இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக முதல் தடவையாக இடம்பிடித்து தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தைப் பெற்று பந்துவீச்சில் மிரள வைத்த 22 வயதுடைய சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரமவைப் பற்றித் தான் இன்று முழு கிரிக்கெட் உலகமும் பேசிக் கொண்டிருக்கின்றது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் திங்கட்கிழமை (03) நிறைவடைந்த இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
ப்ரவீனின் வரலாற்று சாதனையுடன் தொடரை வென்றது இலங்கை
இந்தப் போட்டியில் டெஸ்ட் வரத்தைப் பெற்று, சுழல் பந்தில் பங்களாதேஷ் வீரர்களை அதிரவைத்த பிரவீன் ஜயவிக்ரம, 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பல உலக சாதனைகளை முறியடித்து போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அதுமாத்திரமின்றி, இலங்கையின் 40 வருடகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பல முக்கிய மைல்கல்லையும் எட்டி சாதனை நாயகனாக வரலாற்றில் இடம்பிடித்தார்.
ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை டெஸ்ட் அணியில் அண்மைக்காலமாக இடம்பிடித்து விளையாடி வருகின்ற லசித் எம்புல்தெனிய மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் உபாதைக்குள்ளாகினார்.
இதனையடுத்து பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு 22 வயதுடைய இளம் வீரரான பிரவீன் ஜயவிக்ரமவுக்குக் கிட்டியது.
எனவே, தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பையே உறுதியாகப் பிடித்துக்கொண்ட பிரவீன், பல முக்கிய சாதனைகளை முறியடித்து இலங்கை அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.
Video – துன்பங்களை கடந்து சாதித்த பெதும் நிஸ்ஸங்கவின் வாழ்க்கை கதை!
எனவே, யார் இந்த பிரவீன் ஜயவிக்ரம? இவரது பின்னணி என்ன? இவரது வாழ்க்கைப் பயணம் பற்றிய ஒரு பார்வையை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பாடசாலை கிரிக்கெட் பயணம்
களுத்துறை திருச்சிலுவைக் கல்லூரியில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த பிரவீன் ஜயவிக்ரம, தனது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னர் மொறட்டுவை சென். செபஸ்டியன்ஸ் கல்லூரியில் இணைந்து பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தினார்.
இதில் 19 வயதுக்குட்பட்ட இரண்டு நாட்கள் கொண்ட போட்டிகளில் 60இல் விளையாடி 247 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அவர், அதே பிரிவுக்கான ஒருநாள் போட்டிகள் 8இல் விளையாடிய 15 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதனால், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பிரவீன் ஜயவிக்ரமவுக்கு கிடைத்தது.
வேகப் பந்துவீச்சாளராக பிரவீன்
ஆரம்பகாலத்தில் பிரவீன் ஜயவிக்ரம ஒரு வேகப் பந்துவீச்சாளராக இருந்து பிற்காலத்தில் அவரது பயிற்சியாளர் நிமல் தாபரேவின் ஆலோசனைப்படி சுழல் பந்துவீச்சாளராக மாறியுள்ளார். அதிக உயரம் கொண்ட வீரராகக் காணப்பட்டதால் பிரவீன் உள்ளிட்ட 5 வீரர்களை 13 வயதுக்குட்பட்ட அணியில் இணைத்துக்கொள்ள அவரது பயிற்சியாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறிப்பாக, 15 வயது முதல் பிரவீனின் திறமை அதிகரிக்கத் தொடங்கியதால் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் கிட்டியது.
கன்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த ப்ரவீன் ஜயவிக்ரம
குறிப்பாக, பாடசாலைக் காலத்தில் 5ஆம் இலக்க வீரராகவும், களத்தடுப்பு, பந்துவீச்சு என பிரகாசித்து ஒரு சகலதுறை வீரராக பிரவீன் ஜயவிக்ரம தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார்.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி
பாடசாலை கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய திறமை காரணமாக பிரவீன் ஜயவிக்ரமவுக்கு இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் வாய்ப்பு கிடைத்தது.
இதில் மூன்று நாட்கள் கொண்ட 3 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுக்களையும், 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுக்களயும் கைப்பற்றியுள்ள அவர், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக நான்கு நாட்கள் கொண்ட போட்டியொன்றிலும் விளையாடியுள்ளார்.
அத்துடன், இலங்கை சார்பாக இரண்டு ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரராகவும் இடம்பிடித்தார்.
அதேபோல, இலங்கை வளர்ந்துவரும் அணிக்காகவும் பிரவீன் ஜயவிக்ரம விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கழகமட்ட கிரிக்கெட் பயணம்
பாடசாலை மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்திய பிரவீன் ஜயவிக்ரம, 2019இல் SSC கழகத்துடன் முதல்தடவையாக இணைந்துகொண்டார். அதன்பிறகு கோல்ட்ஸ் கிரிக்கெட் மற்றும் முவர்ஸ் கிரிக்கெட் கழகங்களுடன் அவர் இணைந்துகொண்டார்.
Video – டெஸ்ட் கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பும் Lahiru Thirimanne…!
இதில் SSC கழகத்தின் 23 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய போது இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட கழகங்ளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்டு அதிசிறந்த பந்துவீச்சாளருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.
இந்த நிலையில், தற்போது முவர்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்ற பிரவீன் ஜயவிக்ரம, அந்த அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதில் இறுதியாக நடைபெற்ற முதல்தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களில் ஒருவராகவும் அவர் இடம்பிடித்தார்.
