இந்தியாவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹர் கிண்ண டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் 400 ஓட்டங்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை 18 வயது கர்நாடக வீரர் பிரகார் சதுர்வேதி படைத்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹர் கிண்ண டெஸ்ட் (Cooch Behar Trophy) தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடகா மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸுக்காக ஆடிய மும்பை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 380 ஓட்டங்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸுக்காக ஆடிய கர்நாடகா அணி 223 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 890 ஓட்டங்களைக் குவித்தது. இதில் ஆரம்ப வீரரான பிரகார் சதுர்வேதி 638 பந்துகளில் 46 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 404 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தப்போட்டி சமநிலையில் முடிந்தது.
இதன்மூலம் கூச் பெஹர் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் 400 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக, கூச் பெஹர் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் அடித்த ஓட்டங்கள்தான் தனிநபர் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.
- இந்திய டெஸ்ட் குழாத்துடன் இணையும் வேகப்பந்துவீச்சாளர்
- பங்களாதேஷ் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி
1999ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங், பீகார் அணிக்கெதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களை குவித்ததுதான் இதுவரை காலம் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிரகார் சதுர்வேதி முறியடித்துள்ளார்.
ஆனாலும் பிரகார் சதுர்வேதியின் இந்த 404 ஓட்டங்கள் ஒட்டுமொத்த பட்டியலில் 2ஆம் இடத்தையே பிடித்துள்ளது. காரணம் 2011-12ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடிய விஜய் ஜோல், அசாம் அணிக்கு எதிராக 451 ஓட்டங்கள் குவித்ததுதான் இன்று வரை சாதனையாக நீடித்து வருகிறது.
கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட 18 வயதுடைய பிரகார் சதுர்வேதி, 2 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு கர்நாடகா மாநில 19 வயதின் கீழ் அணியில் இடம் பிடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.ஆனால், அவருக்கு இந்திய 19 வயதின் கீழ் உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சதுர்வேதியின் தந்தை பெங்களூருவில் மென்பொருள் பொறியியலாளர், தாய் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் விஞ்ஞானியாக பணிபுரிகின்றார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<