மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

2237

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்காக 21 வீரர்கள் அடங்கிய உத்தேச இலங்கை குழாம் தேசிய அணியின் தேர்வாளர்களால் இன்று (8) வெளியிடப்பட்டிருக்கின்றது.

உபாதைக்கு உள்ளாகியுள்ள திமுத் கருணாரத்ன

இலங்கை கிரிக்கெட்…

கடந்த பத்து வருடங்களில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இந்த டெஸ்ட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் உத்தேச இலங்கைக் குழாமானது நாளை ஞாயிற்றுக்கிழமை (9) தொடக்கம் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில், பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

பயிசிகளின் பின்னர் இந்த உத்தேச குழாத்திலிருந்து தெரிவு செய்யப்படும் இறுதி இலங்கை அணி இந்த மாதம் 25ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் பயணமாகின்றது. இலங்கை அணி அங்கு சென்ற பின்னர், ஜூன் மாதம் 6 ஆம் திகதி போர்ட் ஒப் ஸ்பெய்ன் நகரில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடன் மோதுகின்றது.

இதனையடுத்து ஜூன் 14ஆம் திகதி பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருக்கின்ற இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இரண்டு அணிகளும் சென். லூசியா பயணமாகின்றன. தொடர்ந்து, ஜூன் 23ஆம் திகதி பார்படோஸ் நகரில் ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டியுடன் இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைவதுடன், இலங்கை அணி நாடு திரும்புகின்றது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச டெஸ்ட் குழாமில் இருந்து விரல் உபாதையின் காரணமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன வெளியேறியிருக்கின்றார். இந்த தொடரின் போது, திமுத் கருணாரத்னவின் இடத்தினை நிரப்ப அனுபவமிக்க இடதுகை துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்த அழைக்கப்பட்டிருக்கின்றார்.

முன்வரிசை துடுப்பாட்ட வீரரான மஹேல உடவத்த இலங்கை அணிக்காக 2008ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அறிமுகமாயிருந்த போதிலும், இதுவரையில் டெஸ்ட் போட்டிகள் எதிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 31 வயதாகும் உடவத்த, அண்மையில் முடிவடைந்த மாகாண முதல்தர கிரிக்கெட் தொடரில் 56.60 என்கிற  சராசரியுடன் மொத்தமாக 283 ஓட்டடங்களினை குவித்திருந்தார். இதுதவிர, தற்போது நடைபெற்று வரும் மாகாண ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆடி 188 ஓட்டங்களினை சேர்த்திருக்கின்றார். இப்படியான சிறப்பான பதிவுகளே அவரை இலங்கையின் உத்தேச குழாத்தில் இணைக்க முதன்மை காரணங்களாக அமைகின்றன.

அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சாளர்களான கசுன் ராஜித மற்றும் நிசல தாரக்க ஆகியோரும் இலங்கை அணியின் உத்தேச டெஸ்ட் குழாத்தில் பெயரிடப்பட்டிருக்கின்றனர். மஹேல உடவத்த போன்று இவர்களும் மாகாண முதல்தர கிரிக்கெட் தொடரில் சிறப்பான பதிவினைக் காட்டியிருந்ததே தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட காரணமாக அமைகின்றது.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கு எப்படியான இலங்கை அணி வரும்?

கடந்த பெப்ரவரி மாதம் பங்களாதேஷ் அணியுடனான தொடரின் போது காயத்துக்கு உள்ளாகியிருந்த இளம் வேகப்புயலான ஷெஹான் மதுசங்க காயத்தில் இருந்து பூரண சுகத்தினைப் பெற்றிருப்பதனால் இந்த உத்தேச குழாத்தில் இணைக்கபட்டிருகின்றார். மதுசங்க தற்போது நடைபெற்று வருகின்ற மாகாண ஒரு நாள் தொடரில் தம்புள்ளை அணிக்காக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த உத்தேச குழாத்தில் இலங்கையின் துடுப்பாட்டத்தினை மேலும் பலப்படுத்த அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவும், அதிரடி சகலதுறை ஆட்டக்காரரான தசுன் சானக்கவும் அடக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள், மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும் இறுதி இலங்கை அணியினை இம்மாதம் 17 ஆம் திகதி வெளியிட தீர்மானம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனன்ஞய டி சில்வா, ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, மஹேல உடவத்த, தசுன் சானக்க, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, ஜெப்ரி வன்டர்செய், அகில தனன்ஞய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு கமகே, லஹிரு குமார, ஷெஹான் மதுசங்க, கசுன் ராஜித, அசித்த பெர்னாந்து, நிசல தாரக்க   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க