இதுஇவ்வாறிருக்க, இதுவரை 10 முதல்தர ஒருநாள் போட்டிகளில் 40 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள அவர், 9 மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளில் 17 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
எனவே மிகவும் குறுகிய காலப்பகுதியில் கழகமட்டப் போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய பிரவீன் ஜயவிக்ரமவுக்கு இலங்கை தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
156ஆவது டெஸ்ட் வீரர்
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானது. துடுப்பாட்ட வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய குறித்த போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
Video – DIMUTH இன் இரட்டைச் சதத்தால் முறியடிக்கப்பட்ட சாதனைகள்..!
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகியது. இதில் அனுபவ வீரர் லஹிரு திரிமான்னவிடமிருந்து இளம் சுழல் பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம இலங்கை அணியின் டெஸ்ட் தொப்பியைப் பெற்றுக்கொண்டு அறிமுக வீரராகக் களமிறங்கினார்.
களுத்துறை திருச்சிலுவைக் கல்லூரியில் கல்வி கற்ற ஒரு வீரர் இலங்கை தேசிய அணியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக, 1990 காலப்பகுதியில் ஜயன்த சில்வா இலங்கை அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டு 7 டெஸ்ட் மற்றும் ஒற்றை ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தமை சிறப்பம்சமாகும்.
பிரவீனின் சாதனைத் துளிகள்
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 493 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்த, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு இலங்கை சுழல் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். குறிப்பாக, புதுமுக வீரர் பிரவீன் ஜயவிக்ரம, தமிம் இக்பாலை 92 ஓட்டங்களுடனும், முஷ்பிகுர் ரஹீமை 40 ஓட்டங்களுடனும் வெளியேற்றினார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் திசர பெரேரா
இறுதியில் இலங்கை அணியின் அறிமுக பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம தன்னுடைய கன்னி 5 விக்கெட் பிரதியைப் பதிவுசெய்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் பிரதியை எடுத்த 6வது இலங்கை பந்துவீச்சாளராகவும், அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களை எடுத்த 2ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறிருக்க, இரண்டாவது இன்னிங்ஸிலும் பந்துவீச்சில் அசத்திய பிரவீன் ஜயவிக்ரம 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பிரவீன் ஜயவிக்ரம போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றதுடன், பல முக்கிய சாதனைகளையும் முறியடித்தார்.
அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ஒருவர் பதிவு செய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகவும் (178 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்கள்) இது இடம்பிடித்தது.
முன்னதாக 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் உபுல் சந்தன, 179 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்ததே இதுவரை காலமும் சாதனையாக இருந்தது.
எனவே, சுமார் 22 வருடங்களுக்குப் பிறகு அந்த சாதனையை இளம் வீரர் பிரவீன் ஜயவிக்ரம முறியடித்தார்.
அதேநேரம், தன்னுடைய கன்னி டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரவீன் ஜயவிக்ரம, அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் குவியலைக் கைப்பற்றிய முதல் இலங்கை வீரர், இரண்டாவது இடதுகை சுழல் பந்துவீச்சாளர் மற்றும் உலகின் 16ஆவது வீரர் என்ற பெருமைைகளைப் பெற்றுக்கொண்டார்.
“பல்லேகலை ஆடுகளம் சராசரிக்கும் குறைவானது” ; ஐசிசி அறிவிப்பு
இதற்குமுன் இந்தியாவின் நரேந்திர ஹிரவானி (1988), பாகிஸ்தானின் மொஹமட் சாஹிட் (1996) மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜேசன் க்ரீஜா (2008) ஆகியோர் அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் பிரதியை கைப்பற்றி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, 71 வருடங்களுக்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அல்பிரெட் வெலண்டைன் நிகழ்த்திய மற்றுமொரு சாதனையையும் பிரவீன் ஜயவிக்ரம முறியடித்தார்.
1950ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அல்பிரெட் வெலண்டைன் 204 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அறிமுக டெஸ்ட் போட்டியில் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஒருவரின் அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியாக இது இடம்பிடித்தது.
எனவே, அந்த சாதனையை சுமார் 71 வருடங்களுக்குப் பிறகு பிரவீன் ஜயவிக்ரம (178 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்கள்) முறியடித்மை குறிப்பிடத்தக்கது.
பிரவீனின் எதிர்காலம் எப்படி?
தனது தந்தையின் வழிகாட்டலின் கீழ் சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி தனக்கு கிடைத்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே சாதனை படைத்தது மாத்திரமல்லாது, தான் ஒரு சிறந்த சுழல்பந்துவீச்சாளர் என்பதை முத்திரையும் பதித்துக்காட்டினார்.
Photos: Bangladesh tour of Sri Lanka 2021 | 2nd Test – Day 4
எனவே, முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பிறகு ரங்கன ஹேரத் மாத்திரம் தான் இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சுப் பிரிவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வந்தார்.
ஆனால், ஹேரத்தின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை டெஸ்ட் அணியில் நிரந்தர சுழல் பந்துவீச்சாளர் ஒருவரை கண்டுபிடிப்பதில் தடுமாற்றம் காணப்பட்டு வருகின்றது.
எனினும், லசித் எம்புல்தெனிய, ரமேஷ் மெண்டிஸ் உள்ளிட்ட இளம் சுழல் பந்துவீச்சாளர்களின் வரிசையில் தற்போது பிரவீன் ஜயவிக்ரமவும் இணைந்துகொண்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்ற பிரவீன் ஜயவிக்ரமவுக்கு எதிர்காலத்திலும் இன்னும் பல வாய்ப்புகளை தேர்வாளர்கள் கொடுத்தால் மாத்திரமே முரளிதரன், ஹேரத் போன்ற திறமையான ஒரு சுழல் பந்துவீச்சாளரை எம்மால் உருவாக்க முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…