இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் நான்காவது வாரத்தின் முக்கிய மூன்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றன. ஆர்சனல் மற்றும் மன்செஸ்டர் யுனைடெட் அணிகள் தீர்க்கமான வெற்றிகளை பெற்றுக்கொண்டதோடு, டொட்டன்ஹாமுக்கு அதிர்ச்சி கொடுத்த வட்போர்ட் தொடர்ச்சியாக தனது நான்காவது வெற்றியை பதிவு செய்து கொண்டது.
அடுத்த வாரம் இங்கிலாந்து சர்வதேச நட்புறவு போட்டிகள் இருப்பதால் மீண்டும் செப்டெம்பர் 15ஆம் திகதியே 5ஆவது வாரத்திற்கான பிரீமியர் லீக் போட்டிகள் ஆரம்பமாகும் நிலையில் ஒரு இடைவேளைக்கு முன்னைய வாரப் போட்டிகளாக கடந்த வாரஇறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.
ஆர்சனல் எதிர் கார்டிப் சிட்டி
சௌத் வேல்ஸில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் கார்டிப் சிட்டி இம்முறை பிரீமியர் லீக் பருவத்தில் தனது முதல் கோல்களை புகுத்தியபோதும் அலெக்சாண்ட்ரே லாகாசெட் கடைசி நிமிடங்களில் பெற்ற அபார கோல் மூலம் ஆர்சனல் அணி 3-2 என வென்று புள்ளிகளை தட்டிச் சென்றது.
லிவர்பூல், செல்சி அணிகளுக்கு அடுத்தடுத்து நான்காவது வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் நான்காவது வார…
இந்த வெற்றியுடன் ஆர்சனல் இதுவரை நான்கு போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் மொத்தம் 6 புள்ளிகளோடு பிரீமியர் லீக் பருவத்தில் 9ஆவது இடத்தில் உள்ளது. கார்டிப் சிட்டி தனது நான்கு போட்டிகளிலும் இதுவரை ஒரு வெற்றியையும் சுவைக்கவில்லை.
போட்டி ஆரம்பித்து 8ஆவது நிமிடத்திலேயே ஆர்சனல் கோல்காப்பாளர் பிட்ர் செக் செய்த தவறால் கார்டிப் சிட்டிக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அவர் கோல்கம்பத்தில் இருந்து சக வீரருக்கு பந்தை பரிமாற்றியபோது அது நேராக கார்டிப் வீரர் ஹர்ரியார்டன் கால்களுக்கு சென்றது. எந்த நெருக்கடியும் இன்றி வலைக்குள் புகுத்த அவகாசம் இருந்தபோதும் அவர் பந்தை வெளியே பறக்கவிட்டார்.
இந்நிலையில் ஆர்சனல் அணியால் கோல் பெறும் இரண்டு வாய்ப்புகள் தவறிப்போயின. கடைசியில் 11ஆவது நிமிடத்தில் கோணர் திசையில் இருந்து வந்த பந்தை தலையால் முட்டி ஆர்சனல் அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார் ஷ்கொட்ரான் முதபி.
முதல்பாதி ஆட்டம் முடியும் நேரத்தில் விக்டர் கமராசா பதில் கோல் திருப்ப அரங்கில் இருந்த கார்டிப் சிட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாவது பாதியிலும் இதே பரபரப்பு நீடித்தது. 62ஆவது நிமிடத்தில் மெசுட் ஓசில் மற்றும் லகசட் இணைந்து எதிரணி கோல்கம்பத்திற்கு அருகில் பந்தை கடத்திச் செல்ல, பிர்ரே-எமரிக் ஒபமேயங்கிடம் கொடுக்க அவர் 20 யார்ட் தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் புகுத்தினார்.
மன்செஸ்டர் யுனைடெட்டை சந்திக்கும் ரொனால்டோ
சம்பியன்ஸ் லீக் குழுநிலை அணிகளின் விபரம் இம்முறை…
எனினும், கார்டிப் வீரர்கள் மீண்டும் பதிலடி கொடுத்தனர். 70ஆவது நிமிடத்தில் செக் உயரப் பரிமாற்றிய பந்தை டன்னி வாரட் தலையால் முட்டி கோலாக்கினார்.
விறுவிறுப்பு நீடித்த இந்தப் போட்டியில் 81ஆவது நிமிடத்தில் சோல் பம்பா போதிய இடைவெளி கொடுக்க கோல் கம்பத்தின் மேல் மூலையில் இருந்து லாகாசெட் பந்தை வலைக்குள் செலுத்தி ஆர்சனல் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மன்செஸ்டர் யுனைடெட் எதிர் பர்ன்லி
தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த மன்செஸ்டர் யுனைடெட் ரொமேலு லுகாகுவின் இரட்டை கோல் மூலம் பர்ன்லி கழகத்திற்கு எதிரான போட்டியில் 2-0 என வெற்றி கொண்டது.
