இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
சுகயீனத்துக்கான அறிகுறியிப்பதாக அணி முகாமைத்துவத்திடம் பிரவீன் ஜயவிக்ரம அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று (04) காலை மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
>> LPL தொடரின் வீரர்கள் வரைவுக்கான திகதி அறிவிப்பு!
தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து உடனடியாக பிரவீன் ஜயவிக்ரம அணிக்குழாத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எதிர்வரும் 5 நாட்களுக்கு இவர் தனிமைப்படுத்தலில் இருந்து சிகிச்சைகளை பெற்றுக்கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரவீன் ஜயவிக்ரமவுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அணி வீரர்கள் மற்றும் உதவி உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை அணியை பொருத்தவரை ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் போது அஞ்செலோ மெதிவ்ஸ் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்தார். எனினும், தற்போது இவர் குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமான அறிவிப்புகளை வெளியிடவில்லை.
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<