிரீமியர் லீக்கில் முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெறுவது இது ஆறாவது முறையாகும்.
அடுத்து செல்சி பிரீமியர் லீக்கிற்கு தகுதி உயர்வு பெற்ற கார்டிப் சிட்டியை தனது சொந்த மைதானத்தில் வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.
மன்செஸ்டர் சிட்டி எதிர் நியூகாஸில் யுனைடெட்
கைல் வோக்கர் ரொக்கெட் வேகத்தில் உதைத்த கோல் மூலம் நியூகாஸிலுக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் சிட்டி 2-1 என வெற்றியீட்டி பிரீமியர் லீக்கில் தோல்வியுறாத அணியாக நீடிக்கிறது.
இதுவரையான நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று ஒரு போட்டியை சமநிலை செய்திருக்கும் நடப்புச் சம்பியனான மன்செஸ்டர் சிட்டி முதலிரு இடங்களில் இருக்கும் தனது போட்டியாளர்களான லிவர்பூல் மற்றும் செல்சியை விடவும் இரண்டு புள்ளிகள் குறைவாக பத்து புள்ளிகளுடன் காணப்படுகிறது.
தனது சொந்த மைதானமான எடிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியின் 8ஆவது நிமிடத்திலேயே ரஹீம் ஸ்டர்லிங் மூலம் மன்செஸ்டர் சிட்டி அபார கோல் ஒன்றை புகுத்தியது. பென்ஜமின் மெண்டி பரிமாற்றிய பந்தை பெனால்டி எல்லையின் இடது புறம் இருந்து பெற்ற ஸ்டர்லிங், நியூகாஸில் பின்கள வீரர்கள் மற்றும் கோல்காப்பாளரை முறியடித்து வலைக்குள் பந்தைச் செலுத்தினார்.
எனினும் 30ஆவது நிமிடத்தில் நியூகாஸிலால் பதில் கோல் திருப்ப முடிந்தது. சொலொமொன் ரொன்டிடொன் தாழ்வாக கடத்திய பந்தை டியன்ட்ரோ யெட்லின் மின்னல் வேகத்தில் உதைத்து கோலாக மாற்றினார்.
இந்நிலையின் இரண்டாவது பாதியின் ஆரம்பதிலேயே (52′) வோக்கர் பெற்ற அதிர்ச்சி கோல் மன்செஸ்டர் சிட்டிக்கு வெற்றி தேடித் தந்தது. 30 யார்ட் தூரத்தில் வைத்து பந்தை பெற்ற அவர் வேகமாக உதைக்க அது கோல்காப்பாளரையும் மீறி கோலாக மாறியது.
வோக்கர், மன்செஸ்டர் சிட்டிக்காக பெறும் முதல் கோலாக இது இருந்தது.
நியூகாஸில் அணி இந்த பருவத்தின் பிரீமியர் லீக்கில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில் மூன்று போட்டிகளில் தோற்று ஒன்றை சமன் செய்துள்ளது.
மன்செஸ்டர் சிட்டி அடுத்து வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி புல்ஹாம் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது. அன்றைய தினம் நியூகாஸில் யுனைடெட் ஆர்சனலை எதிர்கொள்ளும்.