முதல் பாதி கோல்களினால் சென் மேரிசுக்கு இரண்டாவது வெற்றி

371
Civil Security SC v St. marys SC

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்றின் குழு B இற்கான மோதலில் சிவில் பாதுகாப்பு அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய யாழ்ப்பாணம் சென். மேரிஸ் விளையாட்டுக் கழக அணி தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் யாழ்ப்பாணம் அரியாலை கால்பந்து சம்மேளன மைதானத்தில் இடம்பெற்றது.  

பலம் மிக்க சென் மேரிசை வீழ்த்தியது செரண்டிப் அணி

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரீமியர் லீக் பிரிவு ஒன்று (டிவிஷன் l)…

போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே கோலினைப் போட்டு சொந்த மண்ணில் தமது அணியினை முன்னிலைப்படுத்தினார் சென் மேரிஸ் வீரர் மரியதாஸ் நிதர்சன்.

தொடர்ந்தும் அதே வேகத்தில் அடுத்தடுத்து வாய்ப்புக்களை உருவாக்கிய போதும் சென். மேரிஸின் முன்கள வீரர்களால் அவற்றைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.

மீண்டும், போட்டியின் 16ஆவது நிமிடத்தில் மேரிஸின் மதிவதனன் வழங்கிய பந்தினை அருள்ராசா யூட் சிறப்பான முறையில் கோலாக்கினார்.

அதே வேகத்தில் விரைந்து செயற்பட்ட சிவில் பாதுகாப்பு அணியின் விக்ரமசிங்க வலது புறத்திலிருந்து கிடைத்த பந்தினை கோலை நோக்கி உதைய, அதனை கோல் காப்பாளர்
சுதர்சன் தடுத்தார். மீண்டும் அவர் மேற்கொண்டு அடுத்த முயற்சியில் விக்ரமசிங்க பந்தினை கோலாக்கினார்.

சிவில் பாதுகாப்பு அணியின் மதுசங்க அனுப்பிய பந்தினை பிரதீப் பிரியங்க கோலிற்கு வெளியே உதைந்து ஏமாற்றினார்.

தொடர்ந்து மேரிஸின் மதிவதனனின் முயற்சியினை சிவில் பாதுகாப்பு அணியின் கோல் காப்பாளர் தடுத்தார்.

ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் நிதர்சன் கோலினை நோக்கி அனுப்பிய பந்தினை பிடித்த கோல் காப்பாளர் மீண்டும் அதனை நழுவ விட முன் களத்திலிருந்த யூட் அதனை அவதானிக்கத் தவறினார். இதன்மூலம் இலகுவாக கோல் பெற இருந்த வாய்ப்பு தவறவிடப்பட்டது.

முதல் பாதி: சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் 2 – 1 சிவில் பாதுகாப்பு விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆரம்பமான முதல் நிமிடத்திலேயே விக்ரமசிங்க உள்ளனுப்பிய பந்தினை மேரிஸின் ஜேம்ஸ் அன்ரனி தடுத்தார். பின்னர் மீண்டும் மேரிசுக்கு கிடைத்த வாய்ப்பினை நிதர்சன் வெளியே உதைந்து ஏமாற்றினார்.

மூன்றரை வருடங்களின் பின் சம்பியனாகியது சென். நிக்கிலஸ்

பிரான்ஸ் தமிழ் உதைப்பந்தாட்ட சம்மேளனம் கடந்த இரு தினங்களாக…

சிவில் பாதுகாப்பு அணியின் மகேஷ் இன்திக உதைந்த பந்து மயிரிளையில் கம்பத்திற்கு மேலால் சென்றது. 54ஆவது நிமிடத்தில் விக்ரமசிங்க உள்ளனுப்பிய பந்தினை பிரான்ஸிஸ் தடுத்து திசை மாற்றினார்.

மேலும் 6 நிமிடங்கள் கடந்த நிலையில் ஜெக்சன் வழங்கிய பந்தினை கோலாக்காது வீணடித்தார் மேரிஸின் இளம் வீரர் அன்டனி ரெக்னோ.

