முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்தார் இந்திய சுழல் பந்துவீச்சாளர்

173
drcricket7.com

இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான பிரகயன் ஓஜா தனது 33 ஆவது வயதில் சர்வதேச மற்றும் உள்ளூர் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் உடன் அமுலுக்குவரும் வகையில் ஓய்வு பெறுவதாக இன்று (21) அறிவித்துள்ளார். 

1986 செப்டம்பர் 5 ஆம் திகதி இந்தியாவின் ஒரிஸா பிரதேசத்தில் பிறந்த பிரகயன் ஓஜா தனது சிறு வயதிலிருந்து கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு காட்டியதுடன், சுழல் பந்துவீச்சு துறையில் அதிக கவனம் செலுத்தினார். இதன் மூலம் தான் ஒரு சுழல் பந்துவீச்சாளராக கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் முறையாக முதல்தர போட்டியொன்றில் அறிமுகம் பெற்றுக்கொண்டார். 

நீண்டகால இடைவெளிக்கு பின்னர் இருதரப்பு தொடரொன்றில் மோதவுள்ள இலங்கை – மேற்கிந்திய தீவுகள்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள்…

அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு A தர போட்டிகளிலும், அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகம் பெற்றுக்கொண்டார். இவ்வாறு மூவகையான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அறிமுகம் பெற்று பிரகயன் ஓஜா ஒரு சிறந்த சுழல் பந்துவீச்சாளராக வலம்வந்தார். 

இவ்வாறு உள்ளூர் போட்டிகளில் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக வலம்வந்த பிரகயன் ஓஜாவுக்கு தனது 21 ஆவது வயதில் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டியொன்றில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஓஜா முதல் முறையாக சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார். 

அதனை தொடர்ந்து 2009 ஜூன் மாதம் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டி20 போட்டியில் முதல் முறையாக டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். இப்போட்டியில் 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது கன்னி போட்டியிலேயே போட்டி ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.

டி20 சர்வதேச அறிமுகத்தின் பின்னர் 2009 நவம்பரில் கான்பூரில் இலங்கை அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்றுக்கொண்டார். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பெரிதாக பிரகாசிக்க தவறிய பிரகயன் ஓஜா குறிப்பிட்டளவு போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். 

வெறும் 6 டி20 சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடிய பிரகயன் ஓஜா 10 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இறுதியாக 2010 ஜூன் மாதம் ஹராரேயில் ஜிம்பாப்வே அணியுடன் டி20 சர்வதேச போட்டியில் விளையாடியதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதேவேளை 2012 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் இலங்கை அணியுடன் விளையாடிய ஒருநாள் சர்வதேச போட்டியே பிரகயன் ஓஜாவின் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியாக அமைந்தது. 2012 வரையில் 18 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்த ஓஜா 21 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். 

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பிரகாசிக்க தவறியிருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது சுழலின் மூலம் குறைந்த போட்டிகளில் விளையாடி 100 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். கடந்த 2013 நவம்பரில் இந்திய கிரிக்கெட் அணியின் லிட்டில் மாஸ்டர் என அழைக்கப்படும் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார். 

குறித்த போட்டியே பிரகயன் ஓஜாவுக்கும் இறுதி டெஸ்ட் போட்டியாக அமைந்திருக்கின்றமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றிருந்தது. அப்போட்டியில் இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றியில் பந்துவீச்சில் முக்கிய பங்குவகித்த பிரகயன் ஓஜா முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சுகளில் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். 

சங்கக்காரவின் அரைச்சதத்தோடு மெரில்போன் கிரிக்கெட் கழகம் வெற்றி

பாகிஸ்தான் லாஹூர் நகரில்…

தற்போது அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ள பிரகயன் ஓஜா 2009 தொடக்கம் 2013 வரையான 4 ஆண்டு காலப்பகுதியில் இந்திய அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 ஐந்து விக்கெட்டுகள், 1 பத்து விக்கெட்டுகளுடன் மொத்தமாக 113 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 

இதேவேளை 2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணியில் இந்தியன் ப்ரிமியர் லீக் (ஐ.பி.எல்) அறிமுகம் பெற்றுக்கொண்ட பிரகயன் ஓஜா இறுதியாக 2015 ஆம் ஆண்டு வரையில் விளையாடியுள்ளார். 7 வருட ஐ.பி.எல் வாழ்க்கையில் டெக்கான் சார்ஜஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக 92 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். 

இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரில் ஒரு பருவகாலத்தில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவருக்காக வழங்கப்படும் விருதான ஊதா நிற தொப்பியை கடந்த 2010 ஐ.பி.எல் தொடரில் பிரகயன் ஓஜா தன்வசப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடாத பிரகயன் ஓஜா இறுதியாக 2018 நவம்பரில் பீகார் அணியில் முதல்தர போட்டியொன்றில் விளையாடியிருந்தார். இந்நிலையிலேயே இன்று (21) தனது முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்துள்ளார். 

2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில்…

தனது ஓய்வு தொடர்பாக டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் உடன் அமுலுக்குவரும் வகையில் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI) கடிதம் மூலம் அறிவித்துள்ளேன். ஒரு இந்தியனாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. இளம் வயதிலேயே அது நிறைவேறியது. அதனை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது.

மேலும், நான் கிரிக்கெட் விளையாடிய காலப்பகுதியில் எனது சக வீரர்களிடம் அதிகமான மரியாதையையும், அன்பையும் பெற்றுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<