எதிரணியின் டர்ப் மூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் போல் பொக்பா பொனால்டி வாய்ப்பொன்றை தவறவிட்டதோடு மார்கஸ் ரஷ்போர்ட் சிவப்பு அட்டை பெற்று வெளியேறிய நிலையில் மன்செஸ்டர் யுனைடெட் பக்கம் தொடர்ந்து பரபரப்பாகவே இருந்தது.
தனது முந்தைய இரண்டு போட்டிகளிலும் பிரைட்டன் மற்றும் டொட்டன்ஹாம் அணிகளிடம் தோல்வியுற்ற நிலையிலேயே மன்செஸ்டர் யுனைடெட் இந்தப் போட்டியில் களமிறங்கியது.
27ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் நட்சத்திரமான லுகாகு, அலெக்சிஸ் சன்சேஸ் கடத்திய பந்தை இலகுவாக தலையால் முட்டி கோல் பெற்றார். எதிரணியிடம் இருந்து போதிய நெருக்கடி இல்லாத நிலையில் 44ஆவது நிமிடத்தில் லுகாகு தனது இரண்டாவது கோலையும் பெற்றார். பர்னில் பின்கள வீரர்கள் இருவரை மீறி பட்டு வந்த பந்தை ஜேஸ் லிங்கார்ட் வலைக்கு மிக நெருக்கமாக லுகாகுவிடம் செலுத்த அந்த வாய்ப்பை கொண்டு அவர் கோல் புகுத்தினார்.
இரண்டாம் வார வெற்றியையும் பதிவு செய்த பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகள்
லா லிகா கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இரண்டாம்…
யுனைடெட்டுக்கு எதிராக 2017 ஓகஸ்டில் தனது முதல் போட்டியில் ஆடியபோது இரட்டை கோல் பெற்ற பின் பிரீமியர் லீக்கில் அவர் பெறும் முதல் இரட்டை கோல் இதுவாகும்.
இரண்டாவது பாதியின் நடுப்பகுதியில் பெனால்டி எல்லைக்குள் வைத்து அரோன் லெனொன் யுனைடெட் வீரர் ரஷ்போர்டை கீழே வீழ்த்தியதால் பெனால்டி வாய்ப்பு கிட்டியபோது பொக்பா உதைத்த அந்த உதையை முன்னாள் மன்செஸ்டர் சிட்டி கோல் காப்பாளரான ஜோ ஹார்ட் தடுத்தார்.
இரண்டு நிமிடங்களின் பின் (71′) பர்ன்லி பின்கள வீரர் பிலிப் பார்ட்ஸ்லேவை தலையால் முட்டி கீழே வீழ்த்திய ரஷ்போர்ட் வெளியெற்றப்பட்டதால் யுனைடெட் அணி 10 வீரர்களுக்கு குறைந்தது.
இந்த வெற்றியோடு யுனைடெட் 6 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
வட்போர்ட் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்
டொட்டன்ஹாம் அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றி ஒன்றை பெற்ற வட்போர்ட் கழகம் இம்முறை பிரீமியர் லீக் பருவத்தில் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ளது.
விக்கராஜ் ரோட் அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தனது முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டிய நிலையிலேயே களமிறங்கின.
முதல் பாதி ஆட்டத்தில் எந்த கோலும் விழாத நிலையில் 53ஆவது நிமிடத்தில் அப்துலாய் டௌகோர் பெற்ற ஓன் கோல் டொட்டன்ஹாமை முன்னிலை பெறச் செய்தது. பந்தை நெஞ்சால் தட்டி வெளியே தள்ள முயன்றபோதே அது சொந்த வலைக்குள் புகுந்தது.
எனினும் 69ஆவது நிமிடத்தில் வட்போர்ட் சிறப்பாக பதிலடி கொடுத்தது. ஜோஸ் ஹெல்பாஸ் அடித்த ப்ரீ கிக்கை பயன்படுத்தி ட்ரோய் டீனி தலையால் முட்டி அந்த கோலை பெற்றார். தொடர்ந்து போட்டியின் இறுதி விசில் ஊதுவதற்கு 14 நிமிடங்கள் இருக்கும்போது கிரேக் கேத்கார்ட் மீண்டும் ஒருமுறை தலையால் முட்டி வட்போர்ட் அணிக்கு வெற்றி கோலை பெற்றார்.
இந்த வெற்றியுடன் வட்போர்ட் தனது முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று பலம்கொண்ட லிவர்பூல் மற்றும் செல்சியுடன் அதிகபட்சம் 12 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. வட்போர்ட் பிரீமியர் லீக்கின் முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெறுவது கடந்த 30 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.
1987 ஆம் ஆண்டுக்குப் பின் டொட்டன்ஹாமுக்கு எதிராக வட்போர்டின் முதலாவது லீக் வெற்றி இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<