நிதர்சன் தனக்கு கிடைத்த பந்தினை நேரடியாக சிவில் பாதுகாப்பு அணியின் கோல் காப்பாளரின் கைகளுக்குள் உதைந்தார். அதனைத் தொடர்ந்து சக வீரர் ஜெக்சன் வலது கரையிலிருந்து கோலினை நோக்கி அனுப்பிய பந்து மயிரிளையில் கோலைவிட்டு வெளியேறியது.

சென் மேரிஸின் ஜூட் வழங்கிய பந்தினை மதி உதைய அதனை சிவில் பாதுகாப்பு அணியின் கோல் காப்பாளர் லாவகமாகத் தடுத்தார்.

மேரிஸ் முன்கள வீரர்களின் முயற்சிகளுக்கு எதிரணியின் மதுசங்கவும், கோல் காப்பாளரும் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டனர்.

சிவில் பாதுகாப்பு அணியின் தமித் உதைந்த ப்ரீ கிக்கினை சுரங்க ஹெடர் மூலம் கோலுக்குள் அனுப்ப, சென் மேரிஸ் அணிக்கு மாற்று கோல் காப்பாளராக வந்த சிந்துஜன் அதனை சிறப்பாக தட்டிவிட்டார்.

தொடர்ந்தும் தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை மேரிஸின் முன்கள வீரர்களால் சாதகமாக நிறைவு செய்ய முடியாது போனது.

ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் சுமண ஹெட்டியாராச்சி ஹெடர் மூலம் அனுப்பிய பந்தினையும் சிந்துஜன் சேகரித்தார்.

இறுதி நிமிடத்தில் அடுத்தடுத்து நிதர்சனிற்குக் கிடைத்த வாய்ப்புக்களை அவரால் வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடியாது போனது.

நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16) புதுப்பிக்கப்பட்ட FIFA உலக..

இரு அணி வீரர்களும் தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை தொடர்ச்சியாக விணடிக்க கோல் ஏதுமின்றி இரண்டாவது பாதி நிறைவிற்கு வந்தது. எனவே ஆட்டத்தின் நிறைவில், தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது யாழ்ப்பாணம் சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்.  

முழு நேரம்: சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் 2 – 1 சிவில் பாதுகாப்பு விளையாட்டுக் கழகம்

போட்டியின் முடிவில் சிவில் பாதுகாப்பு அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் பிரியங்க பீரிஸ் Thepapare.comஇற்கு கருத்து தெரிவிக்கையில் எங்களுடைய இரண்டு வீரர்கள் உபாதைக்குள்ளாகி இருக்கின்றனர். அதனைச் சாதகமாக்கி எதிரணி போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு கோல்கள் பெற்றனர். இருந்தபோதும் நாங்கள் சிறப்பாக விளையாடியிருந்தோம், அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். அடுத்து வரும் போட்டிகளை வெற்றி கொள்வதே எமது இலக்குஎன்றார்.

இன்றைய போட்டியில் அதிக கோல்களைப் பெற்று கோல் வித்தியாச முறைமையில் முன்னிலை பெறுவததே எமது நோக்காக இருந்தது. அதற்கான வாய்ப்புக்களும் கிடைத்தன. இருந்தபோதும் எமது வீரர்கள் சிறப்பான முறையில் நிறைவு செய்யவில்லை. நாங்கள் கணித்திருந்ததை விடவும் சிவில் பாதுகாப்பு அணியினர் சிறப்பாக விளையாடினர். அடுத்துவரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்என்றார் சென் மேரிஸின் பயிற்றுவிப்பாளர் சுரேந்திரன்.  

கோல் பெற்றவர்கள்

சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் – மரியதாஸ் நிதர்சன் 1′, அருள்ராசா யூட் 16′

சிவில் பாதுகாப்பு விளையாட்டுக் கழகம் – விக்ரமசிங்க 18′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<