பிரீமியர் லீக் டிவிஷன் 1 சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது மெறகஸ்முல்ல யுனைடட்

1126
premier-league-division-1-final-report-in-tamil

டிவிஷன் 1 தர அணிகளுக்கு இடையிலான இவ்வருடத்திற்கான பிரீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் பெலிகன்ஸ் அணிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்ட மொறகஸ்முல்ல யுனைடட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

இலங்கையில் உள்ள டிவிஷன் 1 தரத்திலான 20 கழகங்களுக்கு இடையிலான இக்கிண்ணத்திற்கான போட்டிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் தொடரின் இறுதிப் போட்டி இன்று (சனிக்கிழமை) குருனாகலை மல்யதேவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

ஏற்கனவே இடம்பெற்ற குழு மட்டப் போட்டிகளில் முன்னிலை பெற்று, பின்னர் இடம்பெற்ற நொக் அவுட் சுற்றுகளிலும் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் வந்த பெலிகன்ஸ் மற்றும் மொறகஸ்முல்ல அணிகளின் இந்த இறுதிப் போட்டியை கண்டு ரசிப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் மல்யதேவ மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அனைவரும் எதிர்பார்த்தது போன்றே, இந்தப் போட்டி ஆரம்பித்தது முதல் மிகவும் விறுவிறுப்பாகவும், போராட்டம் மிக்கதாகவும் இருந்தது. அரையிறுதிப் போட்களில் இந்த இரு அணிகளும், தமது எதிர் அணியினை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டமையினால், இரு அணிகளுமே சம அளவிலான பலத்தையே கொண்டிருந்தன.

எனினும் கடந்த முறை இடம்பெற்ற சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தினை பெற்ற மொறகஸ்முல்ல யுனைடட் அணியினர் இம்முறை சம்பினாக வேண்டும் என்ற ஒரே எதிர்பார்ப்புடனேயே இந்தப் போட்டியில் விளையாடினர்.

போட்டி ஆரம்பிக்கப்பட்ட முதல் சில வினாடிகளில் பெலிகன்ஸ் அணி வீரர்கள் ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கோல்களைப் பெறுவதற்கான பல வாய்ப்புக்களை அவர்கள் பெற்றனர். எனினும் அந்த வாய்ப்புக்களால் சிறந்த பலனை அவ்வணியினரால் பெற முடியாமல் போனது.

அவ்வாறான ஒரு நிலையில், போட்டியின் 37ஆவது நிமிடத்தில் மொறகஸ்முல்ல அணி வீரர் ஹரீந்த்ர பிரியவன்ச சிறந்த முறையில் தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார். அந்த கோலுடன் உட்சாகமடைந்த மொறகஸ்முல்ல அணியினர் சிறந்த பல வாய்ப்புக்களை முதல் பாதியில் பெற்றனர். எனினும் முதல் பாதியில் இரு அணியினராலும் வேறு எந்த கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

முதல் பாதி : மொறகஸ்முல்ல யுனைடட் 01 – 00 பெலிகன்ஸ்

மொறகஸ்முல்ல அணி முன்னிலை பெற்றிருந்த நிலையில் ஆரம்பமான இரண்டாவது பாதி ரசிகர்களுக்கு மிகவும் சிறந்த விருந்தளிக்கும் விதத்தில் அமைந்தது. இதன்போது, இரு அணிகளும் தமது போராட்டங்களை அதிகமாக வெளிப்படுத்த, முதல் பாதியை விட இரண்டாவது பாதி அதிகமாக சூடு பிடித்தது.

இரண்டாவது பாதியில் மிகவும் அதிகமான கோணர் உதைகள் மற்றும் இலவச உதைகளுக்கான வாய்ப்புக்களை பெலிகன்ஸ் அணி பெற்றது. எனினும் அந்த அணியின் அனைத்து வாய்ப்புக்களையும் மொறகஸ்முல்ல அணியின் கோல் காப்பாளர் ரனிந்து ருக்ஷான் சிறந்த முறையில் தடுத்தார்.

குறிப்பாக கோல் கம்பங்களுக்கு உள்ளே செல்லவிருந்த பல பந்துகளை ருக்ஷான் மிகவும் சிறப்பாக தடுத்து பிடித்தார். முக்கியமாக போட்டியின் இரண்டாவது பாதி பொலிகன்ஸ் அணி வீரர்களுக்கும் மொறகஸ்முல்ல கோல் காப்பாளர் ருக்ஷானுக்கும் இடையிலான ஒரு போட்டியாகவே அமைந்திருந்தது.

போட்டியின் இறுதி நிமிடம் வரை இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களை தள்ளிக்கொண்டும் முட்டிக்கொண்டும் தமது அணிக்காக சிறந்த முறையில் பங்களிப்பு செய்து விளையாடினர். எனவே போட்டியின் இறுதி நிமிடம் வரை வேறு எந்த கோல்களையும் எவரும் பெறவில்லை.

இந்நிலையில், போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் மொறகஸ்முல்ல அணி வெற்றி பெற்று, இம்முறைக்கான பிரீமியர் லீக் டிவிஷன் 1 தொடரின் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

முழு நேரம் : மொறகஸ்முல்ல யுனைடட் 01 – 00 பெலிகன்ஸ்

இவ்விறுதிப் போட்டியின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர, மொறகஸ்முல்ல யுனைடட் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

Thepapare.com இன் சிறப்பாட்டக்காரர் : ரனிந்து ருக்ஷான் (மொறகஸ்முல்ல யுனைடட்)