இலங்கை வளர்ந்துவரும் குழாத்தில் யாழ் வீரர் விதுசன்

Sri Lanka Emerging Team tour of England 2022

851

கமிந்து மெண்டிஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணியின் உத்தேச குழாத்தில் முவர்ஸ் கழகத்துக்கான விளையாடி திறமைகளை வெளிப்படுத்திய யாழ். வீரர் தீஷன் விதுசன் முதல் தடவையாக இடம்பிடித்துள்ளார்.

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதலாம் திகதி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 32 பேர் கொண்ட இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் உத்தேசக் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

அதேபோல, அண்மையில் நிறைவடைந்த தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் வளர்ந்துவரும் கழக அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்குவதற்கு தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கண்டி அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ், இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். 23 வயதான அவர், தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மாறியதுடன், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

அதேபோல, குறித்த தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய லசித் குரூஸ்புள்ளே, கமில் மிஷார, நிபுன் தனன்ஞய, நுவனிந்து பெர்னாண்டோ, அஷேன் பண்டார, தனன்ய லக்ஷான், அஷைன் டேனியல், துனித் வெல்லாலகே, நிபுன் மாலிங்க, லக்ஷித மானசிங்க, மற்றும் சுமிந்த லக்ஷான் போன்ற வீரர்களும் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல, இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வளர்ந்துவரும் கழக அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் முவர்ஸ் கழகத்துக்காக விளையாடி பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய 20 வயதுடைய இளம் சுழல்பந்து வீச்சாளரான யாழ். வீரர் தீஷன் விதுசனும், இலங்கை வளர்ந்துவரும் உத்தேச அணியில் இடம்பிடித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் வீரரான தீஷன் விதுசன், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கடற்படை கழகத்துக்கு எதிரான போட்டியில் மூவர்ஸ் அணிக்காக அறிமுகமாகியிருந்தார். முதல் போட்டியிலேயே அபாரமாக பந்துவீசிய அவர் முதல் இன்னிங்ஸில் 34 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

தான் அறிமுகமாகிய முதல் போட்டியிலேயே அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீஷன் விதுசன், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் மூவர்ஸ் அணியும் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இதனையடுத்து நடைபெற்ற 5 போட்டிகளில் முவர்ஸ் கழகத்துக்கான விதுசன் விளையாடியிருந்ததுடன், லங்கன் கழகத்துடனான போட்டியில் 6 விக்கெட்டுகளையும், செபஸ்டியன் கழகத்துடனான போட்டியில் 9 விக்கெட்டுகளையும், கொழும்பு கழகத்துடனான போட்டியில் 5 விக்கெட்டுகளையும், இலங்கை விமானப்படை அணிக்கெதிரான போட்டியில் ஒரு விக்கெட்டினையும், எஸ்எஸ்சி கழகத்துடனான போட்டியில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பந்துவீச்சில் மிரட்டியிருந்தார்.

எனவே, இம்முறை வளர்ந்துவரும் கழக அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் 12 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒட்டுமொத்தமாக 38 விக்கெட்டுகளை வீழ்த்திய விதுசன், தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு தொடர்ச்சியாக பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய தீஷன் விதுசனை இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யவுள்ள இலங்கை வளர்ந்துவரும் உத்தேச குழாத்தில் இணைத்துக்கொள்ள தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கை அணி நாட்டிலிருந்து புறப்பட்டுச்செல்ல முன் 32 பேர் கொண்ட அணி 18 ஆக குறைக்கப்படவுள்ள நிலையில், விதுசனுக்கும் இறுதி 18 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை, இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளரான ருவன் கல்பகே, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வளர்ந்துவரும் உத்தேசக் குழாம்

கமிந்து மெண்டிஸ், லசித் குரூஸ்புள்ளே, நிஷான் மதுஷ்க, ஜொஹான் டி சில்வா, கமில் மிஷார, நிபுன் தனன்ஞ்சய, நுவனிந்து பெர்னாண்டோ, அஷேன் பண்டார, அவிஷ்க தரிந்து, தினுக தில்ஷான், அவிஷ்க பெரேரா, துனித் வெல்லாலகே, தனன்ஞய லக்ஷான், கவிஷ்க அன்ஜுல, சந்தூஷ் குணதிலக்க, கலன பெரேரா, அம்ஷி டி சில்வா, நிபுன் மலிங்க, உதித் மதுஷன், யசிரு ரொட்ரிகோ, டில்ஷான் மதுஷங்க, திலும் சுதீர, அஷைன் டேனியல், லக்ஷித மானசிங்க, கௌமால் நாணயக்கார, சுமிந்த லக்ஷான், மானெல்கர் டி சில்வா, மொவின் சுபசிங்க, நிபுன் ரன்சிக, கவிக டில்ஷான், தீஷன் விதுசன் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<