இந்தியாவின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான ப்ரவீன் தாம்பேவை பயிற்சியாளராக தமது அணியில் இணைத்துக் கொள்வதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழாத்தில் அவர் இடம்பெறவுள்ளார்.
>> IPL கிரிக்கெட்டில் களமிறங்கும் முதல் அமெரிக்க வீரர்
ஐ.பி.எல் தொடரில் மிக அதிக வயதில் விளையாடிய வீரராக சாதனை படைத்த ப்ரவீன் தாம்பே, 2013ஆம் ஆண்டு 41 வயதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் அறிமுகமானார். அதன்பின் 2016 வரை ஐ.பி.எல் தொடரில் விளையாடி வந்தார். கடைசியாக குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
அதன்பிறகு ஐ.பி.எல் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், மாநில அணியில் இடம்பெற்று உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில், 2020 ஐ.பி.எல் ஏலத்தில் 48 வயதான அவரது பெயரும் இடம்பெற்றது.
அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரது அடிப்படை விலையான 20 இலட்சம் ரூபாய்க்கு வாங்கியது. எனினும், அவர் 2018ஆம் ஆண்டு அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடியதால் ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாது என பிசிசிஐ அறிவித்தது.
பிசிசிஐ விதிப்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவிக்காமல் வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் விளையாட முடியாது. அவர்கள் ஐ.பி.எல் தொடரிலும் சேர்த்து ஓய்வு அறிவித்தால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். எனவே ப்ரவீன் தாம்பே ஓய்வை அறிவிக்காமல் வெளிநாட்டு லீக் தொடரில் பங்கேற்றார்.
>> நான்காவது முறையாக CPL தொடரின் சம்பியனான ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ்
இதையடுத்து ஐ.பி.எல் ஏலத்தில் கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், அவருக்கு பிசிசிஐ தடைவிதித்தது. அவரது நிலையை உணர்ந்து அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்த கொல்கத்தா அணி உரிமையாளர்கள், அவரை கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்களால் நடத்தப்படும் கரீபியன் ப்ரீமியர் லீக் அணியான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் அவரை தேர்வு செய்தனர். இந்த சீசனில் ப்ரவின் தாம்பே மூன்று போட்டிகளில் விளையாடினார்.
மூன்று போட்டிகளில் 3 விக்கெட்கள் வீழ்த்திய அவர், களத்தடுப்பிலும் அசத்தியிருந்தார். எனவே, அவரது நேர்மறையான அணுகுமுறை இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதை கருத்தில் கொண்டு அவரை ஐ.பி.எல் தொடரிலும் இடம்பெறச் செய்வதற்கு கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு செய்தது.
>> விராட் கோஹ்லியை ரசிகர்களிடம் பகிரங்கமாக புகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித்
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் ப்ரவீன் தாம்பே இடம் பிடிப்பார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிறைவேற்று அதிகாரி வெங்கி மைசூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே, அவரை வீரராக சேர்க்க முடியாத நிலையில், அவரை பயிற்சியாளர் குழாத்தில் உதவியாளராக இணைத்துக் கொண்டுள்ளது. இதனால் அவர் இளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகள் கூறுவார் என அந்த அணி தெரிவித்துள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<